PUBLISHED ON : டிச 19, 2018

சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல்லில் இலை மடக்குப்புழு தாக்குதல் உள்ளதா என்பதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்புழு தழைச்சத்து கொண்ட உரங்களை இட்டதும் தோன்றும். நிழலான பகுதிகளில் மிகுந்து காணப்படும். தொழு உரம் இடுமுன் குவித்து வைத்த மற்றும் தழைச்சத்து கொண்ட உரங்கள் அதிகம் விழுந்த இடங்களில் முதலில் தோன்றும்.
அறிகுறிகள்
பொன் மஞ்சள் நிற அந்துகள் வயலினுள் பறந்து இலைகளின் பின்புறம் அமரும். இலைகள் நீள் வாட்டில் சுருண்டு அதுனுள் பச்சை நிறம் மற்றும் உள் உருவ தோற்றம் கொண்ட புழுக்கள் காணப்படும். இலைகளில் வெண்ணிறமாக அரிக்கப்பட்டு சுருட்டப் பட்டு காணப்படும். பயிர் வெளுத்து புகைந்தது போல் காணப்படும்.
பொருளாதார சேதம்
வளர்ச்சி பருவத்தில் பத்து சதவீத இலைகளில் சேதமும், பூக்கும் பருவத்தில் 5 சதவீத கண்ணாடி இலை சேதமும் ஏற்படும். நோய் தாக்கிய பின் கட்டுப்படுத்த 'புரபினோபால்' ஏக்கருக்கு 400 மில்லி அல்லது 'குளோர்பைரிபாஸ்' ஏக்கருக்கு 500 மில்லி அல்லது 'புளுபென்டிஅமைடு' 20 டபள்யு.ஜி., ஏக்கருக்கு 100 கிராம் அல்லது 'குளோரான்டிரனிலிப்ரோல்' 18.5 எஸ்.சி., ஏக்கருக்கு 60 மில்லி, மருந்தினை பயிர் முழுவதும் படும்படியாக மாலை நேரம் தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட், இன்ட்ரான், பைட்டோவெட், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்த வேண்டும்.
- முனைவர் ரா.விமலா, முனைவர் கு.சசிகுமார்
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்,ஸ்ரீவில்லிபுத்துார்

