/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து வளர்க்க கூடாது
/
நாட்டுக் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து வளர்க்க கூடாது
நாட்டுக் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து வளர்க்க கூடாது
நாட்டுக் கோழிகளை கூண்டுக்குள் அடைத்து வளர்க்க கூடாது
PUBLISHED ON : ஜூலை 24, 2019

சுதந்திரமாக மேய்ச்சலுக்கு அலையும் நாட்டுக் கோழிகளை பண்ணைக்குள் கூண்டு முறையில் வளர்த்தால் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும். இவ்வாறு வளரும் கோழிகளில் ஓங்கிய பண்பு கொண்ட கோழிகள் ஒடுங்கிய பண்பு கொண்ட கோழிகளை கொத்திக் காயப்படுத்தும். கோழிகளில் இப்பழக்கம் இயற்கையானது என்றாலும் ஒரு கோழியை பார்த்து எல்லாக் கோழிகளும் இதனை பழகிக் கொள்ளும்.
இப்பழக்கத்தில் காலைக் கொத்துவது, இறகுகளை பிடுங்குவது, தலையில் கொத்துவது, ஆசன வாய்ப்பகுதிகளை கொத்துவது என வெவ்வேறான கெட்ட பழக்கங்கள் உண்டு.
நாட்டுக் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும் வழக்கத்தால் அவற்றின் விற்பனை விலையில் பாதிப்பு ஏற்படும்.
சுதந்திரமாக மேய்ச்சலுக்கு அலைய விடுவதால் இரை தேடும் நோக்கம் இருக்குமே தவிர, ஒன்றையொன்று கொத்திக்கொள்ள நேரம் இருக்காது. இக்கோழிகள் பகலில் தொண்ணுாறு சதவீத நேரத்தை தீவனங்களை தேடி உண்பதற்காகவே செலவிடுகின்றன.
அவ்வாறு குணமுடைய கோழிகளை கூண்டுக்குள் அடைத்து வளர்த்தால் தீவனம் தின்னும் நேரம் குறைவாக இருக்கும். மற்ற நேரங்களில் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு பொழுதைப் போக்கும். இப்பழக்கத்தினை தடுக்க வெவ்வேறு வயதுடைய கோழிகளை சேர்த்து வளர்க்கக் கூடாது.
இடப் பற்றாக்குறையால் குறைந்தளவு இடத்தில் அதிக கோழிகளை பராமரிக்க கூடாது. தாய்க் கோழிகளோடு குஞ்சுக் கோழிகளை சேர்த்து வளர்க்க வேண்டும்.
தாய்க்கோழிகள் இல்லாமல் வளரும் குஞ்சுகளில் இப்பழக்கம் கூடுதலாகவே இருக்கும். சேவல், கோழிகளை தனித்னியே பிரித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கொத்திக் கொள்ளும் பழக்கம் குறைய வாய்ப்புண்டு.
தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின் சத்துக்களை சரியான அளவில் தருவது, ஒரே வயதுடைய கோழிகளை ஒரே தொகுப்பில் வளர்ப்பது, குருணை வடிவிலான தீவனங்களை தவிர்த்து மாவு போன்ற தீவனங்களை கொடுப்பது, தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை 40 முதல் 50 கோழிகளுக்கு ஒன்று என்ற விகித்தில் வைப்பது, அகத்தி, முருங்கை, வேலிமசால், வேப்ப இலைகளை தீவனவமாக தருவது போன்ற பராமரிப்பு முறைகள் கையாள்வதால் கோழிகள் கொத்திக்கொள்ளும் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம். எனவே நாட்டுக்கோழிகளை கூண்டு முறையில் அடைத்து வளர்க்காமல் விசாலமான இடங்களில் சுதந்திரமாக திரிய விட்டு வளர்ப்பதே நல்லது.
- டாக்டர். வி.ராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை
94864 69044

