/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பல்லடம் பகுதியில் பசுமையான கொத்தமல்லி கீரை
/
பல்லடம் பகுதியில் பசுமையான கொத்தமல்லி கீரை
PUBLISHED ON : மார் 16, 2011

பல்லடம் பகுதியில் கரிசல் மண் பகுதி அதிகமாக உள்ளது. கரிசல் மண் பகுதியில் கொத்தமல்லி கீரை பாசனப்பயிராக சாகுபடி செய்யப்படுகின்றது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் மிகவும் கவனத் தோடு பாடுபட்டு ஏக்கரில் நம்ப இயலாத அளவிற்கு மகசூல் எடுக்கின்றனர். விவசாயிகள் குளிர் காலத்திலும், கோடை யிலும் கொத்தமல்லியை கீரைக்காக மட்டும் சாகுபடி செய்கின்றனர். தான்ய உற்பத்தியாக செய்வதில்லை. குளிர்கால சாகுபடி நவம்பரில் துவங்குகின்றது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப் படுகின்றது. இந்தக் கட்டுரையில் குளிர்கால சாகுபடி பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சாகுபடி முறைகள்: சாகுபடி நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக டிராக்டர் கொண்டு உழுது சமன்படுத்தி பின் பாத்திகள் அமைக்கப்படுகின்றது. பார் சால் போட்ட நிலத்தில் பாரின் மீது நேர்கோடுகள் போட்டு அந்த கோட்டில் விதைகளை வரிசையாகப் போட்டு மண்கொண்டு மூடப் படுகின்றது. பின் பாரின் மேல் கரண்டியால் கீறி நீர் பாய்ச்சப் படுகின்றது. விதைத்த 10-12 நாட்களில் விதைகள் சீராக முளைத்துவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக்கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்கப்படுகின்றது. இதனை மிகவும் கவனமாகவும் விஞ்ஞானி களின் சிபாரிசுகள்படியும் செய்யப்படுகின்றது. தவறு நேர்ந்தால் விதைகள் முளைப்பதில் கடும் பாதிப்பு ஏற்படும். கோடைப்பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் உபயோகப்படுத்துவதே கிடையாது. சாகுபடியில் 20ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடப்படுகின்றது. பயிர் பாதுகாப்பிற்கு 'பர்பெக்ட்' 'மானோகுரோட்டோபாஸ்' கவனமாக தெளிக்கப்படுகின்றது. விவசாயிகள் இலைவழி உரமாக 19:19:19ஐ 50 கிராம்/டாங்க் 30வது நாளில் தெளிக்கப்படுகிறது. விவசாயிகள் சிறந்த ரகத்தை சாகுபடி செய்ய முயற்சிகள் எடுக்கின்றனர். உபயோகிக்கும் விதை விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைக்க வேண்டும். விதைபோட்டு அது அறுவடைக்கு வரும்போது அனைத்து இலைகளும் ஒரே சீரான மற்றும் அழகிய இலைகளாக காட்சிகொடுக்கும். இலையாக விற்பனை செய்தால் அழகு மிக முக்கியம். இவை அனைத்தையும் ஒருசேர கொண்ட ரகம் 'ராம் செஸ்' மட்டுமே. இது பூச்சி, மருந்துகள் விற்கும் கடையில் கிடைக்கின்றது. வெற்றிபெற விரும்பும் விவசாயிகள் இந்த ரகத்தை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்கிறார்கள். பல்லடம் பகுதியில் கொத்த மல்லி கீரைக்கு கேரளாதான் பிரதான மார்க்கெட் ஆகும். மேலும் உள்ளூர் சந்தையும் உண்டு. திருப்பூர், கோவை பகுதிகளில் நல்ல மதிப்பு உண்டு. சிறு கட்டுகளாக மாற்றி விற்னை செய்தால் லாபம் 20% வரை உயரும்.
விவசாயி ஆர்.சிவகுமார், சித்தநாயக்கனூர் பாளையம், கரடிவாவி, சூலூர் தாலுகா, (98650 19625) ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.11,600 ஆகும் என்றும் அறுவடைக்கு ஆகும் செலவு, ஆள் கூலி இவைகளை மல்லியை விலைக்கு வாங்கு பவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.
மகசூல் மற்றும் லாபம்: கொத்தமல்லி கீரை 50-55 நாட்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50-55 நாட்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக கவர்ச்சியாக இருக்கும். இம்மாதிரியான சரக்கிற்கு நல்ல விலை கிடைக்கும். ஏக்கரில் மகசூல் 6000 கிலோ. ஒரு கிலோ விலை ரூ.10 ஆக இருக்கும்போது மொத்த வரவு ரூ.60,000. இதில் சாகுபடி செலவு ரூ.11,600 ஆகும்போது கிடைக்கும் லாபம் ரூ.48,400 ஆகும். சாகுபடியில் இந்த அளவு லாபம் கிட்டுமாவென்று கேட்டபோது, நிச்சயமாக இந்த அளவு லாபம் கிடைக்கின்றது என்று பளிச்சென்ற பதில் பல்லடம் விவசாயிகளிடம் இருந்து கிடைக்கின்றது.
-எஸ்.எஸ்.நாகராஜன். 

