/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
'ஆட்டுக்கிடை' பயிர் வளர்ச்சியின் கிரியா ஊக்கி
/
'ஆட்டுக்கிடை' பயிர் வளர்ச்சியின் கிரியா ஊக்கி
PUBLISHED ON : ஜூன் 12, 2019

ஆட்டுச்சாணம் ஒரு சிறந்த உரம். இதை நன்கு உணர்ந்த தென்னை, பாக்கு, காப்பி, தேயிலை, மிளகு, ஏலம், காய்கறிகள் பயிரிடும் கேரள விவசாயிகள் தமிழக எல்லை மாவட்டங்களில் குறிப்பாக தென் மேற்கு மாவட்டங்களில் காய்ந்த ஆட்டுப்புழுக்கை கிலோ 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். அதையே மண்புழு உரமாக தந்தால் 15 ரூபாய்க்கு அட்வான்ஸ் செலுத்தி வாங்கிச் சென்று நல்ல வளம் மற்றும் நல்ல மகசூல் பெறுகின்றனர்.
சிக்கிம் மாநிலத்தை தொடர்ந்து கேரளாவும் விரைவில் இயற்கை விவசாய மாநிலமாக மாறும் நாள் தொலைவில் இல்லை.
தமிழக விவசாயிகளும் ஆட்டுப்புழுக்கை, மாட்டுச்சாணம் ஆகியவற்றை மக்க வைத்து பயன்படுத்த துவங்கியுள்ளனர். மாட்டுக்கிடையை அடுத்து ஆட்டுக்கிடைக்கும் கிராக்கி அதிகரித்து வருகிறது. மொத்தமாக ஆடு வளர்த்தால் தீவனமும் கிடைக்கும். கிடை போட்டால் அதன் மூலம் வருமானமும் பெருகும் என விவசாயிகள் கணித்து வைத்துள்ளனர். முக்கியமாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆட்டுக்கிடை அதிகம் உள்ளது. திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, ஒட்டன்சத்திரம், பள்ளப்பட்டி, சித்தயன்கோட்டை, மதுரை அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதிகளில் தென்னை விவசாயம் சிறப்பாக நடக்கிறது.
போதிய மழை இல்லாததால் மத்திய, மாநில அரசுகளிடம் கடன் மற்றும் மானியம் பெற்று ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை சொட்டுநீர் பாசன முறையில் பாய்ச்சி பலனடைகின்றனர்.
மூடாக்கு, ஆட்டுக்கிடை, இயற்கை உரம், சொட்டு நீர் பாய்ச்சி, நீர் உரங்களையும் பயன்படுத்தினால் அதிக காய்கள் காய்ப்பதை உணர்ந்துள்ள படித்த விவசாயிகள் ஆட்டுக்கிடைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
ஜூன், ஜூலையில் மானாவாரி பயிர்களுக்கும், நெல், வாழை, காய்கறி தோட்டங்களுக்கும் ஆட்டுக்கிடை போடுகின்றனர். கிடை அமர்த்த ஆடு ஒன்றுக்கு ஒரு ரூபாய் என நில உரிமையாளர்களிடம் வசூலிக்கின்றனர். 500 ஆடுகளுக்கு நாள் ஒன்றுக்கு இரவு, பகல் என 1,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. தொடர்புக்கு 95662 53929.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர் சென்னை.

