/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கொடியிலே காய்க்குதே பாகல், பீர்க்கு
/
கொடியிலே காய்க்குதே பாகல், பீர்க்கு
PUBLISHED ON : ஜூலை 17, 2024

ஆடி மற்றும் தை பட்டங்களில் பிரத்யேகமாக பயிரிடப்படும் பாகல், பீர்க்கு தமிழகத்தில் முக்கியமான காய்கறி பயிர்களாகும். இவை வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் தாதுக்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இக்காய்கறிகளில் விதை பெருக்கத் திறன் மற்றும் விதைகளின் பயிர் எண்ணிக்கை பயிரிடப்படும் போது குறைவாக உள்ளது. எனவே புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான நல்ல விதைகளை உருவாக்குவது அவசியம். ஆடி மற்றும் தை பட்டங்களில் (ஜூன், ஜூலை மற்றும் ஜனவரி, பிப்ரவரி) பாகற்காயில் கோ 1, எம்.டி.யு.1, கோ (பி.ஜி.) எச் 1, ப்ரியா, பிர்த்தி ரகங்களும் பீர்க்கங்காயில் கோ 1, கோ 2, பி.கே.எம். 1 ரகங்களும் ஏற்றது.
பயிர் விலகு துாரம் அவசியம்
பாகல் மற்றும் பீர்க்கில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே பூத்து அயல் மகரந்த சேர்க்கை ஏற்படுத்துவதால் ஆதார விதை பயிருக்கு 1000 மீட்டரும் சான்று நிலை விதை பயிருக்கு 500 மீட்டர் பயிர் விலகு துாரம் இருக்க வேண்டும். விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலம் வளமாக இருக்க வேண்டும். நிலத்தை உழுது பயன்படுத்த வேண்டும்.
நடவு பாத்தி பராமரிப்பு
பீர்க்கில் 45 செ.மீ., அளவு நீள, அகல, ஆழத்தில் குழியை எடுக்க வேண்டும். குழிகளுக்கு இடையே 2 மீட்டர் இடைவெளி விடுவது அவசியம். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ மட்கிய தொழுஉரத்துடன் 20 கிராம் யூரியா, 90 கிராம் சூப்பர் பாஸ்பேட், 15 கிராம் பொட்டாசியம் சத்துகளை மண்ணில் கலந்து இட வேண்டும்.
பாகலில் 2.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகள் எடுத்து ஒருவாரம் ஆறவிட வேண்டும். குழி ஒன்றுக்கு 10 கிலோ மட்கிய தொழு உரத்துடன் 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் பொட்டாசியம் சத்துகளை மண்ணில் கலந்து இட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி தெளித்தல்
பாகல் மற்றும் பீர்க்கு கொடிகளில் பெண், ஆண் பூக்கள் தனித்தனியாக பூக்கும். பெண் பூக்கள் குறைவாக காணப்படுவதால் விதை மகசூலை அதிகமாக பாதிக்கும். பெண் பூக்களை அதிகப்படுத்த பாகல், பீர்க்கு பயிரிடப்பட்ட நிலத்தில் 2 முதல் 4 இலை உருவாகும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி 'எத்ரெல் 2000 பி.பி.எம்.' மருந்தை கலந்து ஒருவார இடைவெளியில் நான்கு முறை தெளிக்கவேண்டும். இதன் மூலம் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.
விதை பிரித்தெடுக்கும் முறை
பாகற்காய் விதையின் முளைப்புத்திறனானது விதைகளை அறுவடை செய்வதில் இருந்து சேமிக்கும் வரை அவற்றை கையாள்வதை பொறுத்துள்ளது. பாகலில் விதையை பிரிப்பது எளிமையான விஷயம். நன்றாக பழுத்த ஆரஞ்சுநிற பழத்தை நீளவாக்கில் பிளந்து உள்ளே சிவப்பு நிறமுள்ள கூழுடன் உள்ள விதைகளை நீரில் ஊற வைத்தபின் விதைகளை தனியாக பிரித்து எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
வெள்ளை, வெளிர் மஞ்சள் நிறத்தில் முதிர்ச்சியடையாத பொக்கு விதைகளை நீக்கவேண்டும்.
பீர்க்கங்காயில் விதைக்காக அறுவடை செய்யப்பட்ட காய்ந்த பழுப்பு நிற காய்களை 2 நாட்களுக்கு நன்றாக உலர்த்தி விதையை பிரிக்க வேண்டும். உலர்ந்த காய்களை இரண்டாக பிளந்து அல்லது காயின் கீழ்பகுதியை உடைத்து விதைகளை எடுக்க வேண்டும்.
வெள்ளை, வெளிர் மஞ்சள் நிறத்தில் நோய் பாதிப்புள்ள விதைகளை நீக்கி வீரியமுள்ள விதைகளை உலர்த்தி சேமிக்கவேண்டும்.
நடவு முதல் அறுவடை முறை சரியான தொழில்நுட்பங்களையும் பூச்சி, நோய் மேலாண்மையை கடைப்பிடித்தால் பாகலில் ஏக்கருக்கு 120 முதல் 150 கிலோ விதைகளும் பீர்க்கில் ஏக்கருக்கு 220 முதல் 250 கிலோ விதை மகசூல் எடுக்கலாம்.
- சுஜாதாதுறைத்தலைவர்
- அலெக்ஸ் ஆல்பர்ட்இணைப்பேராசிரியர்
- கவியரசுஆராய்ச்சி மாணவர்
விதை அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை
வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை