PUBLISHED ON : ஜன 10, 2018

பசுக்களுக்கும், வளரும் கால்நடைகளுக்கும் குறிப்பாக காளைக்கன்றுகளுக்கும் தீவனம் கொடுக்கும் போது வைட்டமின் 'ஏ' சத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகள் உணர வேண்டும்.
வைட்டமின் ஏ சத்து கூடுமானவரை கால்நடைகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை கால்நடைகள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும், நோய்க்குறிகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
வாயின் உட் பாகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மெல்லிய சவ்வு அமைந்து உள்ளது. அதற்கு 'மியூகஸ் சவ்வு' என பெயர். இது போன்ற 'மியூகஸ் சவ்வு' உணவு பாதைகளான வாய், இரைப்பை, வயிறு, குடல் ஆகியவற்றிலும், சுவாச உறுப்புகள், சிறுநீர் புறவழி மற்றும் பெண் குறியிலும் தொடர்ச்சியாக மூடியிருக்கிறது.
இந்த மியூகஸ் சவ்வில் எங்காவது சிறு விரிசல் ஏற்பட்டால் நோய்க்கிருமிகள் சுலபமாக உடம்பில் உள்ளே புகுந்து விடும். வாயில் உள்ள மியூகஸ் சவ்வில் விரிசல் ஏற்பட்டால் அதுதான் வாய்ப்புண் என்று சொல்லப்படுகிறது. மியூகஸ் சவ்வுப்படலம் திடமாக இருப்பதற்கும், அவை கிழிந்து விடாமல் இருப்பதற்கும் வைட்டமின் ஏ சத்து மிக அவசியமாக இருக்கிறது.
வைட்டமின் ஏ சத்து உடம்பில் குறைவதால் மனிதர்களுக்கு மட்டுமல்லாது மாடுகளுக்கும் மாலைக்கண் நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் சிலர் பச்சை தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுப்பதே இல்லை.
வைக்கோலும் கழு நீருமே சாப்பிட கொடுக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மாலையில் இருட்டத் தொடங்கியதும் நடப்பதற்கோ, பாதையை கண்டுபிடித்து போவதற்கோ தடுமாறும்.
கண்ணில் நீர் அதிகமாக சுரக்கும். இரவு நேரங்களில் ஒளியை கண்டாலே அவற்றின் கண்கள் கூசும். இது நாளடைவில் கண் பார்வை பாதிப்பை ஏற்படுத்தும்.
நோய்க்கான காரணங்கள்
கண்களில் 'ரெடினா' எனும் கருப்புத்திரை உள்ளது. இருட்டில் பார்வை தெரிவதற்கு இந்த ரெடினா சுருங்கி விரிந்து உதவுகிறது. அதாவது ஒளி அதிகமாக கண்ணில் பட்டால் ரெடினா சுருங்கும். இருள் போன்ற சமயங்களில் ரெடினா விரிவடையும்.
இது இவ்வாறு சுருங்கி விரியும் சமயத்துக்கு ஏற்ற மாதிரி வேலை செய்ய உதவும் மூலப் பொருள் தான் வைட்டமின் ஏ. அது காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது போன்ற இன்றியமையாத ஒன்று. ரெடினா சரிவர சுருங்கி விரியாது. எனவே தான் பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. காளை மாடுகள் வளர்ப்பவர்கள் கவனமுடன் அக்கறை காட்ட வேண்டும்.
ஏனென்றால் கிராமங்களில் பகல் ஆனாலும், இரவானாலும் மாட்டு வண்டி பயணம் செய்ய காளைகள் தானே உதவும். அவைகளுக்கு மாலைக்கண் நோய் ஏற்பட்டால் பயணம் தடைபடும் அல்லவா.
மாலைக்கண் குறைபாட்டை தீர்க்க பசும் தீவனங்களான புல், குதிரை மசால், வீரிய ரக பசும்புற்கள் (கோ 3, கோ 4). இவற்றில் எதாவது ஒன்றை கால்நடைகளின் தீவனத்தில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
மாலைக்கண் நோயை தீர்க்க மீன் எண்ணெய்யும் கொடுக்கலாம். விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் தங்களின் ஒரு சிறிய பகுதியில் பசும்புல் தீவனங்களை பயிர் செய்து, பசுந்தீவன தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும்.
தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி. ராஜேந்திரன்
இணை இயக்குனர் (ஓய்வு)
கால்நடை பராமரிப்பு துறை.

