PUBLISHED ON : மே 16, 2018

எருமைப் பாலில் கொழுப்பு சத்து 7 சதவிகிதம் உள்ளதால் இப்பாலுக்கு கிராக்கி எப்போதும் உண்டு. பால் பண்ணை தொழிலை தேர்வு செய்யும் விவசாயிகள் பசு மாட்டுடன் சில எருமைகளையும் சேர்த்து பராமரிப்பார்கள். வேளாண்மையை போலவே பருவ காலத்துக்கு ஏற்ப கால்நடைகளையும் பராமரித்தல் அவசியம். குறிப்பாக எருமை வளர்க்கும் விவசாயிகள் கோடை காலத்தில் பராமரிப்பில் கவனம் செலுத்தினால் பல நன்மைகள் கிடைக்கும். எருமைகள் வைக்கோல், புல் போன்ற நார்ச்சத்து தீவனங்களை உணவு பொருளாக விரைவில் மாற்றும் தன்மை கொண்டவை.
வீணாகும் கழிவு பொருட்களை சாப்பிட்டு நல்ல பாலாக மாற்றித்தரும். இப்படி பல நன்மைகள் இருந்தும் எருமை வளர்ப்பில் பெரும்பாலானவர் ஈடுபாடு காட்டுவதில்லை. காரணம் எருமை வளர்ப்பில் சில சிரமங்களும் உண்டு. 'முர்ரா' எனப்படும் டில்லி எருமைகள் அதிக வெப்பமான சுற்றுப்புற சூழ்நிலையை தாங்குவதில்லை. மேலும் எருமைக் கன்றுகளின் இறப்பு சதவிகிதம் கூடுதலாக இருக்கும். சினை பிடிக்கும் வாய்ப்புகளிலும் குறைபாடு இருக்கிறது. இதுபோன்ற சிரமங்கள் எருமை வளர்ப்பவர்களை ஆர்வம் இல்லாததாக செய்து விடுகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. எருமைகளின் உடற்கூற்றியல் அமைப்பு மற்ற விலங்கினங்களை காட்டிலும் கோடை வெயிலின் கூடுதல் தாக்கத்தை தாக்குப்பிடிக்க இயலாத நிலையில் தான் அமைந்துள்ளது. இதற்கு காரணம் எருமைகளின் தோலில் குறைந்த அளவிலான வியர்வை சுரப்பிகளே உள்ளன. எருமைகளின் தோல் மிகக்கடினமாக இருப்பதாலும் தோல் கருப்பு நிறம் கொண்டதாலும் எருமைகள் வெப்பத் தாக்குதலுக்கு மிகவும் பாதிப்படைய நேரிடுகிறது. இதன் விளைவாக எருமைகளின் பால் உற்பத்தி மட்டுமல்லாது இனவிருத்தி திறனும் குறைகின்றது.
பால் வற்றிய கறவை எருமைகள் வெயிலில் மேய்வதாலும், அவை மூழ்கி குளிக்க தண்ணீர் குட்டைகள் தண்ணீர் இல்லாமல் கோடையில் வறண்டு விடுவதாலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் சினைத்தருணத்துக்கு வருவதில்லை. இதனால் விவசாயிகள் சிலர் விரக்தி அடைந்து எருமைகளை அடி மாட்டுக்கு விற்று விடுகின்றனர்.
பால் வற்றிய கறவை எருமைகளை இக்கோடையில் நிழலான இடத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். அவற்றின் மீது அடிக்கடி குளிர்ந்த நீரை தெளித்து விட வேண்டும். குளம் குட்டைகளில் தண்ணீர் இருந்தால் அவற்றை சுதந்திரமாக நீந்த விடலாம். இவ்வாறு செய்வதால் எளிதில் சினை தருணத்துக்கு வந்து கன்று ஈனும் தகுதியை எருமைகள் அடையும்.
உதைக்கும் எருமை
வெப்ப அதிர்ச்சியை குறைக்க கலப்பு தீவனத்தில் 5 முதல் 10 கிராம் வரை பேக்கரி ஈஸ்ட் கலந்து கொடுக்கலாம். மேலும் வியர்வை மூலம் வெளியேறும் தாது உப்புகளின் இழப்பை ஈடுகட்ட தினமும் 50 கிராம் வரை தாது உப்புகளின் கலவையை தீவனத்தில் சேர்த்து தர வேண்டும். இதன் மூலம் பால் உற்பத்தியில் சரிவை குறைக்க முடியும். எருமைகளை அடித்து துன்புறுத்தினால் பால் அளவு குறையும். கன்றுகளை கட்டி வைக்கக்கூடாது. கன்றுகள் இறப்புக்கு 'நிமோனியா' மற்றும் வயிற்று போக்கு தான் காரணம். இவை வராமல் தடுக்க வேண்டும்.
எருமைகளுக்கு நிழலான இடங்களை ஏற்படுத்தி கொடுத்தால் தான் அவைகள் விரைவில் சினை பருவத்துக்கு வரும். எருமை கட்டுமிடங்களை சுத்தமாக வைத்தால் தான் ஈக்கள் தொல்லை இருக்காது. கிடேரி எருமைகள் பால் கறக்கும் போது உதைக்கும். அதனால் காலைக்கட்டி பால் கறக்க வேண்டும். சில எருமைகள் கட்டுக் கயிற்றை கடித்து விடும். இதை தவிர்க்க இரும்பு சங்கிலியால் கட்ட வேண்டும். கருமையான எருமைகளை அருமையாக வளர்த்து பால் வளம் பெறுவோம்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

