/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
உளுந்து சாகுபடியில் நேர்த்தியான மகசூல்
/
உளுந்து சாகுபடியில் நேர்த்தியான மகசூல்
PUBLISHED ON : செப் 28, 2016

அன்றாட உணவில் பயிறு வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உலகின் மொத்த பயறு வகை சாகுபடி பரப்பளவில் 32 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது. இதில் உளுந்து மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இது தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் தனிப்பயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ பயிரிடப்பட்டு விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் லாபம் பெற்று தரக்கூடிய பயிராக விளங்குகிறது. எனவே பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்ய உயரிய தொழில் நுடபங்களை பின்பற்றினால் உற்பத்தியை பெருக்கலாம்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 'டிரைக்கோடெர்மா விரிடி' நான்கு கிராம் அல்லது 'சூடோமோனாஸ்' பத்து கிராம் அல்லது 'கார்பென்டாசிம்' இரண்டு கிராம் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் 'ரைசோபியம்' மற்றும்
600 கிராம் 'பாஸ்போபாக்டீரியா' கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைநேர்த்தி செய்யாவிட்டால் இரண்டு கிலோ 'ரைசோபியம்' மற்றும் 'பாஸ்போ பாக்டீரியா' உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணல் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.
விதைப்பு முறை: விதைகளை 30 க்கு 10 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும். நெல் தரிசல் பயிரிடுவதாக இருந்தால் அறுவடைக்கு ஐந்து முதல் பத்து நாட்கள் இருக்கும் போது விதைகளை மண்ணில் தூவ வேண்டும். தூவும் போது மண்ணில் ஈரப்பதம் சரியாக இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ., இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.
உரம் இடுதல்: ஒரு எக்டேருக்கு தொழு உரம் 12.5 டன் இட வேண்டும். விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரி பயிராக இருந்தால் எக்டருக்கு 25 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 20 கிலோ பொட்டாஷ் மற்றும் பத்து கிலோ கந்தகச்சத்து இட வேண்டும். இறவை பயிராக இருந்தால் எக்டேருக்கு 55 கிலோ யூரியா, 310 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கிலோ பொட்டாஷ் மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இட வேண்டும்.
டி.ஏ.பி., கரைசல்: ஒரு எக்டேருக்கு தேவையான இரண்டு சதவிகித டி.ஏ.பி., தயாரிக்க பத்து கிலோ டி.ஏ.பி., உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு ஊற வைக்கவும். பின் அதிலிருந்து தெளிந்த கரைசலை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலையில் இலையில் நன்கு படும்படி பூக்கும் பருவத்தில் ஒரு முறையும் மீண்டும் 15 நாள் இடைவெளியில் ஒரு முறையும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். உளுந்தில் வறட்சி காலத்தில் இடைப்பருவ மேலாண்மை முறையாக இரண்டு சதவிகிதம் பொட்டாசியும் குளோரைடு மற்றும் 10 பி.பி.எம்., போரான் பரிந்துரைக்கப்படுகிறது. ராபி பருவத்தில் பொட்டாசியம் குளோரைடு தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
நீர் நிர்வாகம்: விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் உயிர்த்தண்ணீரும் மூன்றாவது நாளில் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும். பயிரின் அனைத்து நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் தேமல் நோய்: உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களான வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 8 பயிரிடுதல் வேண்டும். வரப்போர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தை பயிரிடுதல் வேண்டும். 'இமிடாகுலோ பிரிட்' 70 டபிள்யு 5 மில்லி / கிலோ என்ற அளவில் விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும். உளுந்தில் மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும். 'டைமெத்தோயேட்' 750 மில்லி / எக்டர் என்ற அளவில் விதைத்து 30 நாள் கழித்து தழைத்தெளிப்பு செய்ய வேண்டும்.
டாக்டர் எம்.குணசேகரன்
தலைவர், பருத்தி
ஆராய்ச்சி நிலையம்,
ஸ்ரீவில்லிப்புத்தூர்