/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
எலுமிச்சையில் பூக்கள் பூக்கும் தருணம்
/
எலுமிச்சையில் பூக்கள் பூக்கும் தருணம்
PUBLISHED ON : ஆக 07, 2024

கோடை காலத்தில் எலுமிச்சையில் பிஞ்சுகள் உற்பத்தி சற்று குறைந்து காணப்படும். ஆனால் சந்தையில் அதிக தேவையும் விலையும் இருக்கும். பொதுவாக ஆண்டுக்கு இருமுறை பூக்குமாறு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும்.
பூக்கள் பூக்க செய்ய மரங்களுக்கு 30 முதல் 40 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். குறிப்பாக டிசம்பர், ஜனவரியில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி பின் வறட்சியை போக்க நீர் பாய்ச்சினால் மரங்கள் பூக்கத் துவங்கும்.
இம்முறையை பின்பற்றும் போது கவனம் தேவை. அதிக காலம் நீர் பாய்ச்சாமல் விட்டாலோ அல்லது முறையாக செய்யாவிட்டாலோ மரங்கள் பாதிக்கப்படும் அல்லது மிக அதிக அளவில் பூக்கள் தோன்றி பழங்கள் மிகவும் சிறுத்துக் காணப்படும்.
பிஞ்சுகள் மற்றும் பழங்கள் உதிர்வது சிக்கலான விஷயம். சரியான அளவில் மண்ணின் ஈரத்தை பராமரிக்கா விட்டாலும் இக்குறைபாடு ஏற்படும். இதனை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி பிளானோபிக்ஸ், 2 - 5 மில்லி ஒட்டும் திரவம் கலந்து காலை, மாலையில் கைத்தெளிப்பானால் இலைவழி தெளிக்கவேண்டும். ஒட்டும் திரவத்திற்கு பதிலாக சிறிய பாக்கெட்டில் உள்ள ஷாம்பூவை சேர்த்து கலக்கலாம்.
அல்லது 2, 4 - டி என்னும் பயிர் ஊக்கியை 0.1 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து (நுாறு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் பயிர் ஊக்கி) மிளகு அளவில் பிஞ்சுகள் இருக்கும் பருவத்தில் தெளிக்கவேண்டும். இந்த பயிர் ஊக்கி தண்ணீரில் கரையாது என்பதால் சிறிதளவு எத்தனாலில் கரைத்து பின் 100 லிட்டர் தண்ணீரில் சேர்க்கவேண்டும்.
மாங்கனீஸ் சத்து குறைவினால் மரங்களின் இளம் தளிர்கள் மற்றும் இலைகளில் நரம்புகளுக்கிடையே பச்சையம் குறையும். நாளடைவில் நரம்புகள் நீங்கலாக அனைத்துப் பகுதியிலும் பச்சையம் மறைந்து மஞ்சளாகி விடும். துத்தநாகத்தால் ஏற்படும் குறைபாடுகளும் இதேபோல ஒத்திருந்தாலும் இவைகளின் இலைகள் மிகவும் சிறுத்துவிடும்.
எனவே ஒளிச்சேர்க்கை செயல்பாடு பாதிக்கப்படுவதால் விளைச்சல் மிகவும் குறையும். இதைத் தவிர்ப்பதற்கு 75 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 5 கிலோ தொழுஉரத்தை மண்ணில் இட வேண்டும். மேலும் 50 கிராம் துத்தநாக சல்பேட், 50 கிராம் மாங்கனீஸ் சல்பேட், 10 கிராம் யூரியா மூன்றையும் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலை வழி கைத்தெளிப்பானால் 20 நாட்களுக்கு ஒரு முறை வீதம் இரண்டுதரம் தெளிக்க வேண்டும்.
இதன் மூலம் நுண்ணுாட்ட குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு விளைச்சல் அதிகரித்து தரமும் மேம்படும்.
சில இடங்களில் இரும்புச் சத்து பற்றாக்குறையும் காணப்படலாம். இலைகளில் பச்சையம் நரம்புகளுக்கிடையே மறைந்து அனைத்து பகுதிகளும் மஞ்சள் அல்லது வெண்மையாகி விடும்.
இதற்கு இரும்பு சல்பேட் 0.5 சதவீதம் தெளிக்கவேண்டும். இலையில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் அவற்றை கவனித்து சத்துப் பற்றாக்குறையின் காரணம் அறிந்து சரியான உரமிட்டு பராமரிக்க வேண்டும்.
அமுதா, பேராசிரியை
விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை,
வேளாண்கல்லூரி, மதுரை