PUBLISHED ON : டிச 10, 2025

இந்தியாவில் 60 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 0.03 சதவீத அளவிற்கு மட்டும் நெல் வயலில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன.
மீன்வளர்க்க குறைந்தளவு நிலம் போதும். களையெடுக்கவும் மீன்களுக்கு உணவளிக்கவும் ஆட்கள் அதிகம் தேவைப்படாது. நெல் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
பனிதன், துளசி, சி.ஆர் 26077, ஏ.டி.டி.6,7, ராஜராஜன், பட்டம்பி 15,16 போன்ற நெல் ரகங்கள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. இந்த ரகங்கள் 180 நாட்கள் வயதுடையது என்பதால் நாற்று நட்டபின் மீன்வளர்ப்பை ஆரம்பிக்கலாம். சம காலத்தில் நெற்பயிரையும், மீன்களையும் வளர்ப்பது ஒருமுறை. அல்லது சுழற்சி முறையில் நெல், மீன் என மாற்றி மாற்றி வளர்க்கலாம். இதற்கு வயலில் வாய்க்கால், அகழி, சல்லடை போன்ற சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும்.
சுழற்சி முறை வளர்ப்பில் நெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்பு குளமாக மாற்றலாம். மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க வேண்டும். கெண்டை இன மீன்களை இம்முறையில் வளர்க்கலாம். 2 முதல் 3 செ.மீ அளவுள்ள குஞ்சுகளை வாங்கி விட்டால் மீனின் வளர்ச்சி 100 கிராம் அளவு இருக்கும் போது அறுவடை செய்யலாம்.
சமகால வளர்ப்பு
இதற்கு நிலத்தை 250 சதுர மீட்டர் உள்ள நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் அகழி தோண்டி வைக்கோலால் வலுப்படுத்த வேண்டும். நெல் வயலைச் சூழ்ந்திருப்பது போன்று இந்த அகழியை சிறு வாய்க்காலால் இணைக்க வேண்டும். இணைப்பு பகுதியில் சல்லடை அடைப்பு வைத்தால் மீன்கள் வெளியேறாது. இதில் வளர்க்கப்படும் கட்லா, ரோகு, மிர்கால் மீன்கள் குறைந்த ஆழத்திலும் சற்றே கூடுதல் வெப்பநிலையில் தாங்கி வளரும். அதோடு குறைந்த ஆக்சிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையன.
மேலும் நெல் வயல்களில் 'மேக்ரோ பிராச்சியம் ரோசன் பெர்ஜி' என்ற இறால் வகைகளை வளர்க்கலாம். 12 செ.மீ ஆழத்திற்கு மூங்கில் தண்டில் சல்லடைத் தடுப்பு அமைத்துப் பாதுகாக்க வேண்டும். இறால் குதித்து வெளியேறுவதை தடுக்க நீருக்கு மேல் மடை போல் தடுப்பு கட்ட வேண்டும்.

