/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சத்துக்களை கரைக்கும் நுண்ணுயிரிகள்
/
சத்துக்களை கரைக்கும் நுண்ணுயிரிகள்
PUBLISHED ON : ஜன 01, 2014
ஊட்டச்சத்துக்கள் பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியம். மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள், பயிர்களுக்கு அதிகளவில் தேவைப்படும். சாம்பல் சத்து எனப்படும் பொட்டாசியம் சத்து, பயிர்களுக்கு முக்கியம். இவை, பூச்சி நோய் தாக்குதலுக்கு, எதிர்ப்புத் திறனைத் தரும். தானியப் பயிர்களின் தண்டுப்பகுதிகள் சாயாமல், உறுதியாக இருக்கவும் உதவுகிறது.
சாம்பல் சத்து குறைந்தால்:
பயிர்கள் வளர்ச்சி அடையாமல் குட்டையாக, வெளிறி காணப்படும். இலைகளின் நுனி, ஓரங்கள், நரம்பின் இடைப்பகுதியிலும் செம்பழுப்பு நிறமாக மாறி, இலைகள் கருகிவிடும். முதிர்ந்த இலைகளில் அறிகுறிகள் தென்பட்டு, இளம் இலைகளையும் தாக்கும். உருளை, தக்காளி, ஆப்பிள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் தானிய வகைப் பயிர்களில் விளைச்சல் குறையும்.
சாம்பல் சத்துக் குறைபாட்டின் அறிகுறி தென்படும் போது, பொட்டாஷ் 'மொபிலைஸர்' உயிர் உரத்தை பயன்படுத்தலாம். இதன்மூலம் சாம்பல் சத்து உபயோகத்தை சரிபாதியாக குறைக்கலாம். இந்த உயிர் உரத்தில் உள்ள 'பிராசூரியா ஆரன்டியா' பாக்டீரியா, பொட்டாசியத்தை கரைக்க வல்லது.
நெல், கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், மஞ்சள், காய்கறி தானியப் பயிர்கள், மலைப் பிரதேச பயிர்களுக்கு உயிர் உரத்தைப் பயன்படுத்தலாம். விதைநேர்த்தியின் போதும், நாற்றங்கால், நடவு வயலிலும் உயிர்உரத்தை இடலாம். பிற உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவுடன் கலந்தும் இடலாம். மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் கோவை வேளாண் பல்கலை நுண்ணுயிரியல் துறையில், உயிர் உரங்களைப் பெறலாம்.
-கி.ராஜேந்திரன்,
வேளாண் துணை இயக்குனர், மதுரை.

