/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
"மல்லிகை சாகுபடியில் மனம்போல வருமானம்'
/
"மல்லிகை சாகுபடியில் மனம்போல வருமானம்'
PUBLISHED ON : அக் 22, 2014

இருபோக நஞ்சை நிலத்தில் கரும்பு, நெல், வாழை பயிரிட்டு கிடைக்காத லாபம், மணக்கும் மல்லிகையை பயிரிட்டதால் கிடைக்கிறது என்கிறார் மதுரை விவசாயி ரங்கநாதன். மதுரை மஞ்சம்பட்டியில், கண்மாய் அருகே இவரது நஞ்சை நிலம் உள்ளது. பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் வரும்போது, தண்ணீர் கசியும் இருபோக சாகுபடி பகுதி என்பதால் நெல், கரும்பு, வாழை பயிரிட்டு வந்தார் ரங்கநாதன்.
இந்நிலத்தில் மல்லிகை பயிரிட்டால் என்ன என்று தூண்டினார் அவரது மனைவி. திருச்சியில் அவர்களது நிலத்தில் செய்த சாகுபடியை இங்கு செய்து பார்க்கலாம் என ரங்கநாதனுக்கும் தோன்றியது. இதையடுத்து பரீட்சார்த்தமாக 50 சென்ட் நிலத்தில் மல்லிகை சாகுபடி செய்தார். நஞ்சை நிலம். அதிலும் கண்மாய் அருகே தலைமடை பகுதியில் உள்ளது. எனவே பெரியாறு பிரதான கால்வாய் நிலத்தருகே செல்கிறது. மல்லிகைக்கு அதிக தண்ணீர் தேவையில்லை.
எனவே, பெரியாறு பிரதான கால்வாயில் கான்கிரீட் சுவர் எழுப்பி, நீர்க்கசிவை தடுத்தார். மல்லிகை சாகுபடியை துவக்கினார். இனி, அதன் பலனை அவரே கூறுகிறார்:
மல்லிகை சாகுபடியால் இப்போது மும்மடங்கு லாபம் பெறுகிறேன். தினமும் 200 கிலோ வரை மல்லிகை கிடைக்கிறது. மாதம் ஒரு டன் கிடைக்கும். இதனால் அரை ஏக்கர் சாகுபடியை 5 ஏக்கராக விரிவு படுத்தினேன். ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை கிடைக்கிறது.
அதேசமயம் நெல் சாகுபடியில் ஒரு ஏக்கரில் 3 மாதத்திற்கு ஒருமுறை ரூ. 20 ஆயிரம் வரையே கிடைத்தது. கரும்பு எனில் நெல்லைவிட சற்று கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கும். மல்லிகை சாகுபடி மிகுந்த லாபம் தருகிறது. அதனால் ஒருபோதும் விவசாயத்தில் நஷ்டம் என்று நான் கூறவே மாட்டேன். மல்லிகைக்கு முறையான பராமரிப்பு அவசியம். அதற்கான தொழில்நுட்பத்தை 'அட்மா' திட்ட அதிகாரிகள் வழங்கினர். இவ்வாறு அவர் கூறினார்.
மல்லிகை பயிரிட்டபின், தினமும் 100 பேர் வரை அவரிடம் பணியாற்றுகின்றனர். காலையில் பணியாற்றுவோர், பின் நூறுநாள் பணிக்கும் சென்றுவிடுவதால், இரட்டை சம்பளம் கிடைக்கிறது. அவர்களை தாராளமாக கவனிப்பதால், தொழிலாளர் பற்றாக்குறை இவருக்கு ஏற்படுவது இல்லை. இவரை தொடர்பு கொள்ள 90957 28851.
-ஜி.மனோகரன்,
மதுரை.

