PUBLISHED ON : ஜூன் 12, 2019

நல்ல காசு பார்க்க உதவும் மரப்பயிர்களில் முதன்மையான முந்திரி நட இதுவே குழி எடுக்கும் தருணமாகும். நீடித்த வரவுக்கு தரிசு நிலத்தில் கூட தங்கச் சுரங்கமான முந்திரி இறவைக்கும், மானாவாரிக்கும் உகந்தது. ஏற்றுமதிக்கு உகந்த தோட்டக்கலைப் பயிர்களுள் முதன்மையானது. பல மரங்களுடன் கலந்தும், வேலிப்பகுதியிலும், மலைப் பகுதியிலும் ஆங்காங்கே வீட்டிற்கு அருகிலும், தோப்புகளில் உள்ள திறந்த வெளியிலும், மைதானங்களிலும், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், பூங்காக்கள், ஆற்றின் கரைகள், மாடு கட்டும் சாலைகள் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் போன்சாய் எனும் அலங்கார குறுமர வளர்ப்புக்கும் உகந்தது.
தனிப்பயிராக முந்திரியை நல்ல வடிகால் வசதி உடைய செம்பொறை மண், செம்மண், இரு மண் பாங்கான மண், கடற்கரையோர மண் முதலிய இடங்களில் 7 மீட்டர் இடைவெளியில் அதாவது ஒரு ஏக்கருக்கு 160 கன்றுகள் வீதம் நட வேண்டும். விருத்தாசலம் 2,3,4 ரகங்கள் சராசரியாக 3.250 டன் மகசூல் தரும் திறன் கொண்டவை. ஒட்டுச் செடிகள் நட்ட 3ம் ஆண்டே நல்ல மகசூல் தருபவை. ஜூன், ஜூலை மாதம் குழி எடுத்தல் அதாவது 3 அடி நீளம், 3 அடி அகலம் மற்றும் 3 அடி ஆழம் (ஒரு கன மீட்டர்) குழிகள் வரிசைக்கு வரிசை 7 மீட்டர், செடிக்கு செடி 7 மீட்டர் வீதம் இடைவெளியில் குழி தோண்டும் கருவிகள் பயன்படுத்தி எந்த தருணத்திலும் (நில ஈரம் இல்லா விட்டாலும் ) தோண்டலாம்.
குழிகள் நன்கு ஆற விட்டு அதிக பசுந்தழை உடைய கிளைரிசிடியா, கொடி பூவரசு, சூபாடில், வாதநாராயணன், கல்யாண முருங்கை, தேக்கு இலை, வேப்பம் இலை, புங்கம் தழை, ஆடாதொடா, எருக்கு, ஆவாரை, நிலவேம்பு இலை, வேலியில் உள்ள எந்த பசுந்தழை தரும் மர இலைகள் சோற்றுக் கற்றாழை, அறுவடை முடிந்த வாழை மர அடிப்பாகம், இதர பகுதிகளில் கிடைத்த சணப்பை, கொள்ளு, தக்கைப்பூண்டு, கழிக்கப்பட்ட மா மரத்தின் இலைகள், சரக்கொன்றை மர இலைகள் இப்படி எதனையும் இட்டு வைத்து குறைந்தது 15 முதல் 20 நாட்கள் வைத்து அதில் கன்றுகள் நட மண் கலவை பயன்படுத்த வேண்டும்.
அதற்கு மண் புழு உரம் 2 கிலோ, தொழுஉரம் 1 பங்கு, செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, அந்த மேற்பகுதி மண் 1 பங்கு, என நன்கு கலந்து குழியில் வேப்பம் புண்ணாக்கு 1 கிலோ, லிண்டேன் 100 கிராம் இட்டு செடிகளின் ஒட்டுப்பாகம் தரை மட்டத்தில் இருந்து 15 செ.மீ., உயரத்தில் இருக்கும்படி நட வேண்டும். நட்டவுடன் நீர்ப்பாய்ச்சி செடிகள் காற்றில் ஆடாமல், சாயாமல் குச்சிகள் நட்டு பிணைத்துக் கட்ட வேண்டும். ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயிறு, துவரை, எள், ஆமணக்கு முதல் 2 ஆண்டு பராமரித்து மண்ணை காக்கலாம். தொடர்புக்கு 98420 07125.
- டாக்டர்.பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர் தேனி.

