PUBLISHED ON : ஜன 08, 2025

விவசாயத்திற்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையம்.
நவீன கருவிகள், தொழில்நுட்பங்களை ஒரு குறிப்பிட்ட இடம், சூழ்நிலைக்கேற்ப பாரம்பரிய நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்து குறுகிய இடத்தில் பல சாகுபடி நுட்பங்களை பயன்படுத்தி சிறந்த பலனை பெறுவதற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் உதவுகிறது. இதில் மாடு வளர்ப்பு, ஆடு, மீன், கோழி வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, சாணஎரிவாயு ஆகியவற்றை விவசாயத்தோடு தொடர்பு படுத்தி லாபகரமாக்க வேண்டும்.
இயற்கையுடன் கூடிய மண், நீர், காற்று வளங்களைப் பயன்படுத்தி நிலையான உற்பத்தி தரக்கூடிய உயிரியல் காரணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரி விவசாயிகளும் ஒன்றிரண்டு ஏக்கர் நிலமுள்ள விவசாயிகளும் ஆண்டு முழுவதும் விவசாயத்தொழிலை மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. இயற்கையின் விளைவுகளாலும் மற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் விவசாயத்தை எப்போதும் வெற்றிகரமாக செய்ய முடிவதில்லை. இதற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதே தீர்வு.
பண்ணைப் பொருட்கள், பண்ணைக்கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணை கழிவுப் பொருட்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு உரச் செலவுகளைக் குறைப்பது அவசியம்.
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பண்ணைத் திட்டம் அமைக்கும் போது நன்செய், புன்செய், தோட்டக்கலை நிலங்களுக்கு ஏற்ப பயிர்த் திட்டத்தை அமைக்க வேண்டும். அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியாக பலன் தரக்கூடிய ஒன்றிரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உபதொழில்களுக்கு தேவையான இடுபொருட்களை பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும்.
ஒரு உப தொழிலில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக்கலவை தயாரிக்க வேண்டும். பயிர் சுழற்சியைப் பொறுத்தவரை முதல் போகத்தில் நெல் பயிரிட்டால் இரண்டாம் போகத்தில் பயறு, மூன்றாம் போகத்தில் மக்காச்சோள சாகுபடி செய்யலாம். விவசாயத்துடன் இணைந்து தோட்டக்கலை (மா, வாழை, காய்கறி பயிர்கள்), கால்நடை(ஆடு, மாடு, புறக்கடை காடை வளர்ப்பு, கோழி, வாத்து வளர்ப்பு), மீன்வளர்ப்பு தொழிலையும் ஒருங்கிணைத்து செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நெல் வளர்ப்பு, உளுந்து, பயிர் வளர்ப்பு மற்றும் நெல்லுடன் கூடிய மீன் வளர்ப்பு முக்கிய கூறுகளாக பார்க்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் முக்கியமாக கூட்டுமீன் வளர்ப்பு, ஜிலேபி மீன் வளர்ப்பு மற்றும் நாட்டுக் கெண்டை மீன் வளர்ப்பை செயல்படுத்தலாம். மீன்வளர்ப்பு குளத்தின் கரைகளில் தோட்டக்கலை பயிர்கள் வளர்க்கப்பட்டு ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.
மதிப்பு கூட்டல் அவசியம்
விளைபொருட்களை அறுவடை செய்து அப்படியே விற்றால் லாபம் குறைவாக கிடைக்கும். அவற்றை மாவுப்பொருளாக, தின்பண்டமாக, நுாடுல்ஸ் போன்ற உணவுப்பொருளாக மதிப்பு கூட்டி தயாரிக்கும் போது லாபம் இருமடங்காகும். எண்ணெய் தயாரித்தபின் அவற்றின் புண்ணாக்கை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி தீவனச் செலவை குறைக்கலாம். காய்கறிகள் அதிகமாக விளையும் போது அவற்றை உலரவைத்து வற்றலாக்கி, ஊறுகாயாக மாற்றி சந்தைப்படுத்தலாம்.
பண்ணையில் இருந்து மீன்களை குளத்தில் இருந்து பிடித்து சீசனுக்கு ஏற்ப கூடுதல் விலைக்கு விற்கலாம். அல்லது மீன் ஊறுகாய், மீன்தொக்கு, மீன் கறி, மீன் கேக், மீன் பிஸ்கெட், மீன் நுாடுல்ஸ், மீன் பாஸ்தா, உலர் மீன்கள், மீன் சட்னி பொடி, மீன் பப்ஸ், மீன் ரோல்ஸ், சமோசா, பஜ்ஜி, பக்கோடா, மீன் 65 ஆக மதிப்பு கூட்டியும் லாபகரமான தொழிலாக மாற்ற முடியும்.
மதிவாணன், தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்)
அனிதா, ஆராய்ச்சியாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
சிக்கல், நாகப்பட்டினம்,
அலைபேசி:97875 86190