/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி
/
இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி
PUBLISHED ON : அக் 10, 2018

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாலிசந்தையில் 16 ஏக்கர் நிலத்தில், 5 ஆண்டுகளாக இயற்கை உரம் மற்றும் மருந்துகளை தயாரித்து, அதன் மூலம் கொய்யா, நெல்லி, சப்போட்டா, முருங்கை, மல்லிகைபூ, வாழை, நெல், குதிரைவாலி, காய்கறிகளை, 51 வயது விவசாயி சாகுபடி செய்து சாதனை புரிந்து வருகிறார்.
விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன் பாட்டால், மனிதனுக்கு பல்வேறு நோய் ஏற்பட்டு வருகிறது.
இதை தவிர்க்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர்.
இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், காய்கறிகளுக்கும் சந்தையில் தனி வரவேற்பும், விலையும் கிடைக்க துவங்கியுள்ளது. இருப்பினும், பல விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
பேரையூரை அடுத்த சாலிசந்தையில் சதுரகிரி என்ற விவசாயி 16 ஏக்கர் தரிசு நிலங்களை வாங்கி அதில் கிணறு தோண்டி, சோலார் சிஸ்டத்தில் நீர் பாய்ச்சி வருகிறார்.
இவர், 10 பசு மாடு மற்றும் ஆடு வளர்த்துக் கொண்டு, அதில் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு இயற்கை உரங்களை தானே தயாரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார். ரசாயன உரங்களை கொண்டு சாகுபடி செய்பவர்களை காட்டிலும், இவர் அதிக உற்பத்தி செய்து, விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சதுரகிரி கூறியதாவது. மாட்டு சாணத்தில் இருந்து, பஞ்ச காவியம் தயாரித்து, மரங்கள், மற்றும் செடிகளுக்கு உரமாக போட்டு வருகிறேன்.
மேலும் மரம் மற்றும் செடிகளுக்கு நோய் ஏற்பட்டால், அதற்கு தெளிப்பதற்காக, கோமியம், 100 லிட்டர், வேப்ப இலை, 25 கிலோ, பச்சைமிளகாய் 10 கிலோ, இஞ்சி 10 கிலோ, பூண்டு 10 கிலோ, புகையிலை 10 கிலோ ஆகியவற்றை அரைத்து கலந்து, 40 நாள் ஊற வைக்கிறேன். அதன் பின், அதை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி கலந்து, மரம் மற்றும் செடிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கிறேன்.
இந்த கரைசலை தெளித்தால், மரம் மற்றும் செடிகளை தாக்கும் அனைத்து நோய்களும் சரியாகி விடுகிறது. இதனால் உற்பத்தியும் அதிகமாகிறது. 16 ஏக்கரிலும் அரசு உதவி இல்லாமல் நானே சொட்டு நீர் பாசனம் நிறுவியுள்ளேன் என்றார். தொடர்புக்கு: 78710 66666
- கே.வெங்கடேசன், பேரையூர்.

