/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கவர்ச்சி பயிர்களின் 'க ல ர் மே ஜி க் '
/
கவர்ச்சி பயிர்களின் 'க ல ர் மே ஜி க் '
PUBLISHED ON : ஆக 06, 2025

இ யற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம் மகசூல் அதிகரிக்கிறது. இயற்கை வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் மூலம் செலவு குறைகிறது. அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மண்ணின் இயற்பியல், உயிரியல் காரணிகள் பாதுகாக்கப்படுகிறது. களைச்செடிகளின் எண்ணிக்கை கட்டுபடுத்தப்படும். ஊடுபயிர் மூலம் ஒரே பயிரை வளர்க்காமல் பல்வேறு பயிர்கள் பயிரிடு வதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
கவர்ச்சி பயிர்கள் ஊடுபயிர்கள் கவர்ச்சி பயிர்களாகவும் பயன்படுகின்றன. இவை பூச்சிகளைக் கவர்ந்து முக்கிய பயிர்களை பூச்சித் தாக்குதலில் இருந்து காக்கின்றன. காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தி பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கின்றன. அதனால் மண்ணின் வளம் மேம்படுகிறது.
நெல்லுக்கு பயறு நெல் வயல் மட்டத்தில் இருந்து வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினி பூச்சிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.
நிலக்கடலைக்கு ஆமணக்கு நிலக்கடலை வயல் ஓரத்தில் ஆமணக்கு செடிகளை 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்தால் புரோடினியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைக்கலாம். இதன் மூலம் நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன், அந்துபூச்சியின் சேதத்தை கட்டுப்படுத்தலாம். 10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிர் சாகுபடி செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம். சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயறு பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
துவரைக்கு சோளம் துவரை, பாசிப்பயறுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தத்துப்பூச்சி, காய்ப்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம்.
பருத்தியின் ஓரங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதால் ஊன் விழுங்கிகள் அதிகமாக உற்பத்தி ஆகும். இந்த ஊன் விழுங்கிகள் பருத்தி பயிர்களுக்கு வரும் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அந்துபூச்சிகளை பருத்தி செடிக்குப் பரவுவதை தடுத்து சேதத்தை கட்டுப்படுத்தும். பருத்தியுடன் சூரியகாந்தியை 2:2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பச்சைத் தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது.
பருத்தி அருகே பருத்தி குடும்பத்தை சேர்ந்த வெண்டை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். பருத்தியில் பச்சைப் பயறு, உளுந்து, சோயாமொச்சை, ஆமணக்கு பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சி களின் பெருக்கத்தை குறைத்து சேதத்தைத் தவிர்க்கலாம்.
சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்தால் சோளத்தண்டு புழுவின் சேதத்தை கட்டுப்படுத்தலாம். நிலக்கடலையுடன் கம்புபயிரை 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தை குறைக்கலாம்.
கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுபடுத்தலாம். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுபடுத்த முடியும். மேலும் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தலாம்.
-அருண்ராஜ் தொழில்நுட்ப வல்லுநர் மண்ணியல் துறை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி அலைபேசி: 90423 87853