/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மரங்கள் வளர்ப்போம் மழை வளம் பெறுவோம்
/
மரங்கள் வளர்ப்போம் மழை வளம் பெறுவோம்
PUBLISHED ON : மே 16, 2018

புதிய இடங்களில் மரங்களை நடுவதும், வனங்களை வளர்ப்பதிலும் வெற்றி அடைந்து விட்டதாக இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை கொடுத்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் எடுத்த விபரப்படி முன்பு 23.4 சதவிகிதம் அளவில் இந்திய நிலப்பரப்பில் வனப்பகுதிகளாக இருந்த பரப்பு, 1 சதவிகிதம் அதிகரித்து 24.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனக் கூறுகிறது.
இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஆங்காங்கே வனங்களை பலர் அழிப்பதும், அரசு பல காரியங்களுக்காக மரங்களை வெட்டுவதையும் தடுக்க வேண்டும். சீன நாட்டில் மரங்களை அழகுற நட்டு, கிளைகளை வெட்டி விட்டு தினமும் காலை, மாலை தண்ணீர் விட்டு பராமரித்து வேப்ப மரங்களை கூட பனை மரங்கள் போல் அழகாய் துாண் போல் வளர்க்கின்றனர். பர்னிச்சர்கள் செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். 'புரூனிஸ்' (அரக்கி, வெட்டி விடுதல், காய்ந்த குச்சிகளை அகற்றுதல்) செய்யாத எந்த மரமும் பெரிதாக, சிறப்பாக வளர்ந்ததாக சரித்திரம் இல்லை.
பொது இடங்களில் மரங்களை நடுவது, புதிய வனங்களை உருவாக்குவது என அரசும், தொண்டு நிறுவனங்களும், செயல்படுகின்றன. ஆனால் ஓராண்டு கழித்து 50 சதவிகிதம் மரங்கள் கூட உயிருடன் இருப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மரங்களை நட்டு, சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று செடிகளுக்கு நீர் பாய்ச்சி வளர்க்கிறது.
இதர இடங்களில் பராமரிப்பு இல்லை. மரக்கன்றுகளை நடும்போது ஒரே வகை செடிகளை மட்டும் நடக்கூடாது. செடிகளை சுற்றிலும் முள் வேலி அமைக்க வேண்டும். நன்கு உரம் போடாமல் நடக்கூடாது. ஆண்டுக்கு ஒரு முறை உரம் வைக்க வேண்டும். வனங்களில் மரங்களை வெட்டவும், கனிம வளங்களை அள்ளவும் வனத்துறை, கனிம வளத்துறை அனுமதி அளிக்கக்கூடாது. கேரள மாநிலம் போல் வீட்டு தோட்டம், புறக்கடை மரம் வளர்ப்பை ஆதரிக்க வேண்டும்.
தொடர்புக்கு 98416 55629.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை

