
புதிய நூற்புழு பிரச்னைகள்: மாறிவரும் பயிர் சாகுபடி முறைகளாலும் உலக வெப்பமடைதல் காரணமாகவும் தற்சமயம் புதிய நூற்புழுக்கள் தோன்றுகின்றன. செம்மைநெல் சாகுபடி முறையில் நெல்லைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மேலும் நெற்பயிரில் முட்டைக்கூடு நூற்புழுக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகின்றன. இதற்கான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் சமவெளிப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பீட்ரூட் வேர்முடிச்சு நூற்புழு தாக்கம், கொய்யாவில் வேர்முடிச்சு தாக்குதல் போன்றவை சமீபகாலத்தில் புதியதாய் தோன்றும் பிரச்னையாகும்.
பசுமைக் குடிலில் வளர்க்கப்படும் பயிர்களில் வேர்முடிச்சு நூற்புழுக்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. பசுமை சூழலில் காணப்படும் அசாதாரணமான வெப்பநிலையும் கரியமில வாயுவின் அளவும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நூற்புழுக்களை கட்டுப்படுத்த தீவிர சாகுபடி பகுதிகளில் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் கார்போபியூரான் குருணை மருந்தினை எக்டருக்கு 33 கிலோ என்ற அளவில் இடலாம்.
சணப்பை போன்ற பசுந்தாள் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை கவர்ந்திழுத்து அதனை வளரவிடாமல் செய்வதன் மூலமும் அப்பயிரையே மடக்கி உழுது பசுந்தாள் உரமாக பயன்படுத்துவதன் மூலமும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வணிகரீதியாக கிடைக்கவல்ல சூடோமோனாஸ் புளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி மற்றும் வேர் உட்பூசணத்தை பரிந்துரைக்கப்படும் அளவிலும் முறையிலும் இட்டு நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். நூற்புழுக்களால் ஏற்படுத்தப்படும் பயிர் வளர்ச்சி குறைதல், இலைகள் வெளிர்ந்து காணப்படுதல், பயிர் வாடல் போன்ற அறிகுறிகள் வயல் முழுவதும் ஒரே சீராக இல்லாமல் திட்டுத் திட்டாக காணப்படும். (தகவல்: முனைவர் கு.ராமசாமி, துணைவேந்தர், த.வே.பல்கலைக்கழகம்)
சோளம் உயர்விளைச்சல் குறிப்புகள்: மானாவாரி: கோடை உழவு செய்ய வேண்டும். விதை கடினப்படுத்துதல்: பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்போ 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நிழலில் உலர்த்தியபின் விதைப்பதால் பயிர் வளர்ச்சியைத் தாங்கி வளரும். இடைவெளி: 45 செ.மீ. x 15 செ.மீ. உர அளவு: ஏக்கருக்கு 16:8:0 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள். அடியுரம்: யூரியா ஏக்கருக்கு 35 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ.
இறவை: விதைகளை மெட்டலாக்சில் 3 கிராம்/ கிலோ விதை என்ற அளவில் விதைநேர்த்தி செய்தல் வேண்டும். ஏக்கருக்கு 36:18:18 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள்.
அடியுரம்: யூரியா - ஏக்கருக்கு 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் - 112கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ்-30 கிலோ.
மேலுரம்: 15ம் நாள் - யூரியா - ஏக்கருக்கு 20 கிலோ, 30ம் நாள் - யூரியா - 20 கிலோ.
ரகங்கள்: கோ(எஸ்)28, கோவில்பட்டி நெட்டை, டி.என்.ஏ.யு. சோளம், கோ.30, பி.எஸ்.ஆர்.1, ஏ.பி.கே.1.
வீரிய ஒட்டு ரகங்கள்: டி.என்.ஏ.யு. சோளம் வீரிய ஒட்டு கோ.5 பதிவு செய்யப்பட்ட வீரிய ஒட்டு ரகங்கள்.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்: வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 103. 0422-243 1405. வழங்கும் விலைவிபரம்: சந்தை ஆய்வு முடிவின் அடிப்படையில் 2013 ஏப்ரல், மே மாதங்களில் கிலோ ஒன்றுக்கு உளுந்தின் விலை 38-40 ரூபாயாகவும், பாசிப்பயறின் விலை 48-50 ரூபாயாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இம்மாதங்களில் விலை சீராக இருக்கும். அடுத்த 2 மாதங்களுக்கு விலை ஏற வாய்ப்புகள் குறைவு. எனவே உழவர்கள் உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை அறுவடை செய்தவுடன் விற்பனை செய்யும்படி பரிந்துரைக்கப்படுகின்றனர்.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

