/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கூடுதல் மகசூல் தரும் எள் நடவுமுறை
/
கூடுதல் மகசூல் தரும் எள் நடவுமுறை
PUBLISHED ON : அக் 09, 2024

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசீயம், பொட்டாசியம், இரும்பு, சிங்க் சத்து, வைட்டமின் ஏ, பி போன்றவை உள்ளன. கருப்பு எள்ளில் புற்றுநோயை தடுக்கும் 'சீசமின்' மூலக்கூறு உள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.
பொதுவாக எள் நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. எள் விதை சிறிதாக இருப்பதால் வரிசை முறையிலோ அல்லது துாவி விடுவதாலோ அதிகமான விதைகளை விதைப்பதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு துாவும் போது சில இடங்களில் பயிர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் உள்ளது. மேலும் பயிருக்கு பயிர், வரிசைக்கு வரிசை சரியான இடைவெளி இருப்பதில்லை.
விதை விதைத்து 15 நாட்களில் ஒரே இடத்தில் அதிகமாக வளர்ந்துள்ள நாற்றுகளை கலைத்து விட்டு, நாற்றுகள் வளராத இடத்தில் மீண்டும் விதைகள் விதைக்க வேண்டும். இதனால் விவசாயிகளின் உழைப்பும் விதையும் வீணாகிறது. அனைத்து செடிகளுக்கும் தேவையான சூரிய வெளிச்சமும் சத்துப் பொருட்களும் கிடைப்பதில்லை. அதிகமான மகசூலுக்கு செடிகள் போதுமான சரியான இடைவெளி இருந்தால் போதிய ஆற்றலை உள்வாங்க முடியும். துாவும் முறையில் விதைப்பதால் ஏற்படும் சிரமங்களை நடவு முறையில் எள் சாகுபடி தொழில் நுட்பம் மூலம் சரிசெய்யலாம். இம்முறையில் அதிக விளைச்சல் எடுக்க முடியும்.
நாற்றாங்கால் பராமரிப்பு
ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு 5 சென்ட் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். அதில் 200 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்தை இட்டு சமன் செய்ய வேண்டும். 300 முதல் 500 கிராம் விதை தேவைப்படும். 18 முதல் 20 நாட்கள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்வதற்கு ஏற்றது. எள் நாற்றுகள் மென்மையானதால் உயரமான நாற்றுகள் கீழே சாய்ந்து விட வாய்ப்பு உள்ளது. அவற்றின் உயரம் 10 முதல் 13 செ.மீ.க்குள் இருக்கவேண்டும்.
நடவு முறை
நாற்றுகளை 30 செ.மீ.,க்கு 30 செ.மீ., இடைவெளியில் நடவு செய்தால் செடிகளுக்கு காற்றோட்டம் சூரிய வெளிச்சம் அதிகமாக கிடைக்கும். இதனால் செடிகளில் பூக்களும் காய்களும் கிளைகளின் அடிபாகத்திலிருந்தே உருவாகி விளைச்சல் அதிகரிக்கும்.
உரம், களை நிர்வாகம்
மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கவும் ஈரத்தன்மையை தக்க வைக்கவும் தொழு உரமிட வேண்டும். கடைசி உழவின் போது மட்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவிலும் பரிந்துரைக்கப்பட்ட யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் இட வேண்டும். நாற்று நட்ட 15 முதல் 20ம் நாளில் ஒருமுறை கையால் களை எடுக்க வேண்டும். அதன் பிறகு எள் செடி நன்றாக வளர்ந்து தரையை மூடிக்கொள்ளும். மீண்டும் களை எடுக்கத் தேவையில்லை. ஆனால் நேரடி எள் விதைப்பில் 20 வது மற்றும் 40 வது நாட்களில் இரண்டு முறை களை எடுக்கவேண்டும்.
பயிர் ஊக்கி தெளித்தல்
பூக்கள் உதிர்வது காணப்பட்டால் எள் விதைத்த 40ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 6 மில்லி பிளானோபிக்ஸ் கலந்து தெளிக்க வேண்டும். போதுமான மகசூல் பெறுவதற்கு 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் டி.ஏ.பி. (ஒரு சதவீதம்) கரைசலை இலை வழி தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி பிராசினோலைடு (டபுள்) என்ற வளர்ச்சி ஊக்கி, 50 கிராம் மாங்கனீஸ் சல்பேட் தண்ணீரில் கலந்து தெளித்தால் வறட்சி மற்றும் உப்பு மண் போன்றவற்றிலும் நல்ல மகசூல் எடுக்கலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 ஷாம்பூ பாக்கெட் அளவில் கலந்து காலை அல்லது மாலையில் கைத்தெளிப்பானால் இலை வழி தெளித்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
அறுவடையில் நிறம் மாறும் காய்கள்
தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் உதிர்ந்து மேல் பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் எள் அறுவடைக்கு தயாராக இருக்கிறது என்று அர்த்தம். கறுப்பு, பழுப்பு நிற எள் செடி தண்டின் கீழ்பாகத்திலிருந்து 10 வது காயை உடைத்துப் பார்த்தால் நிறம் மாற்றம் காணப்படும். வெள்ளை நிற எள்ளுக்கு இது பொருந்தாது.
வேரை விட்டு விட்டு செடிகளை அடியோடு அறுத்த பின் செடிகளை கைவட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரியும் படி அடுக்க வேண்டும். 5ம் நாள் செடிகளை வெயிலில் காயவைத்து உலுக்கி எள்ளை பிரித்தெடுக்க வேண்டும். ஒரு ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு முறையில் எள் நடவு செய்தால் 6 குவிண்டால் விளைச்சல் பெற முடியும்.
-அமுதா, பேராசிரியை, விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை, வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.