/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
தென்னை மரம் ஏறுவோருக்கான இன்சூரன்ஸ் திட்டம்
/
தென்னை மரம் ஏறுவோருக்கான இன்சூரன்ஸ் திட்டம்
PUBLISHED ON : நவ 13, 2013

தமிழகத்தில் தென்னை மரங்களில் ஏறி பழுது பார்க்க, காய்களைப் பறித்துப்போட, குருத்தழுகல் நோய் வந்தால் மருந்து வைக்க ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இங்கு மட்டுமல்ல நாடெங்கும் மரமேறிகள் பற்றாக்குறை பெருமளவில் காணப்படுகிறது.
இளநீர் தேவை அதிகரித்துவிட்ட நிலையில் அடிக்கடி மரமேறிகள் தேவைப்படுகின்றனர். இத்தொழில் ஆபத்தானதாக இருப்பதால் தெரிந்தவர்கள்கூட இத்தொழிலைச் செய்ய முன்வருவதில்லை.
தென்னை மரம் ஏறும் வேலையில் ஏற்படக்கூடிய விபத்துக்களுக்கு போதிய அளவில் இழப்பீடு வழங்கும் வகையில் ''கேர சுரக்ஷா'' என்னும் காப்பீடு(இன்சூரன்ஸ்) திட்டத்தை இந்திய அரசின் ''இந்திய தென்னை வாரியமும்'', இந்திய அரசுக்குச் சொந்தமான 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' கம்பெனியுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் பயனாக தென்னை மரம் ஏறும் வேலையைச் செய்ய அதிகநபர்கள் முன்வரக்கூடும் என்றும், அதன்மூலம் மரமேறிகள் பற்றாக்குறை நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மரமேறி இத்திட்டத்திற்கு செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை (காப்பீடு கட்டணம்)யின் 75% தென்னை வளர்ச்சி வாரியத்தால் கட்டப்படும். 25% மட்டுமே மரமேறி செலுத்த வேண்டும்.
'தென்னை மரத்தின் நண்பர்கள்' என்ற புதிய திட்டத்தின்கீழ் தென்னை மரம் ஏறும் பயிற்சி பெறும் பயிற்சியாளர்கள், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் இத்திட்டத்தில் இலவசமாக சேர்த்துக்கொள்ளப்படுவர். 100% பிரீமியத் தொகையை இவர்களுக்காக வாரியமே செலுத்திவிடும்.
மரம் ஏறுபவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அதிகபட்சமாக ரூ.1,16,750/- (ரூபாய் ஒரு லட்சத்து பதினாராயிரத்து எழுநூற்று ஐம்பது) வரை இழப்பீடு வழங்கப்படும். மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டால் மரணம், நிரந்தர ஊனம், மருத்துவமனை செலவுகள், ஆம்புலன்ஸ் ஊர்தி செலவு, மாதாந்திர வேலை இழப்பீடு, மரணம் அடைந்தவரை அடக்கம் செய்ய ஆகும் செலவுவரை அனைத்து செலவுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
கேர சுரக்ஷா காப்பீடு திட்டத்தில் சேர ஒரு நபருக்கு ரூ.145/- (சேவை வரி உட்பட) ஆகும். இதில் 25% அதாவது ரூ.36.50 மட்டும் மரமேறி பயனாளி செலுத்த வேண்டும். மீதமுள்ள 75% பிரீமியத்தை ரூ.109.50ஐ தென்னை வளர்ச்சி வாரியம் பயனாளி சார்பாக செலுத்திவிடும்.
-எம்.ஞானசேகர்,
97503 33829.

