PUBLISHED ON : ஆக 28, 2024

சிறுதானிய பயிர்களில் முக்கியமானது கம்பு பயிர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கிழக்காசிய நாடுகளில் அதிகம் விளைகிறது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கம்பில் 38 சதவீதம் இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், தமிழகம், ஆந்திராவில் பரவலாக மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
எந்த வகை மண் ஏற்றது
கம்பு எல்லா வகை மண்ணிலும் வளரும். சராசரி மழையளவு 400 முதல் 750 மி.மீ., போதுமானது. இது அதிக வெப்பத்தை தாங்கி வளரக் கூடியது. மிதமான மழையளவு மற்றும் அதிக வெப்பநிலை உள்ள பகுதிகளில் செழித்து வளரும். அமிலத்தன்மை உள்ள நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. சரியான ரகத்தை பயிரிடாமலும், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உத்திகளை கையாளாமலும் இருப்பதே மகசூல் குறைவிற்கு காரணம்.
சிறந்த ரகம் கோ எச் 10
தமிழ்நாடு வேளாண் பல்கலை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது கோ எச் 10 வீரிய ஒட்டுரக கம்பு. இதன் வயது 85 முதல் 90 நாட்கள். இறவை சாகுபடிக்கு ஆடி மற்றும் சித்திரையில் விதைத்தால் ஒரு எக்டேருக்கு 3020 கிலோ மகசூல் கிடைக்கும். மானாவாரியில் புரட்டாசி பட்டத்தில் விதைத்தால் எக்டேருக்கு 2050 கிலோ கிடைக்கும்.
கதிர்களின் சிறப்புகள்
இவை நீண்ட கதிர்களையும் திரட்சியான மணிகளையும் உடையது. தண்டு துளைப்பான், தேன் ஒழுகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை உடையது. அதிக புரதத்சத்து (15.6 சதவீதம்), மிதமான இரும்பு, மற்றும் துத்தநாக சத்து உள்ளது.
நிலத்தை தயாரிக்க வேண்டும்
இரும்பு கலப்பையால் இரு முறை, நாட்டுக்கலப்பையால் இரு முறை நன்றாக உழ வேண்டும். மேலும் மண்ணை கட்டிகளின்றி உடைக்க வேண்டும். கடைசி உழவிற்கு முன் 12.5 டன் தொழுஉரம் அல்லது மட்கிய நார் உரம் இடவேண்டும். நாட்டுக்கலப்பையால் உரங்களை மண்ணுடன் கலந்து விட வேண்டும். ஒரு எக்டேர் நிலத்திற்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா, 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுஉரத்துடன் கலந்து இட வேண்டும்.
விதைகளை கடினப்படுத்த வேண்டும்
ஒரு கிலோ உப்பை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து விதைகளை அமிழ்த்த வேண்டும். தரமற்ற, நோய் தாக்குதலுக்குள்ளான விதைகள் மிதக்கும். அவற்றை நீக்க வேண்டும். அடியில் தங்கிய விதைகளை நல்ல தண்ணீரில் 3 முறை கழுவி நிழலில் உலர்த்த வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை 600 கிராம் அசோஸ்பைரில்லம் (3 பாக்கெட்), 600 கிராம் பாஸ்போ பாக்டீரியாவுடன் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். மானாவாரி சாகுபடிக்கு விதையைக் கடினப்படுத்துதல் முறை செலவு குறைவான உத்தி. விதைப்பதற்கு முன் ஊறவைத்து பின் உலர செய்து சாதாரண ஈரப்பத நிலைக்கு கொண்டு வந்து விதைப்பது விதையை கடினப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இப்படிச் செய்வதால் அவற்றின் முளைப்புத்திறன் அதிகரித்து வேர்கள் நன்கு பரவி பயிர்கள் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கிறது.
கம்பு விதைகளை 2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதவீதம் சோடியம் குளோரைடில் 16 மணி நேரம் ஊறவைத்து பின் 5 மணி நேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். சீரான இடைவெளியில் விதைக்க ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீரிய ஒட்டு கம்பு போதும்.
களை மேலாண்மை
நேரடி விதைப்பு நிலங்களில் விதைத்த மூன்று நாட்களுக்கு பிறகு எக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் 0.25 கிலோ அட்ராசைன் களைக்கொல்லி கலந்து நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் போது மண்ணின் மேற்பரப்பில் தெளிப்பானால் தெளிக்கவேண்டும்.
விதைத்த 30 முதல் 35 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுத்தால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கும். களைக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை என்றால் விதைத்த 15 வது, 30 வது நாட்களில் கையால் களை எடுக்க வேண்டும். பயிருக்கு ஏற்ற 15 செ.மீ., இடைவெளியை பின்பற்ற வேண்டும். விதைத்த 7 முதல் 10 வது நாளில் விதை முளைக்காத இடங்களில் மறுவிதை ஊன்ற வேண்டும்.
அடர்த்தியாக உள்ள இடங்களில் நல்ல செடிகளை வளரவிட்டு மற்றவற்றை அகற்ற வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
விதைக்கும் முன்னர் அடியுரமாக 5 முதல் 10 டன் மட்கிய இயற்கைஉரமாக தொழுஉரம், தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழுஉரம் ஏதாவது ஒன்றை நிலத்தில் இடவேண்டும். ஒரு எக்டேர் நிலத்திற்கு 28:14:14 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துகளை இட வேண்டும். தழைசத்தினை மூன்று பகுதியாக பிரித்து விதைக்கும் முன், விதைத்த 15 நாள் மற்றும் 30வது நாளில் இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தினை அடியுரமாக இடவேண்டும்.
மணிச்சத்து பயிர்களின் வளர்ச்சிக்கும் திரட்சியான விதைக்குமான பேரூட்டச்சத்துகளைத் தரும். செம்மண் நிலங்களில் மணிச்சத்து இரும்பு, அலுமினியம் அயனிகளுடன் இணைந்து நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் மணிச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை. இதை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்தை (25 கிலோ சூப்பர் பாஸ்பேட்) 300 கிலோ தொழுஉரத்துடன் கலந்து 30 நாட்கள் வைத்திருந்து ஊட்டமேற்றிய பின் அடியுரமாக இட வேண்டும்.
சத்து குறைபாடு அறிகுறிகள்
தழைச்சத்து பற்றாக்குறை எனில் குட்டை வளர்ச்சியுடன் அடர் மஞ்சளாக விளிம்புகளில் இருந்து நுனி வரை பரவும். இதற்கு யூரியா ஒரு சதவீதம் அல்லது டி.ஏ.பி., 2 சதவீதத்தை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மணிச்சத்து பற்றாக்குறை இருந்தால் தானிய வளர்ச்சியை கட்டுப்படுத்தும். மெல்லியதாகவும் வளர்ச்சி குன்றியதாகவும் காணப்படும். தழைதெளிப்பான் டி.ஏ.பி., 2 சதவீதத்தை 2 அல்லது 3 முறை தெளிக்கவேண்டும்.
சாம்பல் சத்து பற்றாக்குறையால் அடி இலைகளின் நுனி மற்றும் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும். இதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு கலந்து கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.
நுண்ணுாட்டக் கலவையின் பயன்பாடு
12.5 கிலோ நுண்ணுாட்டக் கலவையை மண்ணுடன் கலந்து 50 கிலோவாக மாற்றி விதைப்பதற்கு முன், பின்பு விதைகளை மூடும் விதமாக அளிக்க வேண்டும். தழைதெளிப்பான் பிராரினோஸ் டீராபாட்ஸ் 0.1 பி.பி.எம். கலந்து 30 மற்றும் 50வது நாட்களில் தெளித்தால் கம்பு தானிய மகசூலை அதிகரிக்கலாம்.
அறுவடையும் சேமிப்பும்
இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி உலர்ந்த தோற்றத்தில் இருந்தால் அறுவடைக்கு பயிர்கள் தயார். முதலில் தானியக் கதிரை தனியாக அறுக்க வேண்டும். வைக்கோலை ஒருவாரம் காயவிட்ட பின் அறுவடை செய்யலாம். 10 சதவீதத்திற்கு குறைவான ஈரப்பதம் உள்ளவாறு உலரவிட வேண்டும். 100 கிலோ தானியத்திற்கு ஒரு கிலோ அளவு வெண் களிமண் கலந்தால் அரிசி அந்துபூச்சி தாக்குதலை குறைக்கலாம்.