/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மண்ணை சூடாக்காதீங்க... நுண்ணுயிரிகள் தாங்காது...
/
மண்ணை சூடாக்காதீங்க... நுண்ணுயிரிகள் தாங்காது...
PUBLISHED ON : ஜூலை 03, 2024

அறுவடை முடிந்தபின் பயிர்க்கழிவுகள் நிலத்தில் எஞ்சியிருக்கும். இவற்றை பெரும்பாலான விவசாயிகள் எரித்து அகற்றுகின்றனர். முறையாக மேலாண்மை செய்வதன் மூலம் பயிர்க்கழிவை உரமாக மாற்றி உரத்தின் பயன்பாட்டை குறைக்கலாம்.
பயிர்க்கழிவை எரிப்பதால் மண் சூடாகி 15 செ.மீ., வரை மண் இழப்பு ஏற்படும். வளமான மேற்பரப்பு மண்ணில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான தழைச்சத்து, கரிமச்சத்துகளை இழக்க நேரிடும். மண்ணின் வெப்பநிலை கூடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் அழியவும் வாய்ப்புள்ளது. மண்ணின் கார்பன் - நைட்ரஜன் சமநிலை குலையும். ஒரு டன் நெற்கதிர்களின் கழிவை எரிப்பதால் 5.5 கிலோ தழை, 2.3 கிலோ மணிச்சத்து, 2.5 கிலோ சாம்பல் சத்து, 1.2 கிலோ கந்தகத்துடன் அங்கக கரிமஇழப்பு ஏற்படுகிறது.
பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறும்
பயிர்க்கழிவை எரிக்கும் போது மீத்தேன், கார்பன், மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறும். உதாரணமாக நெற்கழிவை எரிக்கும் போது 70 சதவீத கார்பன் டை ஆக்ஸைடு, 7 சதவீத கார்பன் மோனாக்ஸைடு, 0.66 சதவீத மீத்தேன், 2.09 சதவீத நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேறி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. நிலத்தில் பயிர்க்கழிவுகளை எரிப்பதை விட்டு விட்டு மேலாண்மை செய்ய கற்றுக்கொள்வதே சிறந்த வழி.
மேலாண்மை தொழில் நுட்பங்கள்
அறுவடை முடிந்ததும் பயிர்க்கழிவுகளை மண்ணிலேயே மடக்கி உழ வேண்டும். இப்படி செய்தால் மண்ணின் தழை, மணி, சாம்பல் சத்துகளும் மண்ணின் இயற்பியல் பண்புகளும் மேம்படும். பயிர்க்கழிவை கொண்டு நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைக்கலாம். மூடாக்கு என்பது மண்ணில் சூரியஒளி நேரடியாகப்படுவதை தவிர்க்கும் எளிய ஆயுதம். தாவரங்களின் கழிவுகளையும் எளிதில் மட்கக்கூடிய செயற்கை பொருட்களையும் மூடாக்காக பயன்படுத்தலாம். தாவரக்கழிவுகள் குறிப்பிட்ட காலம் வரை நிலப்போர்வையாகவும் மட்கிய பின் உரமாகவும் பயன்படுகிறது.
மட்கிய உரம் தயாரிக்கலாம்
பயிர்க்கழிவுகளை சிறு துண்டுகளாக்க வேண்டும். இதற்கான கருவிகள் சந்தையில் எளிதாக கிடைக்கும். உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால் மண்ணின் அங்ககத்தன்மையும் ஊட்டச்சத்துகளின் அளவும் அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை மட்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜீல்லஸ், பெனிசீலியம், டிரைக்கோடெர்மா ' பூஞ்சாணங்களை பயன்படுத்தலாம். ஒரு டன் கரும்பு தோகைக்கு 2 கிலோ பயோ மினரலைசர்', 50 கிலோ சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும். கரும்பு தோகை கழிவுகளை 4 அடி உயரத்திற்கு குவித்து வைக்க வேண்டும். அதன் மேல் கரைசலை தெளிக்க வேண்டும்.
குவியல் நான்கடி உயரம் இருந்தால் தான் அதற்குள் வெப்பம் உருவாக்கப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை கிளறி விட்டு காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். குவியலுக்குள் கீழிருக்கும் கழிவுகள் மேலும் மேலிருக்கும் கழிவுகள் கீழுமாக திருப்பி விடப்படும் போது கழிவுகள் முழுவதும் ஒரே சீராக மட்குகிறது.
மட்குவதற்கு 60 சதவீத ஈரப்பதம் தேவைப்படுகிறது. ஈரப்பதம் குறைந்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகள் இறந்து விடும். மட்கிய கரும்பு உரத்தில் 0.5 சதவீத தழை, 0.2 சதவீத மணி, 1.1 சதவீத சாம்பல் சத்து மற்றும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதை கரும்பு பயிருக்கு நல்ல உரமாக பயன்படுத்தலாம்.
செறிவூட்டப்பட்ட மட்கிய உரம் எக்டேருக்கு 5 டன் பரிந்துரைக்கப்படுகிறது.
தென்னை நாரும் உரமாகும்
தென்னை நார்க்கழிவில் விரைவில் மட்க இயலாத லிக்னின், செல்லுலோஸ்' ஆகியவை 50 சதவீதத்திற்கு மேல் உள்ளன. இவை மண்ணில் இடும் போது எளிதில் மட்காது. புளுரோட்டஸ்' என்னும் காளானை கொண்டு மட்க வைத்து அதன் சத்துகளின் அளவை அதிகரிக்கச் செய்து சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தலாம். கோவை வேளாண் பல்கலை, அரசு வேளாண் கல்லுாரிகளில் இந்த காளான்கள் கிடைக்கும்.
நாரற்ற தென்னை கழிவுகளை 3 அங்குல உயரத்திற்கு பரப்பி நீர்தெளித்து ஈரப்படுத்த வேண்டும். அதன் மேல் தழைச்சத்துள்ள ஏதேனும் ஒரு மூலப்பொருள் உதாரணமாக கோழிப்பண்ணை கழிவுகளைச் சேர்க்கலாம். ஒரு டன் தென்னை கழிவுக்கு 200 கிலோ கோழிஎரு பரிந்துரைக்கப்படுகிறது. தென்னை கழிவுகளையும் கோழி எருவையும் பத்து சம பாகங்களாக பிரிக்க வேண்டும். முதலில் தென்னை கழிவு, அதன் மேல் கோழிஎரு, அடுத்து தென்னை கழிவு என்ற வரிசையில் குறைந்தது நான்கடி உயரத்திற்கு குவித்து வைக்க வேண்டும். மட்க வைக்கும் நுண்ணுயிரியின் செயல்பாட்டுக்கு பிராணவாயு அவசியம் என்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும்.
இப்படி மட்க வைத்து மேலாண்மை செய்தால் மண்ணிலுள்ள சத்துகள் வீணாகாது. கரிமச்சத்து, தழை, மணி, சாம்பல் சத்துகள் மண்ணில் நிலைநிறுத்தப்பட்டு பயிர்களுக்கு கிடைப்பதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.
- சுப்புராஜ்இணை இயக்குநர் வேளாண்மை துறை மதுரை