PUBLISHED ON : ஜூன் 12, 2013

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே எஸ்.புளியங்குளத்தில், தென்னையில் ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்வதில், விவசாயி ஆர்வம் காட்டுகிறார். புளியங்குளம் விஜயன். இவரது குடும்பத்திற்கு சொந்தமாக அதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. கிணற்றுப்பாசனம் வேறு. கரிசல், வண்டல் கலந்த மண்வளம். தென்னந் தோப்பில் ஏற்கனவே ஒரு பகுதியில் ஊடுபயிராக வாழை பயிரிட்டுள்ளார். ஆடுகள், மாடுகள், கோழிகள் வளர்க்கிறார்.
விஜயன் கூறியதாவது: 'கோகோ' பயிரிட, திருப்பரங்குன்றம் ஒன்றிய தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர். அவர்கள், 'தண்ணீர் வசதி, இதமான சூழ்நிலை தேவை. மூன்றாண்டுகளில் பலன்தரும். ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்,' என்றனர். மூன்றாண்டுகளுக்கு முன் இலவசமாக 2000 'கோகோ' கன்றுகள் மற்றும் உரம் வழங்கினர். தென்னையில் 8 ஏக்கரில் ஊடுபயிராக 'கோகோ' நடவு செய்துள்ளோம்.
எங்களைப்போல் 10 விவசாயிகளுக்கு கன்றுகள், உரங்களை மானியமாக வழங்கினர். 'கோகோ'விற்கு அதிக தண்ணீர் வசதி இருக்க வேண்டும். தற்போது கோடை காலம் என்பதால், கிணறில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள் மழை பெய்யாவிடில், சிரமம்தான்.
தற்போது பலன்தரத்துவங்கியுள்ளது. சாக்லைட், கேக்குகளில் கிரீம் தயாரிக்க 'கோகோ' பயன்படுத்துகின்றனர். 'கேட்பரீஸ்' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஒரு கிலோ 'கோகோ' விதைகளை 140 ரூபாய்க்கு வாங்குகின்றனர், என்றார். விபரங்களுக்கு 97897-07068 ல் தொடர்பு கொள்ளலாம்.

