PUBLISHED ON : நவ 14, 2018

புல்லில் புதைந்து கிடக்கும் புதையல் என வெட்டிவேரை அழைப்பதுண்டு. வெட்டிவேரால் நிலம் வளமாகும்; பணம் வசமாகும். விவரம் தெரியாத வரை அதை வெட்டிவேர் என்று சொல்லி கொண்டிருந்ததில் தப்பில்லை. ஆனால் இன்றைக்கு அது பணத்தை வெட்டி விடும் வெற்றி வேர் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
பல ரகங்கள்
தமிழகத்தை விட அண்டை மாநிலங்களில் குறிப்பாக கேரளா, கர்நாடகா பகுதியில் நுாற்றாண்டு காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு அற்புதமான மருந்து.
ஆயுர்வேத மருத்துவத்தில் தனியிடம் வெட்டி வேருக்கு உண்டு. இதன் தாவரவியல் பெயர் 'வெட்வேரியா ஜிஜேலியோட்ஸ்,' 'போயேசியே' தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் குறுவேர், நாணல், தர்ப்பை புற்கள் போல் வளரும்.
வெட்டிவேரில் பல ரகங்கள் உள்ளன. கே.எஸ்.1, கே.எஸ்.2, சுகந்தா என்ற ரகங்களும் உண்டு. தமிழக மற்றும் கேரள பகுதியில் பயிர் செய்ய ஓ.டி.யு.-3 என்ற ரகம் ஏற்றது. இது வேகமாக வளரும் தன்மை உடையது.
ஆனால் இதன் வேரில் வாசனை கொஞ்சம் குறைவு தான். வெட்டி வேர் சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதி உள்ள நிலம் வேண்டும். குறைந்த பட்சம் 15 - 20 நாளுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் தர வேண்டும்.
கிலோ ரூ.35
ஆண்டு முழுவதும் பயிரிடலாம். எப்போது பயிரிட வேண்டும், என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதன் வயது 12 மாதங்கள். ஒரு வெட்டிவேர் நாற்று 50 காசுக்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும்.
இதற்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் செலவு போதும். பார் அமைத்து நான்கு அங்குலத்திற்கு 1 வீதம் நடவு செய்ய வேண்டும். மக்கிய உரத்தை போடலாம்.
மற்றபடி ரசாயன உரம், பூச்சி மருந்து எதுவும் தேவையில்லை. நடவு செய்த 12 மாதங்கள் கழித்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 5 டன் உலர்ந்த வேர் மகசூலாக கிடைக்கும். கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெட்டிவேர் தயாரிப்புக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டு இருக்கிறது. வெட்டிவேரின் இலைகளை மாடுகளுக்கு தீவனமாக கொடுத்தால் கூடுதல் பால் கிடைக்கும். வரப்பு ஓரங்களில் பயிரிட ஏற்றது. அதுவே பயிர்களுக்கு காவல்காரனாகவும் இருக்கும். தொடர்புக்கு 94435 70289.
- எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை