/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
செங்காந்தளை தாக்கும் இலைக்கருகல் நோய்
/
செங்காந்தளை தாக்கும் இலைக்கருகல் நோய்
PUBLISHED ON : ஜன 10, 2018

தமிழகத்தின் மாநில மலர் செங்காந்தள். சர்வதேச அளவில், இதன் உற்பத்தியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், கரூர், சேலம், அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பயிடப்படுகிறது. இப்பயிரின் விதைகளில் கேன்சர் மற்றும் மூட்டுவலி நோய்களை தடுக்கும் வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளதால், வெளிநாடுகளுக்கு அதிகளவில், ஏற்றுமதி செய்யப்படுகிறது.
செங்காந்தள் மலர் சாகுபடி, கிழங்கு மூலம் ஆகஸ்ட் மாதத்தில் நடவு செய்யப்பட்டு, 160 முதல் 180 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.
இச்சமயத்தில், இப்பயிரை தாக்கக்கூடிய வேர் அழுகல் மற்றும் இலைக்கருகல் நோயால் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. செடிகளை தாக்கும் பூஞ்சாணங்கள் எவை, நோய் தாக்குதல் ஏற்பட காரணம், அறிகுறிகள், கண்டறியும் வழிமுறை, தடுக்கும் முறைகள் குறித்து செங்காந்தள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
நோயின் அறிகுறிகள்
மண்ணில் வாழும் 'மெக்ரோபோமினா பேசியோலினா,' 'ஸ்கிளிரோசியம் ராலப்சி', பூஞ்சாணங்கள் கிழங்குகள் மூலம் செடிகளை தாக்கி வேர் அழுகல் நோயை ஏற்படுத்துகின்றன.
நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள், மஞ்சள் நிறத்துடன் வாடி இருக்கும். நோய் தீவிரமடையும் போது தண்டு மற்றும் வேர் பகுதி முழுவதும் அழுகி, செடி முற்றிலுமாக வாடி விடுகிறது.
இலைக்கருகல் நோயானது, 'அல்டர்நேரியா அல்டர்நேட்டா' பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. நோயின் அறிகுறிகளாக முதலில் சிறுவட்ட அல்லது நீள் வட்ட புள்ளிகள் தோன்றும், பின் இந்த புள்ளிகள் ஒன்றிணைந்து இலைக்கருகல் நோயை ஏற்படுத்தும். நோய் தீவிரமடையும் போது பூஞ்சாண வித்துக்கள் தண்டு மற்றும் மலர்களுக்கு பரவி கருகலை உண்டாக்கும். இந்த பூஞ்சாண வித்துக்குள் காற்று, மண் மற்றும் வாய்க்கால் தண்ணீரின் மூலம் மற்ற செடிகளுக்கும் பரவி நோயை ஏற்படுத்துகிறது.
நோய் மேலாண்மை
வேர் அழுகல் நோயின் தீவிரம் அதிகமாக இருப்பின், செடியை சுற்றி 'கார்பன்டாசிமை' லிட்டருக்கு, ஒரு கிராம் வீதம் அல்லது 'காப்பர் ஆக்ஸி குளோரைடை' லிட்டருக்கு 2.5 கிராம் வீதம் கலந்து, பத்து நாள் இடைவெளியில் இரண்டு முறை மண்ணில் இடலாம்.
இலைக்கருகல் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த, ஒரு கிராம் 'குளோரோதலோனில்' அல்லது 'டெவுகோனேசோலை' லிட்டருக்கு, ஒரு கிராம் வீதம், 15 நாள் இடைவெளியில் இரண்டு முறை செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட இலைகள் மற்றும் களைச்செடிகளை உடனடியாக அப்புறப்படுத்துதல், உயிர் நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழு உரம் இடுதல் மூலம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மூலிகை பயிர் என்பதால் செங்காந்தள் சாகுபடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும், என கோவை தோட்டக் கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர்கள் திரிபுவன மாலா, இளையபாரதி, ராஜாமணி தெரிவித்து உள்ளனர்.
தொடர்புக்கு 0422 661 1365.

