PUBLISHED ON : ஜூலை 24, 2019

தென்னந்தோப்புகள் சரிவர பராமரிக்கப்படாத நிலையிலும், மானாவாரி தோப்புகளில் போதிய நீர் பாசன வசதி இல்லாத நிலையிலும் ஒல்லிக்காய்கள் 3 முதல் 10 சதவீதம் தோன்றுகின்றன. பாரம்பரிய குணங்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை, போதிய நீர் பற்றாக்குறை, மகரந்த சேர்க்கை சரியின்மை போன்றவையே இதற்கு காரணம்.
பாரம்பரிய குணங்கள் பெறும் முறைகள்: நல்ல குணங்கள் அடங்கிய தாய் மரங்களில் இருந்து 15 முதல் 45 வயதுடைய மரங்களில் அதுவும் 35 மட்டைகளுக்கு குறைவில்லாத ஆண்டுக்கு 100 காய்கள் கொடுக்கக்கூடிய மரங்களிலிருந்து தென்னை நாற்று தேர்ந்தெடுக்க வேண்டும். 5 முதல் 7 இலைகள் மற்றும் அதிக வேர்கள் (13-15 சென்டி மீட்டர்) உள்ள தென்னை நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.
ஊட்டச்சத்து பற்றாக்குறை: தென்னை வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு தேவையான பயிர் சத்துக்களை அளிப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையை தடுக்கலாம். நன்கு வளர்ந்த தென்னை ஆண்டொன்றுக்கு 540 கிராம் முதல் 600 கிராம் வரை மணிச்சத்து, 850 கிராம் சாம்பல் சத்து எடுத்துக்கொள்ளும், என கணக்கிடப்பட்டுள்ளது. தவிர சோடியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, போரான் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களும் தேவைப்படுகின்றன. இதை ஈடு செய்ய தென்னைக்கு நுண்ணுாட்டக் கலவை உரத்தினை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ இட வேண்டும்.
மேலும் இயற்கை எருவாகிய மக்கிய குப்பை, கம்போஸ்ட், மண்புழு உரம் இட வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்கள் விதைத்து, அதை நிலத்தில் மடக்கி உழுது விடலாம். இதன் மூலம் மண்வளம் காக்கப்படுவதோடு ஒல்லிக்காய் உருவாவதைத் தடுக்கலாம். தேங்காய் வளர்ச்சிக்கு சாம்பல் சத்து, போரான் சத்து முக்கியம். சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் சேமிக்கலாம். மகரந்த சேர்க்கைக்கு தேனீ வளர்ப்பு உகந்தது.
- எஸ்.சந்திரசேகரன்
அருப்புக்கோட்டை
63746 95399

