/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
கால்நடை வளர்ப்பில் ஆய்வக பரிசோதனைகள் - ஓர் கண்ணோட்டம்
/
கால்நடை வளர்ப்பில் ஆய்வக பரிசோதனைகள் - ஓர் கண்ணோட்டம்
கால்நடை வளர்ப்பில் ஆய்வக பரிசோதனைகள் - ஓர் கண்ணோட்டம்
கால்நடை வளர்ப்பில் ஆய்வக பரிசோதனைகள் - ஓர் கண்ணோட்டம்
PUBLISHED ON : ஜன 22, 2014
இரத்தம் கால்நடைகளின் ஆரோக்கியமான உடல் நிலையை முழுவதுமாக பிரதிபலிக்கும். இரத்தம் உடலில் ஏற்படும் உயிர்வேதியியல் செயல்களுக்கு உதவுகிறது. நோயினை கண்டறிய உதவும் இந்த இரத்த பரிசோதனை இரத்த சோகை, இரத்தபோக்கு மற்றும் மஞ்சள்காமாலை நோயினை கண்டறிய மிகவும் முக்கியமானதாகும். இரத்த சிவப்பணுக்களை கணக்கிடவும், வெள்ளை அணுக்கள் குறைபாடு ஏற்படுத்தும் நச்சுயிரி நோய், நுண்ணுயிரி நோயின் தீவிரம், ஓரணு இரத்த நோய் தாக்கம் மற்றும் வைட்டமின் பி 12 பாதிப்பு ஏற்படுத்தும் நோயினை அறியவும், இரத்த பரிசோதனை உதவுகிறது.
வெள்ளை அணுக்கள் அதிகமாக காணப்படும் நோய்கள்:
1. தொற்று நோய்களான நுண்ணுயிரி மற்றும் ஒட்டுண்ணி சம்பந்தப்பட்டவை.
2. நச்சுதாக்கம் (அப்ளோடாக்சிகோஸிஸ்)
3. புற்றுநோய் (கோழிகளில் மேரக்ஸ்)
4. வலிப்பு மற்றும் இரத்தபோக்கு
மாதிரி சேகரிக்கும் விதம்: இரத்த மாதிரிகள் சேகரிக்க இரத்தம் உறையாமல் தடுக்கும் மருந்துகள் அடங்கிய குப்பிகள் அல்லது சோதனை குழாய்களில் ஈடிடீஏ (1-2மிகி/மிலி) கலவையுடன் சேகரிக்க வேண்டும்.
இரத்த படர்வு பரிசோதனை: அதிக காய்ச்சல், நிணநீர் கட்டி வீக்கம், தீவனம் உட்கொள்ளாமை போன்ற அறிகுறிகள் தென்படும் கால்நடைகளின் செவி மடல்களிலிருந்து இரத்தபடர்வு எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். இரத்த ஒட்டுண்ணிகளான குதிரை வலிப்பு நோய், நிணநீர் வீக்க நோய், இரத்த காய்ச்சல் நோய், தொண்டை அடைப்பான் மற்றும் அடைப்பான் நோய் போன்ற நோய்களை உறுதி செய்யலாம்.
மலப் பரிசோதனை: ஆடு மாடுகளில் குடற்புழுத் தாக்கத்தினை கண்டறிய மலப் பரிசோதனை மிகவும் அவசியமாகும். இதற்கு சிறிய அளவிலான பஞ்சுகளில் மலத்தினை எடுத்து பரிசோதித்தால் பூச்சிகளின் முட்டை அல்லது புழுப்பருவத்தினை கண்டறிந்து நோய் தாக்கத்தினை அறியலாம்.
கால்நடைகளில் தொடர்கழிச்சல், அடிவயிறு பெருத்தல், மெலிந்து கொண்டே போகுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளலாம். மாடுகளில் கொக்கிபுழுக்கள், டாக்ஸகாரா, நாய்களில் ஸ்பைரோசர்கா புழுக்கள், ஆடுகளில் ஸ்டராங்கைளாய்டு மற்றும் அஸ்காரா போன்ற புழுக்களின் தாக்கம் காணப்படும்.
சிறுநீர் பரிசோதனை: இச்சோதனைகளில் சிறுநீர் பாதிப்பு, புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவையின் வளர்சிதைமாற்ற கோளாறு, கல்லீரல், கணையம் போன்றவற்றில் ஏற்படும் நோய் பாதிப்பையும் கண்டறியலாம். சிறுநீரில் புரதம், குளுக்கோஸ், இரத்தம், யூரியா, கிரியாட்டினின் மற்றும் பித்தஉப்பு முதலியவை கண்டறிவதால் நோய் தாக்கத்தினை உறுதி செய்யலாம்.
நோய் சுரண்டல் பரிசோதனை: தோலில் காணப்படும் உண்ணிகள், பூஞ்சைகள் முதலியவை தோல் நோய்களான டெர்மட்டோமைக்கோஸிஸ், டெமோடிக்கோஸிஸ் மற்றும் ஸ்கேபிஸ் உண்டாக்கும். தோல் அரிப்பு சிவந்து காணப்படும் இடம் முதலியவை அறிகுறிகளாகும். இதனை உறுதி செய்ய தோலின் மேற்புரத்தில் தோல் சுரண்டல் எடுத்து ஆய்வக பரிசோதனை செய்ய வேண்டும்.
டாக்டர். பூ.புவராஜன் மற்றும் தி.தேவி
கால்நடை பொது சுகாதாரம் ஒரத்தநாடு.

