sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நேரடி புழுதி நெல் விதைப்பு முறை

/

நேரடி புழுதி நெல் விதைப்பு முறை

நேரடி புழுதி நெல் விதைப்பு முறை

நேரடி புழுதி நெல் விதைப்பு முறை


PUBLISHED ON : ஏப் 02, 2014

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலநிலை மாற்றம் மற்றும் உலகம் வெப்பமயமாதலின் காரணமாக பருவமழை பொய்த்து வருகின்றது. இதனால் அணைகள், கண்மாய்கள், ஏரி மற்றும் குளங்கள் நிறைவது மிகவும் கடினமாகி வருகிறது. நிலத்தடி நீரும் வற்றி விட்டது. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் நேரடி புழுதி நெல் விதைப்பு முறை சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. துணிவே துணை என்று விவசாயிகள் முழு முயற்சியுடன் நேரடி புழுதி நெல் விதைப்பில் ஈடுபடலாம்.

நேரடி புழுதி நெல் விதைப்பு: பாசன நீர் சிக்கனமாவது மட்டுமல்ல. நேரடி நெல் விதைப்பில் நாற்றங்கால் தயாரிப்பு செலவும் மிச்சமாகின்றது. நாற்றுப் பறித்தல் மற்றும் நடவு செலவும் இல்லை. நாற்று விட்டு வைத்து விட்டு நடவிற்கு தக்க சமயத்தில் ஆள் கிடைக்கவில்லையே என்று யோசனை செய்ய வேண்டியது இல்லை. நேரடி விதைப்பிலும் இரண்டு முறைகள் உள்ளன.

1. புழுதி விதைத்த இறவை நெல் சாகுபடி முறை

2. சேற்றுழவு செய்து விதைப்பது

புழுதி விதைத்த இறவை நெல் சாகுபடி: இந்த நெல் சாகுபடி முறை விவசாயிகளிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்று வருகின்றது. காவல்வாயில் பாசனநீர் வருவதற்கு தாமதமானாலோ அல்லது போதுமான அளவு மழை கிடைக்காத தருணத்திலோ புழுதி நெல் விதைப்பினை மேற்கொள்ளலாம். இதில் வயலை தண்ணீர் இல்லாமலே புழுதி வயலாக உழுது தயார் செய்து, நெல்லை நேரடியாக விதைத்து பிறகு வாய்க்காலில் பாசனநீர் கிடைத்தவுடன் சேற்று நெல்லாக மாற்றி பராமரிப்பு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நடவு வயல் தயாரிக்க (சேற்றுழவு செய்ய) தேவைப்படும் பாசனநீர் மிச்சமாகிவிடும். கிணற்றுப் பாசனப் பகுதிகளில் பாசனநீர் பற்றாக்குறை இருந்தால் இந்த முறையைப் பின்பற்றி நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.

நேரடி புழுதி நெல் விதைப்பிற்கு ஏற்ற ரகங்கள்: உயர் விளைச்சல் தரும் குறுகிய கால நெல் ரகங்களான ஆடுதுறை 36, ஆடுதுறை 43, ஆடுதுறை 47 மற்றும் அம்பை (ஏஎஸ்டி) 16 ரகங்களை விவசாயிகள் தேர்ந்தெடுத்து சொர்ணவாரி பட்டமான ஏப்ரல் -மே மாதங்களில் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுக்கலாம். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அம்பை 16 மிக அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது. சொர்ணவாரி பட்டமானது போதுமான சூரிய வெளிச்சம், வெப்பம், நேர்த்தியான தண்ணீர் பராமரிப்பு, குறைவான பூச்சிகள் மற்றும் நோய்கள் ஆகிய காரணங்களினால் மற்ற பட்டத்தை விட இப்பட்டத்தில் அதிக மகசூல் எடுக்கலாம்.

விதை நேர்த்தி செய்தல் : புழுதி விதைப்பிற்கு ஒரு ஏக்கருக்கு முப்பது கிலோ விதை நெல் தேவைப்படும். விதையை நேர்த்தி செய்து விதைத்தால் முளைக்கும் பயிருக்கு வறட்சியைத் தாங்கும் சக்தி கிடைக்கும். இதற்கு முப்பது லிட்டர் தண்ணீரில் 300 கிராம் பொட்டாஷ் உரத்தைக் கரைத்து அதில் முப்பது கிலோ நெல் விதையை பதினாறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு விதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி விதைப்பிற்கு பயன்படுத்தலாம்.

விதைப்பு கருவி : இவ்வாறு நேர்த்தி செய்த விதைகளை கையால் வீசி விதைப்பதை விட விதைப்புக் கருவி மூலம் விதைப்பது தான் நல்லது. நேரடி புழுதி விதைப்பில் விதைகள் ஒரு அங்குல ஆழத்தில் விதைக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் மேல் மண்ணில் கொஞ்சம் ஈரத்தன்மை குறைந்தாலும் முளைக்கும் பயிர் கொஞ்சம் சமாளித்து வளரும். தவிர விதைக்கும் கருவி மூலம் விதைத்தால் சரியான இடைவெளியில் விதைகள் விழும். இதனால் சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு நல்ல மகசூல் கிடைக்கும்.

உரமிடுதல் : நேரடி புழுதி நெல் விதைப்பிற்கு யூரியா, பொட்டாஷ் உரங்களை அடியுரமாக போட வேண்டியதில்லை. மேலுரமாகப் போட்டால் போதும். ஒவ்வொரு முறையும், ஒரு ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவும், எட்டு கிலோ பொட்டாஷூம் இடலாம். குறுகிய கால நெல் ரகமாக இருந்தால் மேலுரத்தின் அளவினை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ள இடங்களில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ இரும்பு சல்பேட் நுண்ணூட்டத்தை இருபது கிலோ தொழு உரத்துடன் கலந்து இட்டு பயிர் வெளுப்பதை தடுக்கலாம்.

களைக்கட்டுப்பாடு : நேரடி நெல் விதைப்பினை பொருத்தவரை களை தான் பெரும் பிரச்னையாக இருக்கும். அதைத் தவிர்க்க கோடை உழவு பலமுறை செய்ய வேண்டியது அவசியமாகிறது. தவிர கோடை உழவால் மண்ணின் ஈரமும் ஓரளவு அதிகரிக்கும். களைக்கட்டுப்பாடு என்பது நேரடி நெல் விதைப்பில் அவசியமானதாகும். ஆள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். களைக்கொல்லி பயன்படுத்தும் போது வயலில் ஈரம் இருந்தால் களைகள் நல்ல முறையில் கட்டுப்படும்.

பாசனம் : விதை முளைத்து 4-5 வாரங்கள் கழித்து பாசனநீர் கிடைக்க ஆரம்பித்ததும் ஒவ்வொரு முறையும் ஐந்து சென்டி மீட்டர் அளவிற்கு மட்டும் பாசனம் செய்தால் போதும். அதற்குப் பிறகு சேற்று நெல் சாகுபடியாக எப்பொழுதும் பராமரிப்பது போலவே நெல் வயல்களைப் பராமரிக்கலாம். இப்படி எங்கெல்லாம் நெல் நடவுப்பருவத்தில் நீராதாரம் குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் விவசாயிகள் புழுதியில் நேரடி நெல் விதைப்பினை செய்து பாசனப் பற்றாக்குறையினை சமாளித்து சோதனைகளை சாதனைகளாக மாற்றி நெல் சாகுபடியினை தொடர்ந்து செய்து நல்ல மகசூல் எடுத்து பயன் அடையுங்கள்.

- எஸ்.எஸ்.நாகராஜன்.






      Dinamalar
      Follow us