/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக்கோழி வளர்ப்பு: நன்மைகள் ஏராளம்
/
நாட்டுக்கோழி வளர்ப்பு: நன்மைகள் ஏராளம்
PUBLISHED ON : மார் 07, 2018
தொழில் ரீதியாக தற்போது கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு பண்ணை அளவில் பராமரிக்கப்படும் கோழிகளுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறது. கிராமப் புறங்களில் பெண்கள் சாதாரண கொல்லைப்புறக் கோழி வளர்ப்பில் முறையான நோய்த்தடுப்பு முறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதனால் கோழிகள் இறப்பு விகிதம் கூடுதல் ஆவதுடன் பொருளாதார நஷ்டமும் ஏற்படுகிறது.
தோல் முட்டைகள்
இயற்கையிலேயே நாட்டுக் கோழிக்கறியின் சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்கும். நாட்டுக் கோழிகள் வெளியில் சென்று மேய்ந்து, பச்சைப்புற்களை சாப்பிடுவதால் கறியாக சமைக்கும் போது மணமாக உள்ளது. சில கோழிகள் தோல் முட்டையிடும். கிராமங்களில் தோல் முட்டையிடும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது, என பெண்கள் நினைக்கின்றனர். இதனால் அவ்வகையான கோழிகளை விற்று விடுவர் அல்லது அறுத்து குழம்பு வைத்து விடுவர். இதைப் போலவே நள்ளிரவில் கூவும் சேவல்கள், வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலாக முட்டையிடத் துவங்கும் கோழிகள் ஆகியவற்றையும் வீட்டில் வளர்க்கக்கூடாது, என்ற மூட நம்பிக்கையில் அக்கோழிகளையும் விற்று விடுகின்றனர். இவை தவறான எண்ணத்தில் ஏற்பட்ட வழக்கமாகும். அறிவியல் பூர்வமாக இவற்றுக்கு ஆதாரங்கள் கிடையாது.
கால்சியம் குறைபாடு
கால்சியம் சத்து குறைபாடு காரணமாகத்தான் கோழிகள் தோல் முட்டையிடுகின்றன. முட்டையின் ஓடு கால்சியம் சத்துக்களால் உருவாகிறது. தீவனத்தில் கால்சியம் சத்து குறையும் போது கோழிகள் மெல்லிய ஓட்டுடன் முட்டையிடும். இதை தோல் முட்டை என்பார்கள். இதனை தவிர்க்க தீவனத்துடன் சுண்ணாம்புச்சத்து அல்லது கிளிஞ்சல்கள் சேர்த்து கொடுக்கலாம். சுண்ணாம்பு நீரைத் தெளிய வைத்து, அந்த தெளிவு தண்ணீரையும் கோழித் தீவனத்தில் வைக்கலாம். இவ்வாறு செய்தால் கோழிகள் சுண்ணாம்பு சத்தினை உட்கிரகித்து ஓடுகளுடன் முட்டை இடும்.
மூக்கு இறகு திணிப்பு
நாட்டுக் கோழிகள் வளர்ப்பில் கிராமப்புற பெண்கள் கோழிகள் நீண்ட நாட்களுக்கு அடை காப்பதால் முட்டையிடவில்லையே என்று கருதி, அதனை தெளிய வைக்க முயற்சி செய்கின்றனர். அம்முயற்சிகளில் ஒன்று தான் மூக்கில் இறகை திணிப்பது. சிலர் அடை காக்கும் கோழிகளை, அந்தக் குணம் மாற வேண்டும் என்ற ஆத்திரத்தில் நீரில் அமுக்கி எடுப்பார்கள். இப்படியெல்லாம் அடைகாக்கும் கோழிகளை கொடுமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சளாக இருந்தால் தான் சத்து அதிகம், என நினைப்பவர்கள் உண்டு. அது தவறு. நாட்டுக்கோழிகள் வெளியில் மேயும்போது பச்சைப்புல்லைத் தீவனத்துடன் சேர்த்து சாப்பிடுகின்றன. 'சாந்தோபில்' எனும் மஞ்சள் நிறத்தை அடர்த்தியாக்கும் நிறம் கொடுக்கும் துகள்கள் புல்லில் இருந்து முட்டையின் மஞ்சள் கருவுக்குச் செல்வதால் முட்டையின் மஞ்சள் கரு அதிக அடர்த்தி மஞ்சளாகத் தோன்றும்.
நாட்டுக்கோழி வளர்ப்பு
பண்ணையில் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் தீவனக் கலவைகளே கோழிகளுக்கு கொடுப்பதால் பச்சைப்புல் தீவனத்துடன் சேர வாய்ப்பில்லை. அதனால் மஞ்சள் கரு வெளிரிய நிறத்தில் இருக்கும். நிறத்துக்கும், சத்துக்கும் சம்பந்தம் இல்லை. கிராமப்புற பெண்களே நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் செய்ய வேண்டிய முக்கியமான காரியம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி போடுவது தான். இத்தடுப்பூசி எல்லா கால்நடை மருத்துவமனைகளிலும் வாரந்தோறும் இலவசமாக போடப்படுகிறது. நாட்டுக்கோழி வளருங்கள்; வளம் பெறுங்கள்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.