PUBLISHED ON : அக் 18, 2017

தமிழ்நாட்டில் மழையளவு குறைந்து வருகிறது அல்லது காலம் கடந்து திடீரென அதிகம் பெய்கிறது. இதனால் விவசாயிகளின் நிலை மிக மோசடைந்துள்ளது. தமிழக நிலங்களில் 42 சதவிகிதம் மழையை மட்டும் நம்பியுள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் சராசரி 931 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். சரியான நேரத்தில் பெய்தால் ஆடி 18 ல் விதைப்பணி நடக்கும். இன்றைய நிலை வேறுபட்டுள்ளது. இதற்கு பருவ மழையின் அளவு சரியாக பெய்யாததே காரணம்.
கைகொடுக்கும் மானாவாரி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தானியம், சிறு தானியம், பயிறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், சில காய்கறிகள் மழையை மட்டும் நம்பி மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் 93 மில்லியன் எக்டேருக்கு (68.4 சதவிகிதம்) மானாவாரியாக உள்ளது. இவை அனைத்தும் ஆறு, குளம், கிணற்று நீர் தடையின்றி கிடைத்தால் உணவு உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும். 45 சதவிகிதம் உணவு உற்பத்தி மானாவாரியில் தான் பயிராகிறது. 40 சதவிகிதம் மக்களும், 60 சதவிகிதம் கால்நடைகளும் இந்த மானாவாரி சாகுபடியை நம்பியுள்ளனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான மானாவாரி நிலங்கள் அதிக சூரிய கதிர்களால் பாதிக்கப்படுகின்றன. மண்ணின் வெப்பம் அதிகமாகிறது. மாறுதலுக்கு உட்பட்ட மழை, வறட்சி, இயற்கை இடர்பாடுகளால் மானாவாரி சாகுபடி பாதிக்கிறது. இப்பகுதியில் பழைய கால சாகுபடிகளை நடைமுறைப்படுத்தினால் இழப்பும், வருவாயும் குறைந்து விடும்.
மலட்டுத்தன்மையானது மண்:
மண் வளம் காக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காதது, மண் ஈரம் காப்பதில் கவனமின்னை, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயிர் வளர்ச்சி, விளைச்சலை உயர்த்தாததால் மண் மலட்டுத்தன்மையாகி விட்டது. இதனால் மானாவாரியில் சிறந்த விளைச்சல் எடுக்க முடியவில்லை. மானாவாரியில் நல்ல வருமானம் பெற கோடையில் நிலம் தயாரித்தல், மண்ணில் ஈரம் காத்தல், ஒருங்கிணைந்த உரம், களை நிர்வாகம் அவசியம். மழை நீரை சொட்டு கூட வீணாக்கக்கூடாது. மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும். கலப்பு பண்ணை முறைகளை கடைப்பிடித்தால்
மானாவாரி சாகுபடி லாபகரமாக இருக்கும். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, வேலுார், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலுார், புதுக்கோட்டை, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மானாவாரி சாகுபடி நடக்கிறது. ஆனால் இப்பகுதிகளில் மழையின்மை, நீர் அதிகம் ஆவியாதல், பருவ மழை பின் தங்குதல், வறட்சி நீடிப்பு, திடீர் அதிக மழையால் சேதம், மழை நீர் சேமிப்பு இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
கசிவு நீர்
குட்டைகள் அவசியம்: தமிழ்நாட்டில் சோளம், கம்பு, மக்காச்சோளம், சிறுதானியம், பருத்தி, பயிறுகள், கடலை, எள், சூரியகாந்தியை மானாவாரியாக பயிரிட சிறந்த பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக உழவியல் (நவீன, சிறந்த) தொழில் நுட்பங்களை மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு, சிறு வரப்புக்கள், சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழ்சால் அகலப்பாத்தி அமைப்பு, பயிர் தேர்வு நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை பேராசிரியர்கள், அதிகாரிகளிடம் கேட்டு தேர்வு செய்வது, விதை கடினப்படுத்துதல், முன் பருவ விதைப்பு, பயிர் வளர்ச்சி ஊக்கி கட்டாயம் தெளித்தல், இயற்கை, உயிராற்றல் உரம், நிலப்போர்வை, மழை நீர் துாவி தெளிப்பான் கருவி மூலம் பாசனம், பகுதிப்பாத்தி அமைத்தல், நீர் சேமிப்பு குழிகள் (சிறு குட்டைகள்), இணைக்கப்பட்ட பார் முறைகள், அரை வட்டப்பாத்தி, உயர் மற்றும் தாழ்படுகைகள், கசிவு நீர் குட்டைகள் அமைப்பது போன்றவை சிறந்த தொழில் நுட்பங்கள் ஆகும்.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை
93807 55629
