PUBLISHED ON : அக் 02, 2019

தமிழகத்தில் பரவலாக காணப்படும் மரங்களில் வேம்பும் ஒன்று. விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் வேம்பின் பயன் அறிந்து வேம்பு இலைகளை கிருமி நாசினியாக அம்மை நோய்க்கு பயன்படுத்தினர். வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை உரமாக வயலில் இட்டு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தினர். ஆனால் நாகரிக வளர்ச்சியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை விட்டு விட்டோம்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை வேம்பின் பூ மற்றும் இலைகளின் சாறுடன் வெள்ளைப்பூண்டு சாற்றை சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பதால் பூச்சிகள் இலைகள் மற்றும் காய்களை தாக்குவது குறைக்கலாம்.
பூச்சிகள் அதன் முட்டைகளை செடிகளில் இடாமல் இருக்க வேப்பெண்ணெய்யுடன், எலுமிச்சை சாறு 50 மி., ஒட்டும் திரவம் (ஷாம்பு கூட பயன்படுத்தலாம்) ஆகியவற்றை கைத்தெளிப்பானில் கலந்து தெளிக்கலாம். பெரும்பாலும் நிலத்தில் விளையும் பயிர்களை மண்ணில் கூட்டுப்புழுவாக இருக்கும் பூச்சிகளே அதிகமாக தாக்கும். அவற்றை கட்டுப்படுத்த ஆழமாக உழவு செய்து கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு 100 கிலோ, ஒரு ஏக்கர் என்ற அளவில் அடியுரமாக பயன்படுத்தி கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். வேப்ப மரங்கள் உள்ளவர்கள் வேப்பங்கொட்டைகளை எடுத்து சிறிதளவு நசுக்கி 10 லிட்டர் கோமியம் அல்லது 10 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து அவற்றை மறுநாள் வடித்து வேப்ப எண்ணெய்க்கு மாற்றாக வயலில் தெளிப்பது நல்ல பலன் தரும். மேலும் வடிகட்டிய கொட்டைகளை கடைசி உழவில் வேம்பம் புண்ணாக்கிற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
- த. விவேகானந்தன், துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.
94439 90964

