PUBLISHED ON : மே 30, 2018

கடலையில் இருக்கு... கடலளவு லாபம்... எனும் தலைப்பில் கடந்த வார விவசாய மலரில் கட்டுரை வெளியானது. அதன் தொடர்ச்சியாக கடலையை தாக்கும் நோய்கள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம். கடலையை தாக்கும் இலை சுருள் பூச்சி, அசுவினி, திரிப்ஸ், தத்துப்பூச்சி, வேர்ப்புழு, காய் துளைப்பான் ஆகிய பூச்சிகளின் தாக்குதலால் இலைப்புள்ளி நோய், அழுகல் நோய், நச்சுயிரி நோய்கள் ஏற்படுகிறது.
இலை சுருள் பூச்சி
இந்நோய் வறட்சியான காலங்களில் மகவும் அதிகமாக தாக்குகிறது. இப்புழுக்கள் இலையின் திசுக்களிடையே சென்று பச்சையத்தை சுரண்டி தின்னும். சேதம் அதிகமாக இருந்தால் தீயினால் எரிக்கப்பட்டது போல் பயிர்கள் காட்சி அளிக்கும். விளக்கு கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 எண்ணிக்கை வீதம் வைத்து, அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். டைமீத்தோயேட் 30 இ.சி. - 264 மில்லி ஏக்கருக்கு பயன்படுத்தி அழிக்கலாம். மீத்தைல் திமத்தான் - 25 சதவிகிதம் இ.சி. - 400 மில்லி ஏக்கருக்கு பயன் படுத்தலாம்.
காய் துளைப்பான்
இளம் காய்களை புழு துளைத்து உட்சென்று உண்கிறது. தாக்கப்பட்டதால் பருப்பு இருக்காது. விதைத்த 40 வது நாளில் கார்போபியுரான் ஏக்கருக்கு 3 சதவிகிதம் சி.ஜி. - 20 கிலோ அல்லது மாலத்தியான் 5 டி 10 கிலோ இட்டு கட்டுப்படுத்தலாம்.
இலைப்புள்ளி நோய்
இலையில் கருப்பு நிற புள்ளிகள் அடிப்பாகத்தில் தோன்றிய பின் இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து புள்ளிகள் பெரிதாகி காய்ந்து, கருகி பின் உதிர்ந்து விடும். கம்பு, மக்காச்சோளம், எள் ஊடுபயிராக பயிரிட்டு தடுக்கலாம். கார்பன்டாசிம் 100 கிராம் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
துரு நோய்
கொப்பளங்கள் முதலில் இலையின் அடிப்பாகத்தில் தோன்றி, பின் மேல்பாகத்தில் பரவி, பூக்கள் மற்றும் காய்களில் காணப்படுகிறது. செடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடாமல் ஒட்டி கொண்டிருக்கும். டைத்தேன் விதை நேர்த்தி செய்தும், டைத்தேன் 250 கிராம் - 80 நாள் வரை தொடர்ந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தண்டு அழுகல் நோய்
தண்டில் கருப்பு நிறத் திட்டுகள் உண்டாகி, அழுகி பின் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகும். விதை நேர்த்தி, ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் பயன்படுத்தியும், அதிக எரு இட்டு ஆழ் உழவு செய்து, கழிவுகளை அகற்றியும் நோயை கட்டுப்படுத்தலாம்.
- தானம் அறக்கட்டளை, மதுரை.

