/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வெட்டிவேரு வாசம்… நிலத்தில் தான் வீசும்
/
வெட்டிவேரு வாசம்… நிலத்தில் தான் வீசும்
PUBLISHED ON : ஜூலை 03, 2024

கடலோர மணற்பாங்கான பகுதி, மேட்டுப்பகுதிகளில் மண்வளம் பெருக்குவதற்கு வெட்டிவேர் முக்கியமான பயிர்.
தென்னந்தோப்பில் வெட்டிவேர் சாகுபடி செய்தால் காற்றின் வெப்பம் குறைகிறது. மழைநீர் நிலத்தில் உள்ளே செல்ல உதவுவதால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். சரிவான பகுதியில் நிலஅரிப்பை தடுக்கும் பயிராக வெட்டிவேரை பயன்படுத்தலாம். அதிக மழை பெய்யும் போது தண்ணீரை தடுத்து தவழ வைக்கும். மானாவாரி பகுதியில் சமமட்ட வரப்பு அமைக்கும் போது நிலத்தின் வளம் குன்றாமல் இருக்க வரப்போர பயிராக வெட்டிவேர் நடலாம்.
ஒரு ஏக்கரில் வெட்டிவேர் புல் தனியாக கூட பயிரிடலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதல் வருமானமாக ரூ.2 லட்சம் வரை பெறலாம். செடி நட்டால் அறுவடைக்கு ஓராண்டு காலம் காத்திருந்து பலன் பெறலாம். ஒரு ஏக்கர் பரப்பில் 4.5 மெட்ரிக் டன் வேரும் 20டன் உலர்ந்த வெட்டிவேர் புல்லும் கிடைக்கும்.
விவசாயிகள் வெட்டி வேரை பயன்படுத்தி கைவிசிறி, தட்டி, ஏர்கூலர் மேட், வாசனை பத்தி, மாலை, கம்யூட்டர் இருக்கை, யோகாமேட், கார் இருக்கை, பாய், சென்ட், எண்ணெய் தயாரித்தல், அழகு பொம்மை, கூடை, பை, தொப்பி தயாரிக்கலாம். அறுவடை செய்வதுடன் விவசாயிகளே மதிப்பு கூட்டினால் கூடுதல் லாபம் கிடைக்கும். சுய உதவிக்குழுக்களும் இதை தொழிலாக செய்யலாம். வெட்டிவேர் எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.
எல்லாவித தோட்டத்திலும் சரிவாக உள்ள இடங்களில் வரப்பு, கிணற்றுமேடு, மரங்களில் அடியில் மண் அனைத்து வெட்டிவேர் நடலாம். மலைப்பாங்கான பகுதியில் வெட்டிவேர் மூலம் காற்று அரிப்பில் இருந்தும் மண்ணை காக்கலாம். வாய்க்கால் ஓரங்களில் மண் எளிதில் அடித்துச் செல்லாமல் தடுக்கவும் வெட்டிவேர் உதவுவதால் வெட்டிவேர் ஒரு பசுமைப்புரட்சிக்கும் வழிகோலும் தாவரமாக உள்ளது. அதுமட்டுமல்ல வெட்டி வேர் நமது சுற்றுச்சூழலை காப்பதுடன் மண், காற்று மாசுபடாமல் தடுக்கும்.
கால்நடைகள் விரும்பி உண்ணாது என்றாலும் வறண்ட பகுதியில் இவற்றை வளர்க்கலாம். ஷூபா புல், அகத்தி, பூவரசு இலை, முருங்கை இலை, ஆனைப்புல், அருகம்புல், கோரைப்புல் ஆகியவற்றுடன் வெட்டிவேர் புல்லை சேர்த்து துாளாக்கி ஆடு, மடுகளுக்கு பசுந்தீவனமாக தரலாம். கோடை வெப்பத்தால் தீப்பிடித்து மேற்பரப்பு காய்ந்தாலும் வேரின் தன்மையால் மீண்டும் தானாக முளைத்து வரும் அதிசய தன்மையுடையது வெட்டிவேர்.
தோட்டக்கலைத் துறையில் வெட்டி வேர் செடிகள் கிடைக்கும். முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வாசனைப்பயிர்கள் பிரிவின் கீழ் உள்ள பேராசிரியர்கள் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களை அணுகலாம்.
-- இளங்கோவன்கூடுதல் இயக்குநர் வேளாண் துறைகாஞ்சிபுரம்98420 07125