PUBLISHED ON : நவ 12, 2014

பொதுவாக வேம்பு கசக்கும். ஆனால், வேப்பர மர இனங்களில் சர்க்கரை வேப்ப மரம் என ஒரு ரகம் உள்ளது. இதன் இலையை அருந்த வாயெல்லாம் தித்திக்கும். காயம் சித்தியாகும். சிலேட்டுமம் அறும். தூய விந்து நாதம் சுத்தியாகும். இவ்வாறு சர்க்கரை வேம்பு குறித்து சித்தர் மகான் சிறப்புறச் செப்பியுள்ளனர்.
பிற வேம்பு வகையில் கருவேப்ப மரம், மலை வேப்ப மரம் ஆகியவை உள்ளன. ஆயினும் இவற்றின் இலை, கொழுந்து, பூ, முத்து, குச்சி, காய், பழம், பட்டை ஆகிய இயற்கைச் சாதனங்களும், படைப்புகளான நெய், பிண்ணாக்கு, பொடி முதலானவற்றின் பயன்பாடுகளில் மாறாத மருத்துவக் குணங்கள் மருவியுள்ளன. வேப்பங்குச்சியின் நுனியை டூத்பிரஷ் போன்று தட்டினால் அது பல் துலக்கப் பயன்படுகிறது. காய்ந்த வேம்புக் கட்டைகள் மேன்மையான மர வேலைப்பாடுகளுக்கு உதவுகின்றன. கறையான் அரிக்காது என்ற காரணத்தால்!
வேப்பமரக் காற்று உடலையும் உணர்வையும் நன்கு பேணுகின்றது. அந்த இதமான காற்றில் பிராணவாயு அதிகம் கலந்துள்ளது. வேப்ப மரத்திலே ஊஞ்சல், தொட்டில் கட்டி குழந்தைகளைத் தூங்க வைத்தால், சுகாதாரமான காற்று அங்கு வீச அதுகள் அருமையாகத் தூங்குமே!
எந்த மண் வகையிலும் வேப்ப மரம் நன்றாக வளரும். தரமான வேப்ப விதைகளை நிலத்தில் விதைப்பதன் மூலம் நல்ல பலன் பெறலாம். விதைகளை விதைப்பதோடு தொடக்கத்தில் அன்றாடம் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். இயல்பாகக் கழிகின்ற காய்ந்த வேற்றுமர இலை, தழைகளை இயற்கை உரமாக இட்டு வரலாம். ஏறத்தாழ ஒருமாத கால அளவில் துளிர் விடும். பிற்பட்டு சுயமாகவே அது வளரத் தொடங்கும். செடியின் தாக்கத்திற்கு சிறிது காலம் காய்ந்த உயரமான குச்சியைத் துணையாகக் கட்டி வைக்கலாம். நாளடைவில் கிளைகள் அடர்த்தியாக விரிந்து வளர்ந்து, கண்களுக்கு குளிர்ச்சியாக காணப்படும்.
வீட்டைச் சுற்றியுள்ள காலி இடங்களிலும், தோட்டங்களிலும், தோப்புகளிலும் வேப்ப மரங்களை வளர்ப்பது மிகவும் சிறந்தது. ஏப்ரல், மே மாதங்களில் கொத்துக் கொத்தாகப் பூக்கள் படர்ந்து காணப்படும். பச்சைநிறக் காய்களும், சதைப்பற்றுள்ள மஞ்சள் நிறப் பழங்களும் அளவற்று அமைந்திருக்கும்.
''சாதாரணமாக வேப்ப மரங்களின் பண்புகளை ஓதுதற்கு அரியது. ஜூரம், வாதம், மூல கணம், மந்தம், குன்மம், எரிபூச்சி ஆகியவற்றை இது ஒழிக்க வல்லது. சிரமம் இன்றி இலகுவாக மலமும் சிதறிப் போகும்'' என்கிறது சித்த மருத்துவம். மலட்டுப் புழுவையும், வயிற்றின் வலியையும், அலட்டு வாய்வையும் மலை வேம்பு அடக்கும் எனவும் அது அறிவுறுத்துகிறது.
கிருமி, குஷ்டம், மாந்தம், விஷம், ஜூரம், வைசூரி, புண் ஆகிய வியாதிகளை (ரம்பம் போன்று உருவமான) வேப்பிலை நீக்கிவிடும். வேப்பிலைக் கஷாயம் ஆஸ்த்மாவைக் களையும். (சித்தா சித்தாந்தம்).
பித்த மூர்ச்சை, நாத தோஷம், வாந்தி, அருசி, அடாத ஏப்பம் ஆகிய பிணிகளைப் போக்கும் ஆற்றல் (மிக சிறிதான வெள்ளை நிறமான) வேப்பம் பூவுக்கு உள்ளது. வாயு, பசியின்மை, குமட்டல், மயக்கம், வாந்தி முதலான பிணிகளுக்கு வேப்பம் பூ ரசம், துவையல் உட்கொள்ளல் நன்மை தரும்.
வேப்ப விதைக்கு விஷமும், ஜன்னியும் மாறும். நரம்பு வலிப்பு, வாதம், ஜன்னி, கிரந்தி, சொறிபுண், சிரங்கு ஆகிய நோய்களை வேப்பநெய் குணப்படுத்தும். தலைநோய், ஜன்னி வாதம் இவற்றை வேப்பம் பிண்ணாக்கு அகற்றும். குடலில் உள்ள புழுக்கள் மாய்வதற்கு, வேப்பங் கொட்டையில் வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிடலாம். வேப்பம் பழ சர்பத் சருமத்திலுள்ள தோல் வியாதிகளைப் போக்கும்.
வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களைக் குணப்படுத்தவும், குளியல் சோப் தயாரிக்கவும் பயனாகிறது. வேப்பிலைகளைக் குடிநீரில் இட்டுப் பருகி வந்தால், அதீத பித்த நீர் வெளியேறி ஆரோக்கியம் கிட்டும். இத்தகைய மருத்துவக் குணங்களினால், வேம்பு ஓர் அற்புதமான காயகற்ப மூலிகை என்கின்றனர். தமிழகத்தில் அந்த காலத்தில் போரிலும் போட்டியிலும் வென்றவர் வேப்பம் பூ மாலையைச் சூடுவராமே!
- எஸ்.நாகரத்தினம்
விருதுநகர்.

