/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அழகு புல்தரை அமைத்தல் (லான் மேக்கிங்)
/
அழகு புல்தரை அமைத்தல் (லான் மேக்கிங்)
PUBLISHED ON : ஏப் 11, 2012

நிலம் தயார் செய்தல்: புல்வெளி அமைக்க தெரிவு செய்யப்பட்ட நிலத்தை முதலில் 45செ.மீ. ஆழத்திற்கு நன்கு கொத்தி புழுதியாக்கி, அதிலுள்ள சிறு கற்கள், பெரிய மண் கட்டிகள், கோரைக் கிழங்கு, அருகம்புல்லின் கிழங்கு போன்றவற்றைச் சுத்தமாக பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பின் மக்கிய எருவையோ, மாட்டுச்சாணத்தையோ ஒரு சதுரமீட்டருக்கு 2 கிலோ என்ற அளவில் இட்டு நிலப்பரப்பைச் சமப்படுத்த வேண்டும். சமப்படுத்தும்பொழுது மழைநீர் வடிவதற்காக 3மீ பரப்புக்கு 15 செ.மீட்டர் சரிவு கொடுத்து சமப்படுத்துதல் நல்லது. இவ்வாறு தயார் செய்த நிலத்திற்கு இருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்தால் மண் நன்கு படிந்து அதில் உள்ள களைகள் முளைக்கும். அவற்றை எடுத்துவிட்டு மீண்டும் கொத்திச் சமப்படுத்த வேண்டும்.
அழகு புல் வகைகள்: புல் தரை அமைப்பதற்கு அருகம் புல், செயின்ட் அகஸ்டியன் புல், உப்பருகு, நீலப்புல், சங்கிலிப்புல், சுப்பான் புல், மணிலாப்புல், கொரியன் புல், ஐதராபாத் புல் மற்றும் குட்டை பெர்முடா ஆகிய வகைகளை உபயோகப்படுத்தலாம். ஒவ்வொரு வகைப் புல்லினத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மையும் பயன்பாடும் உண்டு. அத்தகைய சிறப்புத் தன்மைகளை இப்பொழுது பார்க்கலாம்.
அருகம்புல் வகைகள்: இவ்வகை, புல்தரை அமைக்க பெருவாரியாகப் பயன்படுகிறது. சைனோடான் இன்டர்மீடியஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்புல் வகையானது சுமாரான மிருதுத் தன்மையுடன் காணப்படும். இவை வறட்சி மற்றும் அதிக சூரிய ஒளி விழும் பகுதிகளுக்கு மிகவும் உகந்தவை.
அகஸ்டியன் புல்: இவை மிகவும் சொரசொரப்பான தன்மையைப் பெற்றிருப்பதால் இவற்றை 'எருமைப்புல்' என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இப்புல்லானது ஸ்டினோடெப்ரம் செக்கன்டேட்டம் எனப்படுகிறது. இவை நிழலான பகுதிகள் மற்றும் தண்ணீர் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் புல்தரை அமைக்க உகந்தவை.
விதை: நன்கு தயார் செய்த நிலத்தில் ஒரு பங்கு விதைக்கு ஐந்து பங்கு மணல் கலந்து 2செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 2.5 கிராம் விதை தேவைப்படும். விதைக்கும் முன் மண்ணை முள் கொத்தால் நன்கு கிளறிவிட்டு விதைத்தபின் விதைகளைத் குளத்துமண் கொண்டு மூடவேண்டும். ஒரு மீட்டருக்கு 10 கிராம் லிண்டேன் மருந்து தூவி எறும்பு வராமல் தடுக்க வேண்டும். பின் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். விதை முளைக்க ஐந்து வாரம் ஆகும். புல் 5 செ.மீ. உயரம் வளர்ந்தபிறகு அறுத்துவிட வேண்டும். இந்த நிலையில் புல் தரைக்கருவி கொண்டு கத்தரிக்கக்கூடாது. பின் உருளை கொண்டு நன்கு உருட்டிவிட்டால் புல் நன்றாக படியும்.
தொடர்புக்கு: பேராசிரியர் கண்ணன், 94432 54038.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

