PUBLISHED ON : மே 30, 2018

கறவை மாடுகள் கன்று ஈன்றதும் கிடைக்கும் முதல் பால், சீம்பால் என்பது அறிந்ததே. சாதாரண பாலில் இருந்து சீம்பால் பெருவாரியாக வேறுபடுகிறது. அல்புமின், குளோபுலின் ஆகிய புரதச்சத்துக்கள், சாம்பல் சத்து மற்றும் குளோரைடும் சீம்பாலில் அதிகம் உள்ளது.
லாக்டோஸ் எனும் சர்க்கரைச்சத்து குறைந்த அளவில் உள்ளது.
சீம்பாலுக்கும், பாலுக்கும் வேறுபடுத்திக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது குளோபுலின் புரதமாகும். இது கூடுதலாக இருப்பதால் தான் சீம்பால் காய்ச்சியவுடன் கட்டியாக மாறுகிறது. பாலை விட சீம்பாலில் இரும்புச்சத்து 17 மடங்கு வரை அதிகம் உள்ளது.
இரும்புச்சத்தும், குளோபுலின் புரதச்சத்தும் புதிதாக பிறந்த கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி திறனை வழங்குகின்றன. சீம்பாலில் சாதாரண பாலில் இருப்பதை விட எட்டு மடங்கு வைட்டமின் 'ஏ' இருக்கிறது.
இந்த வைட்டமின் சத்தும் நோய் எதிர்ப்பு திறனில் பங்காற்றுகிறது. கன்று பிறந்த சில மணி நேரங்களுக்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும். சீம்பால் குடலில் உள்ள கழிவுப்
பொருட்களை அகற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகிறது. சீம்பால் குறைந்தது நான்கு நாட்களுக்காவது கன்றுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். சில நேரம் கன்று ஈன்ற பசுவிடம் இருந்து கிடைக்கா விட்டால் மற்ற கறவை மாடுகளில் இருந்து கிடைக்கும் சீம்பாலை கன்றுக்கு கொடுக்கலாம்.
சில சமயங்களில் சீம்பால் கிடைக்கா விட்டால் மாற்று சீம்பால் தயாரித்து கன்றுகளுக்கு தரலாம்.
மாற்று சீம்பாலுக்கான பொருட்கள்: முட்டை ஒன்று (60 கிராம் எடை கொண்டது), தண்ணீர் 300 மி.லி., விளக்கெண்ணெய் அரை ஸ்பூன், பால் 500 மி.லி., ஆகியவற்றை ஒன்றாக கலந்து தினமும் காலை, மாலை கன்றுக்கு புகுட்ட வேண்டும். கிராமங்களில், சீம்பால் குடிக்காத கன்றுக்கு கழிச்சல் நோய் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த எண்ணத்தை அறவே அகற்ற வேண்டும். இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதத்தினை கன்றுகளுக்கு நாம் மறுக்கும் போது எதிர்காலத்தில் நல்லதொரு காளைகளை, கறவைகளை இழக்க நேரிடும். எனவே சீம்பால் கொடுப்போம்; சீராக கன்று வளர்ப்போம்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

