PUBLISHED ON : செப் 28, 2016

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளின் தோழிகளில் தக்காளிக்கு முக்கிய பங்குண்டு. உணவுகளில் தக்காளியை தவிர்க்க இயலாது. காரைக்குடி அருகே மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவின் போது, அம்மனுக்கு தக்காளி பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதன் மூலம், தெய்வ ஆராதனைக்கு தக்காளியும் துணை நிற்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியம் அளிக்கும் ஆரஞ்சுப் பழத்திற்கு இணையாக, தக்காளிப் பழம் உடலுக்கு நல்ல பலத்தையும், ரத்த விருத்தியையும் அளிக்கக் கூடியது. இது ரத்தத்தை சுத்திகரித்து, சரும நோய்களை குணப்படுத்து கிறது. நரம்பு தளர்ச்சியை போக்குகிறது. கண் பார்வையை தெளிவாக்குகிறது. தாகத்தை தணிக்கிறது.
பொதுவாக ஆண்டு முழுவதுமே தக்காளியை பயிர் செய்யலாம். வடிகால் வசதியும், கார அமிலத்தன்மையும் உள்ள வண்டல் மண், தக்காளி பயிருக்கு மிகவும் ஏற்றது. தொழுஉரம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, போராக்ஸ், துத்தநாக சல்பேட் ஆகியவற்றை அவ்வப்போது இட்டு, மண்ணை அணைத்து விவசாயம் செய்ய வேண்டும்.
நல்ல விதைகள், உரிய நிலம், நீர் வசதி, ஊட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு, நோய் தடுப்பு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலே குறுகிய காலத்திலே அறுவடை செய்யலாம். காய் பழமாக மாறுகின்ற பொழுது குளோரோபில் நிறமிகளின் அளவு குறைந்து, கரோடின், ஆந்த்தோசன் ஆகிய நிறமிகளின் அளவுகள் அதிகரிப்பதால் தக்காளியின் தோல் இயல்பாகவே சிவப்பாக மாறுகிறது.
தக்காளிப் பழத்தில் வைட்டமின் 'சி', சுண்ணாம்பு சத்து அதிகளவில் அடங்கியுள்ளன. தோல், நரம்புகள் ஆகியவற்றை பாதுகாப்பதோடு, நோயை எதிர்க்கும் சக்தி கொண்டதாகவும் விளங்குகின்றன. மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகியனவையும் தக்காளி பழத்தில் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகமாக இயக்க சிட்ரிக் அமிலம் பெரிதும் உதவுகிறது. மாலிக் அமிலம் வயிற்றுப் பாகத்தில் கல் உருவாவதைத் தடுக்கின்றது.
செர்ரி எனும் சீமை தக்காளி: தென்னாப்ரிக்காவை தேசமாக கொண்டது. உருளை கிழங்கிற்கு சம்பந்தமானது என தக்காளியை கூறுவர். தாவர இயல் பிரகாரம் 'ஒரு வகை ரசம் நிறைந்த சிறு பழம்' (பெர்ரி) என வகுக்கப்பட்டுள்ளது. 18 ம் நூற்றாண்டில் தக்காளி இந்தியாவிற்கு வந்தபோது 'சீமை தக்காளி' என அழைத்தனர். மிகச்சிறிய வடிவத்தில் உள்ளவை 'செர்ரி ரகம்' என்ற 'சீமை தக்காளி' என ஆங்கிலேயர்களால் கூறப்பட்டது.
கண் கருவளையம் நீங்கும்: தக்காளிச்சாறு ரத்த விருத்தியைப் பெரிதும் அளிக்கிறது. தோலுக்கு பளபளப்பை பகிர்கிறது. கண்களில் தோன்றும் கருவளையம் நீங்கவும், கண்களின் ஓரங்களில் உண்டாகும் தோல் சுருக்கங்களைப் போக்கவும், தக்காளிப்பழ விழுதை அவற்றின் மீது பூசி குணம் அடையலாம். சருமப் பிணிகள் வராமல் காக்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண்களை ஆற்றுகின்றது. தக்காளிப் பழத்தில் நாட்டுத் தக்காளி, பெங்களூரு தக்காளி என இரண்டு ரகங்கள் உள்ளன. நாட்டு தக்காளி மிக மென்மையான தோலைக் கொண்டிருக்கும். சமைக்காமல் சாப்பிடுவதற்கு இந்த ரகத் தக்காளி மிகவும் சுவையாக இருக்கும்.
நவீன வணிகத்தின் நாடித்துடிப்பு: தக்காளியின் விலை 80 ரூபாய் வரை உயரவும் செய்யும், எட்டு ரூபாய் வரை இறங்கவும் செய்யும். விளைச்சல், வியாபார யுக்தி, சேமிப்பு ஆகியவற்றை சார்ந்து விலை இருந்து வருகிறது. தொழில் முறையிலே டொமட்டோ ரைஸ் பவுடர், டொமட்டோ பேஸ்ட், டொமட்டோ கெட் சூப் முதலான தயாரிப்புகள் நவீன வணிகத்திற்கு இதமாக அமைந்துள்ளன.
தக்காளிப் பழங்களை கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு அவற்றின் தோலை எளிதாக உரித்து விடலாம். பின் இவற்றை கொண்டு சுவையான சட்னி, பச்சடி, குழம்பு, குருமா, ரசம், சூப் தயாரிக்கலாம். தக்காளிச்சாதம் சாப்பிட உடல் உஷ்ணம் மாறும். கர்ப்பிணிகள் தினமும் தக்காளிப் பழங்களை தக்கவாறு உட்கொண்டால் பிறக்கும் குழந்தை சிவந்த தோல் நிறத்தோடு மிளிர வாய்ப்புள்ளது. நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க ஏற்றது தக்காளி.
- எஸ்.நாகரத்தினம்
முன்னோடி விவசாயி
விருதுநகர்