PUBLISHED ON : அக் 10, 2018

பூனை வளர்ப்பு என்பது நாய் வளர்ப்பு போல் இருந்தாலும் பூனையின் முரட்டுத்தன்மை, உணவு பழக்கம் ஆகியவற்றால் அனுசரித்து வளர்க்க வேண்டும்.
பூனையை கையாளும் போது முரட்டுத்தனம் கூடாது. பூனைகள் மாமிச உணவுகளையே அதிகம் விரும்பி உண்ணும். வயல்களில் திரியும் எலிகள் பால் முற்றிய பயிர்களை தனது கோரைப்பற்களால் கடித்து நறுக்கி கொத்தாக கவ்வி கொண்டு வயல்களில் தனது வளைக்குள் கொண்டு சென்று சேமிக்கும்.
இதனால் பயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், விவசாயிகளுக்கு பொருள் நஷ்டம் ஏற்படுகிறது.
வயல்களில் எலிகளை நுழைய விடாமல் தடுக்கும் பெரும் பங்கை 'வயல் புலி' என அழைக்கப்படும் பூனைகள் பார்த்து கொள்கின்றன. வீடுகள், கோடவுன்களில் தானியங்களை சேதம் செய்ய விடாமல் தடுக்கிறது. பூனை தான் சுத்தமாக இருக்கவே விரும்பும். மணற்பாங்கான பகுதியில் மலம் கழித்து விட்டு மண் கொண்டு மூடி விடும் நல்ல பழக்கம் பூனைக்கு உண்டு. பூனைகள் இருக்கும் இடத்தில் எலிகள் வராது. பூனைகளை மோப்பம் பிடிக்கும் எலிகள் மாற்று இடம் தேடி ஓட்டம் பிடிக்கும் என்பதால் விவசாயிகள் பூனைகளை வளர்க்கின்றனர். பூனைகளுக்கு இன்புளுயன்சா, வெறிநோய், நுரையீரல் நோய், டாக்சோபிளாஸ் மோசிஸ், தோல் நோய்களும் ஏற்படும்.
பூனைகளில் இருந்து லெப்டோ ஸ்பை ரோசிஸ், காசநோய் போன்றவை மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பூனை வளர்க்கும் விவசாயிகள் கூண்டுக்குள் வைத்து வளர்க்கக் கூடாது. சுதந்திரமாக விட வேண்டும். விரல் நகங்களை வெட்டி விடக்கூடாது. அவ்வாறு செய்தால் பயத்தால் பதுங்கி கொள்ளும்.
நகங்கள் முளைத்த பிறகே வெளியில் வரும். அறிவியல் ரீதியாக, சுகாதார முறையில் தேவையான தடுப்பூசிகளை செலுத்தி, கால்நடை மருந்துவரின் ஆலோசனைப்படி பூனைகளை வளர்க்க வேண்டும். தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி. ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
நத்தம்.

