/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வேலைவாய்ப்பு, லாபம் தரும் பட்டுநூல் தயாரிப்பு
/
வேலைவாய்ப்பு, லாபம் தரும் பட்டுநூல் தயாரிப்பு
PUBLISHED ON : மே 09, 2018

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பட்டுப்புழுக்கூட்டில் இருந்து கச்சா பட்டுநுால் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு 10 பேருக்கு வேலைவாய்ப்பும், லாபமும் ஈட்டி வருகிறார் நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த அக்கினி.
பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுநுால் தயாரிப்பு போன்ற தொழில்கள் உசிலம்பட்டி பகுதிக்கு புதியவை. தண்ணீர் பற்றாக்குறையினால் மாற்றுத்தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு இந்த தொழில் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. பட்டுப்புழு வளர்ப்பில் ஆங்காங்கே விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் பெங்களூரு ராம்நகரில் பட்டுநுால் தயாரிப்பு தொழிலை பழகிய அக்கினி, உசிலம்பட்டிக்கு வந்து அதனை செயல்படுத்தி 10 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கியுள்ளதுடன், மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறார்.
அக்கினி கூறியதாவது: கர்நாடக மாநிலம், பெங்களூரு ராம்நகர் பகுதியில் முறுக்கு தொழில் செய்ய சென்ற போது, அங்கு அதிகமாக நடைபெறும் பட்டுநுால் உற்பத்தி தொழில் அறிமுகமானது. அங்கேயே பட்டு நுால் தயாரிப்பு செய்து வந்தேன். தற்போது உசிலம்பட்டியில் தயாரிப்புக்கூடம் அமைத்துள்ளேன்.
தேனியில் பட்டுக்கூடு
தேனியில் பட்டு வளர்ச்சி கழகத்தில் இருந்து மாதம் 2000 கிலோ பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்கிறேன். கிலோ 450 முதல் 550 ரூபாய் வரையில் தரத்திற்கு ஏற்ப விலை போகிறது.
பட்டுக்கூடு பருவத்தில் பத்து நாட்களுக்குள் கூடுகளை பட்டுநுால் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். நாட்கள் கடந்தால் புழுக்கள் அந்துபூச்சிகளாக மாறி கூட்டை உடைத்து வெளியேறி விடும். அந்த கூடுகளில் நீளமான பட்டுநுால் எடுக்க முடியாது.
ஒரு பட்டுக்கூட்டில் இருந்து 400 முதல் 500 மீட்டர் நீளமான நுால் கிடைக்கும். பட்டுக்கூடுகளை தரம்பிரித்து தரம் குறைவானவற்றை தனியாக சேகரித்து விற்பனை செய்து விடலாம்.
முதல் கட்டமாக கொதிக்கும் நீரில் பட்டுக்கூடுகளை போட்டு இரண்டு நிமிடம் கிண்டியபடி இருந்தால், கூட்டில் உள்ள புழு இறந்து போவதுடன், பசை வெளியேறி, நுால் தனியாக எடுக்க தேவையான இளக்கம் கிடைக்கும்.
இரண்டாம் கட்டமாக கொதிநீரில் இருந்து பட்டுக்கூடுகளை எடுத்து, ஆறு முதல் பத்து கூடுகளின் நுாலை இணைத்து ரீலிங் இயந்திரத்தின் மூலமாக நுாலாக மாற்றப்படும்.
இதற்கு பொருமையும், சரியான தொழில் தெரிந்தவர்களும் அவசியம். நுால் எண்ணிக்கை குறைந்தால் நெசவு செய்யும் போது சரியான இழை கிடைக்காமல் போகும்.
ரீலிங் இயந்திரத்தில் 100 கிராம் அளவில் பட்டுநுால் சேர்ந்த பின் அதில் இருந்து எடுத்த நுாலிழைகளை தேவையான சூட்டில் வைண்டிங் இயந்திரத்தில் போட்டு எடுக்கும் போது, அதில் உள்ள ஈரப்பதம் அகன்று கெட்டியான கச்சா பட்டுநுால் கிடைக்கும். 2000 கிலோ கூட்டில் இருந்து 300 கிலோ கச்சாபட்டு உற்பத்தி செய்யலாம். கழிவுகளான பட்டுக்கூடுகள், ஒன்றிணைந்த நுாலிலைகள் பாராசூட் கயறுகள், டயர்கள் உற்பத்திக்கு பயன்படும். இதற்கும் நல்ல விலை கிடைக்கும்.
காஞ்சிபுரம்
கச்சாபட்டு நுாலை எடுத்து காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனைக் கூடம் மூலமாக விற்பனை செய்து விடலாம். கிலோ ரூபாய் 3500 - 4000 வரையில் விலை கிடைக்கும்.
லாபம்
பத்து பேருக்கு சம்பளம், மின்கட்டணம், செலவு போக மாதம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையில் லாபம் கிடைக்கும் தொழிலாகும். முதலீடுக்காக இயந்திரங்கள், இடம், பட்டுக்கூடு வாங்குவதற்கான பணம் என குறைந்தது 10 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
சில நேரங்களில் கூட்டின் விலை அதிகரித்தும், கச்சா பட்டின் விலை குறைந்தும் லாபம் குறைய வாய்ப்பு ஏற்படும். அப்போது கழிவுகளில் இருந்து கிடைக்கும் பணம் தான் லாபமாக மாறும். எந்த வகையிலும் நமக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
பட்டு வளர்ச்சிக் கழகத்தில் இருந்தும் பலவகையில் உதவிகள் செய்து வருகின்றனர் என்றார்.
தொடர்புக்கு: 94423 56475
ப. மதிவாணன், உசிலம்பட்டி.

