sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை

/

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை


PUBLISHED ON : ஆக 10, 2011

Google News

PUBLISHED ON : ஆக 10, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பச்சை தத்துப்பூச்சி: இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் முதலில் மஞ்சள் நிறமடைந்து பின்னோக்கி வளைந்து சுருங்கிவிடும். தாக்குதல் தீவிரமடையும் பொழுது பூச்சியின் எச்சில் காரணமாக இலையின் ஓரங்கள் செங்கல் நிறத்திற்கு மாறி தீயில் கருகியது போல் காணப்படும். இலைகள் முற்றிலும் சுருங்கி உதிர்ந்துவிடும். பயிர் வளர்ச்சி குன்றுவதால் மகசூல் பாதிக்கப் படும். முன்பட்ட பருத்தியில் தாக்குதல் அதிகளவில் இருக்கும்.

அசுவினி: பசுமை கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் அசுவினி பூச்சி செடியின் இளம் தண்டு, கொழுந்து மற்றும் இலையின் அடியில் கூட்டமாக அமர்ந்துகொண்டு சாற்றை உறிஞ்சி குடிக்கும். தாக்குதல் தீவிர நிலையை அடையும் பொழுது இலைகள் சுருங்கி வளர்ச்சி குன்றி காணப்படும். இளம் செடிகள் படிப்படியாக காய்ந்துவிடும். பூச்சிகள் அளவுக்கதிகமான சாற்றை உறிஞ்சி குடித்தபின் எஞ்சியதை இனிப்பு கழிவுகளாக கீழ்புறமுள்ள இலையின் மேற்புறத்தில் வெளியிடும். இனிப்பு கழிவுகளை உண்பதற்காக வரும் எறும்புகள் அசுவினியை மற்ற பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும். இனிப்பு கழிவுகள் மீது கரும்பூசணம் படர்ந்து இலையின் ஒளிச்சேர்க்கையை பாதிக்கும்.

வெள்ளை ஈ: பருத்தி பயிரிடக் கூடிய பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது. வெள்ளை ஈக்கள் கூட்டமாக இலையின் அடியில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் இலைகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் நரம்பிலிருந்து ஓரத்தை நோக்கி செல்லும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் சப்பைகள், மொக்குகள் உதிர்ந்துவிடும். பூச்சிகள் வெளியேற்றும் கழிவுகளால் கரும் பூசணம் படர்வதால் ஒளிச்சேர்க்கை தடைபடும். இலை சுருங்கல் எனப்படும் நச்சுயிரி நோயை பரப்புவதற்கு காரணமாக வெள்ளை ஈக்கள் உள்ளன.

மாவுப்பூச்சி: மாவுப்பூச்சிகள் கோடை காலத்தில் பருத்தி பயிரை தாக்கி பெரும்அளவில் மக சூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. மாவுப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் பருத்தி பயிரைத் தாக்கி சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகள் மஞ்சள் நிறமடையும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

1. தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்க வேண்டும்.

2. களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

3. நன்மை செய்யும் பூச்சிகளான பொரிவண்டுகள், நீல வண்ணத்துப் பூச்சி போன்றவை இருக்கும்பொழுது பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

4. விதைப்பிற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 7 கிராம் இமிடாகுளோ பிரிட் 70 டபிள்யூஎஸ் மருந்தை கொண்டு விதைநேர்த்தி செய்வதன் மூலம் எட்டு வாரங்களுக்கு பருத்தி செடியை சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

5. இமிடாகுளோபிரிட் 200 எஸ்எல் 40மிலி, பாஸ்போமிடான் 40 எஸ்எல், 240 மிலி, டைமெத்தோயேட் 30 இசி 200 மிலி, மெத்தில் டெமட்டான் 25இசி 800மிலி, வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் (10 கிலோ வேப்பங்கொட்டைக்கு 200 லிட்டர் தண்ணீர்) போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு தேவையான தண்ணீரில் கலந்து தெளித்து அசுவினி, இலைப்பேன், பச்சை தத்துப்பூச்சிகளை கட்டுப் படுத்தலாம்.

6. பாசலோன் 35 இசி 1000 மிலி, குயினால்பாஸ் 25 இசி 800 மிலி டிரையசோபாஸ் 40 இசி 800 மிலி, அசிபேட் 75 எஸ்பி 500 கிராம், மெத்தில் டெமட்டான் 25 இசி 800 மிலி, மீன் எண்ணெய் சோப்பு ஒரு லிட்டருக்கு 25 கிராம், வேப்பங் கொட்டை கரைசல் 5 சதம், வேப்ப எண்ணெய் 1 லிட்டர் நீருக்கு 5 மி.லி. போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு தேவையான தண்ணீரில் கலந்து தெளித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

7. மாவுப்பூச்சியின் குஞ்சுகளை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்ப எண்ணெய் 20 மிலி. (அ) வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் (அ) மீன் எண்ணெய் சோப்பு 25 கிராம் கலந்து தெளிக்கவும். முதிர்ந்த பூச்சிகளை கட்டுப்படுத்த அசிபேட் 2 கிராம் (அ) டைமெத்தோயேட் 2 மி.லி. (அ) மெத்தில் டெமட்டான் 2 மிலி (அ) புரோபனோபாஸ் 2 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 5 மி.லி.ஐ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

ஜட்டா கவிதா, சி.விஜயராகவன்,
வேளாண்மை அறிவியல் நிலையம், ராமநாதபுரம்-623 503.
மற்றும் ப.பாலசுப்பிரமணியன்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
செட்டிநாடு-630 102.






      Dinamalar
      Follow us