/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வனம் செழிக்க வழிவகுக்கும் வன விலங்கு
/
வனம் செழிக்க வழிவகுக்கும் வன விலங்கு
PUBLISHED ON : மே 30, 2018

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பல விவசாயிகள் வன விலங்குகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு விலங்குகள் காரணமல்ல. நாம் தான் காரணம். காடு செழிப்பாக இருந்தால் தான் மழை பெய்யும். காடு செழிக்க விலங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வன விலங்குகள் பெருகினால் மட்டுமே மழைக்கு சாத்தியம்.
இது அறியாமல் விலங்குகளை வேட்டையாடுவது, கொன்று குவிப்பது வழக்கமாகி வருவது வேதனையளிக்கிறது. வன விலங்குகளில் யானை, காட்டு பன்றிகள், குரங்குகள் மற்றும் பறவைகளில் மயில்கள் தீவனத்துக்காக பயிர்களை மேய்வதால் விவசாயிகளுக்கு கடும் பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது. வன விலங்குகள் தமது தோட்டத்திற்குள் நுழைந்து விடக்கூடாது, என்பதற்காக விவசாயிகள் பலரும் தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி வைத்தும், ஆட்களை தங்க வைத்தும் ஒலிகளை எழுப்பி யானைகள், காட்டு பன்றிகள், மயில்களை விரட்டுகின்றனர். வன விலங்குகளின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து கொண்டால் எளிதில் சேதம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
விலங்குகளுடன் யுத்தம்
பொதுவாக காட்டுக்குள் உணவுக்கும், நீருக்கும் அலைந்து திரிந்து, அவை கிடைக்காத வன விலங்குகளே அருகில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு படையெடுப்பது வழக்கம். போதிய மழை இல்லாத போது கானகத்தில் சரிவர உணவு கிட்டாது. நீரும் இராது. மலைக்கு ஐந்து கிலோ மீட்டர் பரப்புக்குள் உணவு பயிர்கள் குறிப்பாக காட்டுப் பன்றிகள் தோண்டி தின்ன விரும்பும் கிழங்கு பயிர்கள் பயிரிட்ட இடங்களை தேடி விலங்குகள் வரும்.
சோளம் மற்றும் மா சாகுபடி செய்திட்ட பகுதிகளில் மான்கள், யானைகள், காட்டுப்பன்றிகளுடன் சேர்ந்து சேதம் செய்யும் வாய்ப்புள்ளது. உணவு பயிர்களில் மக்காச்சோளம், கரும்பு, பழ வகை மரங்கள் இருக்கும் போது விரும்பி உண்ண சில இடங்களில் தங்கி இருந்து நன்கு சாப்பிட்டு விட்டு மெதுவாக விலங்குகள் வெளியேறும்.
பொதுவாக இரவு நேரங்களில் வனத்தில் விலங்குகளின் நடமாட்டத்தை எளிதில் அறியலாம். எங்கேனும் விலங்குகளை கண்டால் உடனே ஊரே திரண்டு அவற்றை பிடிக்கவோ, விரட்டவோ முயலக்கூடாது. அதுனுடன் நேரடி யுத்தம் நிகழ்த்தக்கூடாது. இதனால் உயிர் பலி ஏற்படும் வாய்ப்புள்ளது.
இயற்கையே பாதுகாப்பு
பெரிய அளவில் சேதம் நேராது தடுத்திட முன் தேர்வு உத்திகள் பல உள்ளன. பொதுவாக விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் யாவரும் அறிந்த ஒன்று தான். அப்பகுதிகளில் விலங்குகளுக்கு பிடித்த விருப்ப உணவுகளை பயிரிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வனப்பகுதிகளில் நீர் சேமிப்பு குட்டைகள் கட்டி இருந்த இடங்களில் நீர் சேமிப்பை வேறு வழிகளில் செய்திட முயற்சிக்க வேண்டும். விலங்குகளின் முக்கிய குணம், மனிதனை போல் வேலிகளில் திட்டமிட்டு ஏறி தாண்டாதவை. எனவே உயிர் வேலிகளை நிரந்தர புதர்களாகப் பராமரித்து மூங்கில் படல்கள் நெருக்கி வைத்து கட்டுவது எளிதில் சேதத்தை தவிர்க்க உதவும். சீமை இலந்தை, கல்பாண முருங்கை, கிளுவை முதலிய தாவரங்கள் கலந்த முள் இல்லாத மூங்கில், நாவல், சில்வர்ஓக், புளி முதலிய மரக்கன்றுகளை கலந்துநட்டு தாவர வேலி அல்லது 'பயோ பென்சிங்' எனும் நீடித்த பாதுகாப்புக்கு இன்றே திட்டமிடவும்.
யானை வந்தால் ஒதுங்கு
நிறைய நபர்கள் நடமாட்டம் உள்ள போதும் மிருக சேதம் குறைய வாய்ப்பு இருந்த போதிலும், ஒத்தையாக வந்த யானை அல்லது தனதுகுட்டியுடன் வந்த தாய் யானை இவற்றை கண்டால் தெறித்து ஓடி பாதுகாப்பான இடத்துக்கு அனைவரும் செல்ல வேண்டும். பொதுவாக யானைக்கு புகை நாற்றம், மூக்குப்பொடி வாசனை, அழுகிய முட்டை வாசனை ஒத்துக் கொள்ளாது. தீப்பந்தம் கொளுத்துவது தீய விளைவை தரும்.
பூச்சி விரட்டி தயார் செய்து துர்நாற்றம் வீசச் செய்து யானையை வரவிடாது தடுக்கலாம்.
காட்டுப்பன்றிகள் உண்ணாத காய்கறி பயிர் சாகுபடி செய்வதும் வேலி பகுதிகளில் பழைய சேலைகளை காய வைப்பது போல் கட்டி அதில் பன்றியின் எச்சத்தை கரைத்து தெளிப்பதோ அல்லது அழுகிய முட்டை கரைசல் தெளிப்பதோ மிருகங்களை துார விரட்டும் உத்தியாகும். உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் இருந்தால் அது சொந்த காசில் சூன்யம் வைப்பது போலாகிவிடும். தொடர்புக்கு 98420 07125.
- டாக்டர் பா.இளங்கோவன்,
வேளாண் துணை இயக்குனர், தேனி.

