/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
உற்பத்தி செலவை குறைக்கும் சாணப்பாசி கரைசல்
/
உற்பத்தி செலவை குறைக்கும் சாணப்பாசி கரைசல்
PUBLISHED ON : நவ 27, 2024

விவசாயத்தில் உற்பத்தி செலவை குறைப்பது தான் முதல் படி. அந்த செலவு குறைந்து விட்டால் அறுவடையில் நஷ்டம் ஏற்பட்டாலும் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. தோட்டத்திலேயே உரக்கரைசல் தயாரிக்கலாம் என்கிறார் நாமக்கல் பரமத்தி வேலுார் சிறுகிணற்று பாளையத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்.
ஐந்தடி நீள சுரைக்காய், புடலங்காய், கொடி உருளை என மரபு விதைகளை கண்டறிந்து அவற்றை பயிரிட்டு இயற்கை விவசாயிகளுக்கு புதிய வழிகாட்டும் லோகநாதன் கூறியதாவது:
மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வந்தாலும் 9 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். தமிழ்நாடு மரபு விதை பகிர்வாளர்கள் சங்கத்தில் இருந்து சுரைக்காய், புடலங்காய், கொடி உருளை விதைகள் வாங்கினேன். இரண்டாண்டுகளுக்கு முன் தோட்டத்தில் பெரிய பந்தல் அமைத்து கொடி உருளைக்கிழங்கு விதையை வைத்து வளர்க்க ஆரம்பித்தேன். படர்ந்து காய்கள் பிடிக்க ஆரம்பித்தது. காய் காய்த்த பின் செடிகள் காய்ந்து விட்டது. அதை நான் அகற்றாத நிலையில் மீண்டும் அதே கிழங்கில் இருந்து புதிய கொடி முளைத்தது. மறுதாம்பு முறையில் முன்பை விட கிழங்குகள் பெரியதாகவும் அதிகமாகவும் கிடைத்தன.
முதல் அறுவடையில் ஒரு கிழங்கின் எடை 50 கிராம் முதல் அதிகபட்சமாக ஒரு கிலோ அளவு வீதம் ஒரு செடியில் இருந்து 10 கிலோ கிழங்கு கிடைத்தது. இரண்டாம் அறுவடையில் அதிகபட்சமாக ஒரு கிழங்கு 2 கிலோ எடை வீதம் 50 கிலோ அளவுக்கு கிழங்கு கிடைத்தது. புழு தாக்குதலுக்கு இலைக் கரைசல், சாணப்பாசி கரைசல் பாக்டீரியா தெளித்தேன்.
வீட்டில் கிழங்கை வைத்தாலே மண்ணில் வைப்பதற்கு முன்பாக தானாக முளைக்க ஆரம்பித்து கொடி படர்கிறது. இதை சாதாரணமாக மாடித் தோட்டத்தில் பந்தல் முறையில் வளர்க்கலாம். ஒவ்வொரு செடியும் சராசரியாக 3 மாதம் கழித்து பூப்பூக்கிறது. அடுத்த இரண்டு மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும். மூன்றாம் முறையும் மறுதாம்பு வரும் என விதை கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.
எனது காட்டில் இடம் இருப்பதால் ஐந்து செடிகள் வைத்து சோதனை முறையில் கொடி உருளை பயிரிட்டு வெற்றி பெற்றேன். இதே முறையில் தான் ஐந்தடி நீள புடலை, சுரைக்காய் விளைகிறது. அனைத்திற்கும் இயற்கை முறையில் நானே உருவாக்கிய சாணப்பாசி கரைசல் திரவம் தான் பயன்படுத்துகிறேன்.
மல்லிகைப்பூ 50 சென்டில் பயிரிட்டுள்ளேன். இதற்கும் இக்கரைசல் தான் கைகொடுக்கிறது. இதுபோக விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கிறேன்.
தோட்டத்தில் நாட்டு மாடுகள் இருந்தால் செலவில்லாமல் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கலாம். நாட்டுமாடுகள் இல்லாவிட்டால் சாணம், கோமியம், பால், தயிர், நெய் சேர்த்து பஞ்சகாவ்யம் தயாரிக்க செலவு அதிகமாகும். உற்பத்தி செலவுடன் சேர்த்தால் கை நஷ்டம் ஏற்படும். உற்பத்தி செலவை குறைப்பது தான் முதல் நோக்கம்.
நாட்டு மாட்டு சாணத்தில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கும். இதை தண்ணீரில் கரைத்து அந்த பாசியை எடுத்து சர்க்கரையை சேர்க்கும் போது நுரை வரும். இதை வெயிலில் வைத்து தான் தயாரிக்க முடியும். இந்த சாணப்பாசி கரைசல் ஒரு லிட்டர் திரவத்துடன் 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ சர்க்கரை கரைத்தால் போதும். இதை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம். இதனால் மண்புழு உற்பத்தி அதிகமாகும். நுண்ணுயிரிகள் பெருகி மண்வளம் அதிகரிக்கும். நுண்ணுயிரிகள் தான் மண்ணில் உள்ள சத்துகளை செடிகளுக்கு எடுத்து கொடுக்கும். இதனால் இடுபொருள் செலவு குறையும்.
இதே சாணப்பாசி கரைசலை கொண்டு குறைந்த நாட்களில் மீன் கழிவுகளை கொண்டு மீன்அமிலம், புண்ணாக்கில் இருந்து என்.பி.கே., உரங்கள், அழுகிய வாழைப்பழங்கள் தோலுடன் சேர்த்து பொட்டாஷ் உரம் தயாரிக்கலாம். செலவு குறைந்த இடுபொருள் தயாரிக்க கற்றுக் கொண்டால் இயற்கை விவசாயம் எப்போதும் கைகொடுக்கும் என்றார். அலைபேசி: 97871 55461
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை