/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி
/
பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி
பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி
பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி
PUBLISHED ON : நவ 19, 2014

ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் வயல் காணப்படும். உள்ளே நுழைந்தால், மாப்பிள்ளை சம்பா, கருங்குருணை, அம்பாசமுத்திரம், பூங்கார் என பாரம்பரியமிக்க ரகங்களான நெல் சாகுபடியும், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், உளுந்து ஆகிய சிறுதானிய பயிர்களும் புஞ்சை நிலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
செடிமுருங்கை உள்ளிட்ட கீரைவகைகள், பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு, காங்கேயம் போன்ற உயர்ரக மாடுகள் வளர்ப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயி ஆர்.முருகேசன் கூறியதாவது: யோகா ஆசிரியரான, எனக்கு விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அழிந்துவரும் விவசாயத்திற்கு புத்துணர்வூட்டும் வகையில் பாரம்பரியமிக்க நெல், தானியங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பலமுறை எனது தோட்டத்திற்கு வந்துள்ளார்.
அவரின் ஆலோசனையின் பேரில் முழுக்க...முழுக்க இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல் 2 ஏக்கரிலும், பூங்கார் 2 ஏக்கரிலும், அம்பாசமுத்திரம் 2 ஏக்கரிலும் நடவு செய்துள்ளேன். இதில், பூங்கார் வறட்சியை தாங்கி விளையும் நெல் பயிராகும். 70 முதல் 80 நாட்களில் மகசூல் கிடைக்கும்.
தற்போது இந்த ரக நெல் மகசூல் பருவத்தை எட்டியுள்ளது. நடவு செய்த நாள் முதல் 'பஞ்ச கவ்யம்' எனும் உரம் போட்டு வருகிறேன். இந்த உரம், மாட்டுச்சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்பட்டது. இதுபோன்ற இயற்கை உரமிடுவதால் பயிர் நன்றாக வளரும். பூச்சி தாக்குதல் இருக்காது.
ஏக்கருக்கு 30 மூடை பூங்கார் ரக நெல் மகசூல் கிடைக்கிறது. ஒரு மூடை 1,500 ரூபாய் வரை விலை போகிறது. இதனால், 2 ஏக்கர் பூங்கார் நெல் சாகுபடி மூலம் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைத்து வருகிறது. இதுதவிர, நாவல், நெல்லி, மா, வேம்பு, புங்கன், மகோகனி உட்பட 3,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன். பூசணி, வெண்டை, கத்திரி, கொத்தவரை உள்ளிட்ட காய்கறி செடிகளையும் நடவு செய்துள்ளேன்.
பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு 4 இடங்களில் 21 அடி ஆழமுள்ள பண்ணை குட்டைகளை வெட்டியுள்ளேன். 'மோட்டார் பம்பு செட்' மூலம் அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். எனது தோட்டம் மூலம் ஆண்டிற்கு 30 லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன், என்றார்.
ஆலோசனை பெற 94434 65991ல் தொடர்பு கொள்ளலாம்.
- ஆர். ராஜ்குமார்,
ராமநாதபுரம்.

