சாம்பல் சத்தைக் கரைக்கும் நுண்ணுயிர்கள்: சாம்பல்சத்தின் தாதுக் களைக் கரைக்கவல்ல நுண்ணுயிரி அஸ்பர்ஜில்லஸ் ரைஜர் என்ற பூஞ்சனம். களிமண் இம்மிகளிலிருந்து பொட்டாசியத்தை கரைக்க வல்லது. பாக்டீரியாக்கள் 'புரோடியஸ் மிராபிலிஸ், பேசில்லஸ் எக்ஸ்ட்ராடுவன்ஸ்', பேசில்லஸ் கால்டோ லைடிகஸ், பேசில்லஸ் சாகுலன்ஸ், பேசில்லஸ் மியூசிலாஜினோசஸ் வார்.சிலிசியஸ் ஆகிய பாக்டீரியாக்கள் முக்கியமானவை. இவை அனைத்தும் மண்ணில் காணப்படுபவையே. மண்ணில் 13 வகையான கனிமச்சத்துக்கள் உள்ளன. அவைகள் பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்து என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. காப்பர், போரான், இரும்பு போன்றவை மிக குறைந்த அளவில் தேவைப் படுகின்றன.
நுண்ணுயிர் உரம் நன்மை தரும் நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி பெறப்படும் ஒரு வகை உரமாகும். இந்த உரம் பயிர்களின் வேர், விதை, மண் ஆகிய அனைத்தின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வழிசெய்கின்றன. வெவ்வேறு வகையான நுண்ணுயிர் களை குறிப்பாக நைட்ரஜனை நிலைப் படுத்தும் பாக்டீரியாக்கள் அசிட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்பரசைக் கரைக்கும் பாஸ்போபாக்டீரியா மற்றும் பொட்டாசை கரைத்துக் கொடுக்கும் பேசில்லஸ் மியூசிரோஜினஸ் ஆகியவை பேரூட்டச்சத்துக்களை பயிர்களுக்கு கொடுக்கும் நுண்ணுயிர் உரங்களாகும்.
பொட்டாஷ் மொபிலைசர் உயிர் உரம்: பொட்டாசியம் கனிமங்களில் சில பாக்டீரியம் வாழ்வது கண்டறியப் பட்டது. இந்த கனிமங்களில் வாழும் பாக்டீரியாவில் ஒன்று பொட்டாசி யத்தை நன்கு கரைக்கவல்லது எனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
'பிரசூரியா ஆரன்டியா' எனப்படும் இந்த பாக்டீரியம் கரும்பிற்கு உயிர் உரமாகப் பயன்படுத்தப்படும் குளூகனோ அசிட்டோபாக்டர் டை அசோடிராபிக்ஸ் பாக்டீரியத்திற்கு மிக நெருங்கிய வகையாகும். பிரசூரியா ஆரன்டியா பாக்டீரியம் சாம்பல்சத்தை கரைத்துத் தருவதையும் பல பயிர்களில் மகசூல் கூட்டுவதையும் வயல்வெளி ஆய்வுகள் மூலம் சாம்பல் சத்தின் உபயோகத்தில் சரிபாதியையோ அல்லது முழுவதையுமோ தவிர்த்துவிடலாம்.
ஏற்ற பயிர்கள்: பொட்டாஷ் மொபிலைசரை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். நெல், கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், மஞ்சள், தானியப்பயிர்கள், காய்கறிப்பயிர்கள், மலைப்பிரதேசப் பயிர்கள் அனைத்திற்கும் இடலாம். குறிப்பாக சாம்பல்சத்து அதிகம் தேவைப்படும் கரும்பு, வாழை, மரவள்ளி போன்ற பயிர்களில் இதன் செயல்பாட்டினால் மிகுந்த நன்மை உண்டு. பொட்டாஷ் மொபிலைசரை பிற உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், அசட்டோபாக்டர், குளூகனோ அசிட்டோபாக்டர், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஒன்றோடொன்று கலந்து இடுவதால் பொட்டாஷ் மொபிலைசரும் பாதிக்கப்படுவது இல்லை. பிற உயிர் உரங்களுக்கும் எந்த பாதிப்பும் கிடையாது.
சாம்பல் சத்தைக் கரைக்கும் திறன் கொண்ட நுண்ணுயிர் உரம் இயன்றளவில் ஆராய்ச்சி நிலையில் உள்ளது. இந்த நுண்ணுயிர் உரம் மேலும் சில வயல்வெளி ஆராய்ச்சி களை மேற்கொண்ட பிறகு வணிக ரீதியாக வெளியிடப்படும்.
தகவல்: முனைவர் ரா.பூரணியம்மாள், செ. கனிமொழி, முனைவர் எச்.கோபால், வேளாண் நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003.
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

