PUBLISHED ON : நவ 30, 2016

பப்பாளி சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மாவுப்பூச்சி தாக்குதல். பப்பாளி காய்க்கும் பருவத்தில் எங்கிருந்தோ வரும் மாவுப்பூச்சிகள் கொத்துக்கொத்தாக காய்கள் மீதும், இலைகள், தண்டுகளின் இடுக்குகளை முற்றிலும் ஆக்கிரமித்து சுவற்றிற்கு வெள்ளையடித்தது போல் ஒட்டிக்கொள்ளும். இவற்றை அழிப்பது மிகவும் கடினம் என்பதால் பப்பாளி சாகுபடி விவசாயிகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவுப்பூச்சி நோய் அறிகுறிகள்
தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமாகி காய்ந்து, வளைந்து, நெளிந்து வளர்ச்சி குன்றிய குருத்துக்கள் காணப்படும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.
பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் காணப்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் கேப்னோடியம் எனப்படும் கருநிற பூசணம் படர்ந்து காணப்படும்.
நோயை கட்டுப்படுத்தும் முறை
பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களை செடிகளை அழித்து நிலத்தை சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும் போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (எக்டேருக்கு 10 கிலோ) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளிக்க வேண்டும்.
தயோமீத்தாக்சாம் 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். குளவி ஒட்டுண்ணியான அசிரோபேகஸ் பப்பாயினை வயலில் விட்டு கட்டுப்படுத்த (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
