
'பிரதமர் கிசான் மான்தான் யோஜனா' எனும் திட்டமானது சிறு, குறு விவசாயிகளின் நலன், முதுமைக்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளது அற்புதமான திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும் போது அவர்களுக்கு மாதம் ரூ.3,000 வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். 18 முதல் 40 வயது வரையிலான சிறு, குறு விவசாயிகள் தங்கள் பெயர், விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். 18 வயதிற்கு ரூ.55 முதல் 40 வயதிற்கு ரூ.200 வரை பிரீமியம் செலுத்த வேண்டும். விவசாயிகள் 60 வயது வரை இந்த நிதியை மாதம், காலாண்டு, அரையாண்டு என்ற கணக்கில் செலுத்த வேண்டும். அவரவர் செலுத்திய தொகைக்கு ஏற்ப மத்திய அரசு தனது பங்கை செலுத்தும். இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு 61 வயது முதல் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3,000 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
வயதான காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தொகை உதவியாக இருக்கும்.
ஒரு குடும்பத்தில் உள்ள கணவர், மனைவி இருவரும் தனித்தனியாக இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இடையில் விலக விரும்பினால் 5 ஆண்டுக்கு பிறகு வங்கி வட்டி வகிதத்தில் திருப்பி தரப்படும். திட்ட காலத்தில் பிறகு இறக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் மனைவி அல்லது வாரிசுதாரருக்கு மாதம் ரூ.1,500 அவரின் இறுதி காலம் வரை வழங்கப்படும்.
பிரதமரின் கிசான் சமான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அத்திட்டத்தின் வங்கி கணக்கு வாயிலாக ஓய்வூதிய திட்ட தவணையை செலுத்தலாம். இத்திட்டதில் இணைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, நிலம் தொடர்பான ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பயன் பெறலாம். 40 வயதை கடந்த விவசாயிகள் குடும்பத்தினர் பெயரில் இணையலாம். இ.பி.எப்.ஓ., என்.பி.எஸ்., அரசு ஊழியர், வரி செலுத்துவோர் சேர இயலாது.
- எஸ். சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.
63746 95399

