தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/நிலக்கடலையில் உர நிர்வாகம், களை கட்டுப்பாடு

நிலக்கடலையில் உர நிர்வாகம், களை கட்டுப்பாடு

நிலக்கடலையில் உர நிர்வாகம், களை கட்டுப்பாடு


PUBLISHED ON : ஆக 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரும்பாலான செம்மண் நிலத்தில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிராகவும் ஒரு சில இடங்களில் இறவைப்பயிராகவும் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

ஏக்கருக்கு 40 கிலோ விதை தேவைப்படும். உயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா தலா 250 கிராம் கலந்து விதைநேர்த்தி செய்தால் தழை மற்றும் மணிசத்துகளை 25 சதவீதம் குறைத்து இடலாம்.

ஏக்கருக்கு 20 கிலோ யூரியா, 44 கிலோ டி.ஏ.பி., 50 கிலோ பொட்டாஷ், 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும். மானாவாரியில் ஏக்கருக்கு 10 கிலோ யூரியா, 22 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ், 100 கிலோ ஜிப்சம் இட வேண்டும். உயிர் உரங்களுடன் விதைநேர்த்தி செய்த விதைகளை வரிசைக்கு வரிசை ஒரு அடியும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் நேரடியாகவோ விதைக்கும் கருவி கொண்டோ விதைக்க வேண்டும்.

விதைத்த 30ம் நாள் நிலக்கடலை பூ பூக்க ஆரம்பிக்கும் சமயத்தில் நிலக்கடலை 'ரிச்' எனப்படும் வேளாண் பல்கலையின் ஊட்டச்சத்து கலவையை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

அதிக விளைச்சல் எடுப்பதற்கு களை கட்டுப்பாடு முக்கியம். குப்பைமேனி, குப்பைகீரை, சாரணை, முக்கீரட்டை கீரை, கீழாநெல்லி, மேலாநெல்லி, பருப்பு கீரை, அருகு, கோரை மற்றும் புல்வகை களைகள் அதிகமாக காணப்படும். இவை நிலக்கடலை பயிருடன் போட்டியிட்டு பயிருக்கு கிடைக்க வேண்டிய சத்துகளை உறிஞ்சுவதால் பயிர் அதிக காய்கள் பிடிக்காமல் விளைச்சல் பாதிக்கப்படும்.

களைகளை கட்டுப்படுத்த விதைத்த 3ம் நாள் ஈரம் இருக்கும் போது 'ஆக்சிபுளுபன்' களைக்கொல்லியை ஏக்கருக்கு 350 மில்லி அல்லது மெட்டலாகுளோர் ஏக்கருக்கு 400 மில்லி அல்லது பென்டிமெத்திலின் 1250 மில்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். களைகள் இருப்பின் விதைத்த 21வது நாள் பர்சூட் களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மில்லி வீதம் தெளிக்கலாம்.

புல்வகை களைகள் அதிகமாக இருப்பின் ஏக்கருக்கு 400 மில்லி டர்காசூப்பரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 20 - 30ம் நாளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இயற்கை விவசாயம் செய்பவர்கள் களைக்கொல்லிகளை தவிர்த்து விதைத்த 20 மற்றும் 40ம் நாளில் இருமுறை களைகொத்து கொண்டு களை எடுத்து மண் அணைக்க வேண்டும். களை எடுப்பதற்கு முன் ஏக்கருக்கு ஒவ்வொரு முறையும் 100 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைத்தால் காய்கள் திரட்சியாகவும் எண்ணெய் சத்து அதிகமாகவும் உருவாகும்.

பேராசிரியர்கள் மனோகரன், சஞ்சீவ்குமார், பாஸ்கர்

வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி

94420 39842


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us