PUBLISHED ON : ஜூன் 12, 2013
நல்ல ஆரோக்கியத்தைத் தரும் சிறு தானியங்களில் வரகு முக்கியத்துவம் வாய்ந்தது. சிறு தானியங்களில் வரகு அரிசி பல்வேறு சிறப்புத்தன்மை கொண்டது. வறட்சிப் பகுதியில் பசியைப் போக்க வரகு அரிசியைப் பயன்படுத்துவார்கள். கிராமங்களில் குறிப்பாக மலைவாழ் மக்களின் நிலையான உணவு வரகு ஆகும். இத்தானியங்கள் 25 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம். இத்தானியங்களுக்கு இடி தாங்கும் தன்மை உள்ளதால் நம் முன்னோர்கள் இத்தானியங்களை கோயில் கோபுர கலசத்தில் வைப்பார்கள்.
வரகில் ஏழு தோல் பகுதி உள்ளது. இவற்றை நீக்கியபின் வரகு அரிசியை உணவாக உபயோகிக்கலாம். வரகை கைக்குத்தல் அரிசியாக தயாரித்து உபயோகிப்பது நல்லது. இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ள ஒரு சிறுதானியம் வரகு ஆகும். அரிசியை சமைத்து சாப்பிடுவது போலவே வரகு அரிசியை சமைத்தும் உண்ணலாம். அரிசி உபயோகித்து தயாரிக்கும் எல்லா உணவுகளையும் வரகு அரிசியை உபயோகித்து தயாரிக்கலாம்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தேவை இல்லாத கொழுப்பு நீர், சதைகளை கரைக்க உதவுகிறது. வரகு அரிசியில் உள்ள பல மருத்துவ தன்மை, நுரையீரலில் ஏற்படும் வீக்கம், வயிற்றுப்போக்கு, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றை குணப்படுத்தக்கூடியது. வரகில் மற்ற நார்ச்சத்து 9 சதம், நார்ச்சத்து (டயட்டரி) 38 சதம், ரிபோபிளேவின் 144மிகி, பொட்டாசியம் 188 மிகி உள்ளது. இப்படி பல சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகளை கொண்ட தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வரகு அரிசி உபயோகித்து கலவைசாதங்கள் (தயிர்சாதம், புளிசாதம், தக்காளிசாதம், பிரியாணி), வரகு அவல், (வரகு, அவல் உபயோகித்து இனிப்பு, கார அவல், மசாலா அவல், அவல் இனிப்பு உருண்டை, அவல் பாயாசம் தயாரிக்கலாம்), வரகு அரிசி களி மிக்ஸ் (உப்பு மற்றும் இனிப்பு சேர்த்து தயாரிக்கலாம்), பொங்கல் (இனிப்பு மற்றும் கார பொங்கல்), வரகு அரிசி பாயாசம், முறுக்கு போன்ற பல உணவுகளை தயாரிக்கலாம். மற்ற குறுந் தானியங்களான சாமை, திணை, குதிரைவாலி போன்ற தானியங்களை உபயோகித்தும் பல சுவையான, சத்தான உணவுவகைகளை தயாரிக்லாம். இதற்கான பயிற்சி மதுரை மனையியல் கல்லூரியில் வழங்கப்படுகிறது.
டாக்டர் சி.பார்வதி, மதுரை-625 104
0452-242 4684, 94422 19710.

