PUBLISHED ON : ஆக 30, 2023

குறுந்தானியங்கள் மானாவாரி பயிராக தென்மேற்கு பருவமழை பெறும் மாவட்டங்களில் ஜூன், ஜூலையிலும் வடகிழக்கு பருவமழையையொட்டி ஜூலை, ஆகஸ்டிலும் விதைப்பது நல்லது.
மானாவாரி பண்ணையத்திற்கேற்ற மகத்தான பயிர் சாமை. கோ 3, கோ (சாமை) 4, பையூர் 2, கோ 1, அத்தியேந்தல் 1 ரகங்கள் விளைச்சலுக்கு ஏற்றவை. குறுகிய காலத்தில் குறைவான இடுபொருள் செலவில் நிகர லாபத்திற்கு ஏதுவான பயிர். வரகு பயிரானது கடும் வறட்சியை தாங்கி அனைத்துவித மண்ணிலும் வளரக்கூடியது. கோ 3, ஏ.பி.கே., 1, அத்தியேந்தல் 1, 2 ரகங்களை பயிரிடலாம்.
மலைவாழ் மக்களால் விரும்பி பயிரிடப்படும் தினை கடினமான வறட்சியை தாங்கி வளரும். கோ-6, கோ (தி) அத்தியேந்தல் 1 ரகங்கள் சிறந்தவை. பெரும்பாலும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. நெல், கோதுமையை விட அதிக சத்துகள் நிறைந்தது.
குதிரைவாலி தானியமாகவும் தீவனப் பயிராகவும் பயிரிடப்படுகிறது. மதுரை 1, கோ 1, கோ (கே.வி) 2 ரகங்கள் ஏற்றது. வளமற்ற மண்ணிலும் விவசாயிகளுக்கு விளைச்சல் தருகிறது.
மலைவாழ் மக்களால் மண்வளம் குறைந்த பகுதிகளில் பனிவரகு மானாவாரியாக பயிரிடப்படுகிறது. அத்தியேந்தல் 1, கோ (பி.வி) 5 ரகங்கள் ஏற்றது. பருவமழை குறைவாக பெய்தாலும் பனிவரகை விதைக்கலாம்.
விதைப்பு முறை
கை விதைப்பு முறையில் விதைப்பதற்கு எக்டேருக்கு 10 கிலோ, விதைப்பான் கொண்டு விதைக்க 12.5 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., இடைவெளியும் செடிக்கு செடி 10 செ.மீ., இடைவெளியும் இருக்க வேண்டும். எக்டேருக்கு 44:22 கிலோ என்ற அளவில் தழை, சாம்பல் சத்துகளை இடவேண்டும்.
விதைக்கும் போதே அடியுரமாக மணிச்சத்தை முழுவதுமாக இட வேண்டும். தழைச்சத்தை பாதியளவு இட்டு மீதமுள்ளதை விதைத்த 25 முதல் 30 நாள், 40 முதல் 45வது நாட்களில் சரிபாதியாக பிரித்து மேலுரமாக இடவேண்டும்.
களை, நீர் நிர்வாகம்
வரிசை விதைப்பு செய்திருந்தால் 2 முதல் 3 முறை இடை உழவு செய்த பின், ஒரு முறை கையால் களை எடுக்க வேண்டும்.
கை விதைப்பாக இருந்தால் இடை உழவு செய்ய இயலாது என்பதால் இரண்டு முறை கையால் களை எடுக்க வேண்டும். குறுந்தானிய பயிர் வளர்வதற்கு 300 முதல் 350 மி.மீ., மழை தேவைப்படும்.
பயிர் பாதுகாப்பு
விதைத்த 25 முதல் 30 நாட்கள் வரை குருத்து ஈ தாக்குகிறது. இவற்றை கட்டுப்படுத்த கால தாமதமாக விதைப்பதை தவிர்த்தல் நல்லது. மணிக்கரிப்பூட்டை நோய் மட்டும் வரகு பயிரை அதிமாக தாக்கக்கூடியது. இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மேன்கோசப் அல்லது குளோரோதலோனியை ஒரு எக்டேருக்கு தேவையான விதையுடன் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
அறுவடை மற்றும் சேமிப்பு
கதிர்கள் காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். களத்தில் காயவைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும்.
