/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பருத்தியில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவர்த்தி
/
பருத்தியில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவர்த்தி
பருத்தியில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவர்த்தி
பருத்தியில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு மற்றும் நிவர்த்தி
PUBLISHED ON : ஏப் 13, 2011

சுண்ணாம்புச்சத்து குறைபாடு: பருத்தி சுண்ணாம்புச்சத்தினை தாங்கி வளர்வதோடு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டது. செடியின் தண்டு உறுதியாக அமைவதற்கு சுண்ணாம்பு சத்து மிகவும் அவசியம். சுண்ணாம் புச்சத்து மிகக் குறைந்த நிலங்களில் விதைத்த 3 வாரங்களிலேயே இலைகளின் காம்புகள் வளைந்து வலுவில்லாமல் முறிந்துவிடும். செடிகள் உயரமாக வளர்ந்து காய்பிடிக்கும் தன்மையைக் குறிக்கும்.
நிவர்த்தி செய்யும் முறை: கால்சியம் குளோரைடு 0.5 சதம் (1லிட்டர் தண்ணீரில் 5 கிராம்) (அ) கால்சியம் நைட்ரேட் 0.5 சதம் என்ற அளவில் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் இலைவழியாகத் தெளிக்கலாம்.
மெக்னீசியச் சத்து குறைபாடு, அவற்றின் அறிகுறிகள்: மணற்பாங்கான நிலங்களில் மெக்னீசியம் குறைபாடு அதிகம் காணப்படும். மண்ணில் அதிகமான சாம்பல்சத்து இருப்பின் மெக்னீசியச் சத்து பருத்திக்குக் கிடைப்பது தடைபடுகிறது. செடியின் பிஞ்சு காய்ந்து உதிர்கின்றன. சிவப்பு நிற இலைகளில் நரம்புகள் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். இலைகள் முதிரும் முன்பே உதிர்ந்துவிடும். இது இலை சிவப்பு நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்நோய் செடியின் ஆரம்ப வளர்ச்சி காலத்தில் தோன்றினால் மகசூல் குறைவதுடன் பஞ்சின் தரமும் குறைகிறது.
நிவர்த்தி செய்யும் முறை: ஒரு எக்டருக்கு 25 கிலோ மெக்னீசியம் சல்பேட்டை அடியுரமாக இடவேண்டும். மேலும் 2 சத மெக்னீசியம் சல்பேட் கரைசலுடன் (1 லிட்டர் நீரில் 20 கிராம்) 1 சதம் யூரியா கரைசலை (1 லிட்டர் நீரில் 10 கிராம்) சேர்த்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.
துத்தநாகச்சத்து குறைபாடு - அறிகுறிகள்: நிலப்பராமரிப்பு மிகவும் குறைந்து இருப்பதும், அதிகமாக ரசாயன உரங்களை மட்டும் பயன்படுத்துவதும் துத்தநாக குறைபாடு தோன்ற காரணங்கள் ஆகும். பயிர் வளர்ச்சி குன்றி குறைந்த இடைவெளியில் கணுக்கள் தோன்றி இலைகள் ஒரு கொத்து போல தோற்றமளிக்கும். இளம் இலைகளில் நரம்புகளுக்கு இடைப் பட்ட பகுதிகள் வெளிர் மஞ்சள் நிறமாகி பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாகும். இலைகள் தடிமனாகவும், மொரமொரப் பாகவும், உடையும் தன்மையுடனும் இருக்கும். இலை ஓரங்கள் மேல் நோக்கி குவிந்திருக்கும். முதலில் தோன்றிய மொட்டுகளும் பூக்களும் உதிர்ந்துவிடும்.
நிவர்த்தி செய்யும் முறை: ஒரு எக்டருக்கு 50 கிலோ துத்தநாக சல்பேட் என்ற நுண்ணூட்டச் சத்தினை அடி உரமாக இடவேண்டும். மேலும் 0.5 சதம் துத்தநாக சல்பேட் கரைசலை விதைத்த 40வது நாளும் பின் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறையும் தெளிக்க வேண்டும்.
போரான்சத்து குறைபாடு - அறிகுறிகள்: செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். சப்பைகள், பூக்கள் மற்றும் பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். நுனி இலைகள் சிறுத்து மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். முதிர்ந்த இலைகள் தடித்து காணப்படும். இலைக்காம்புகள் வளைந்து நடுப்பாகத்தில் அழுகல் தோன்றும். சப்பைகள் மற்றும் பிஞ்சுகளின் அடிப்பாகத்தில் உள்ள திசு சுவர்கள் உடைந்து தேன் போன்ற திரவம் வெளிப்படும். இதனால் சப்பைகளும் பிஞ்சுகளும் காய்ந்து உதிர்கின்றன. மேலும் காய்கள் சிறுத்தும், வளைந்தும் காணப்படும். இளம் காய்களின் நடுவில் அழுகல் தோன்றும்.
நிவர்த்தி செய்யும் முறை: ஒரு எக்டருக்கு 20 கிலோ போராக்ஸ் என்ற நுண்ணூட்டச் சத்தினை அடி உரமாக இடவேண்டும். மேலும் 0.1 சதம் (1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம்) போராக்ஸ் கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை செடிகளின் மேல் தெளிப்பதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்யலாம். மேலும் இக்கரைசலைப் பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் இலைவழியாக அறிகுறிகள் மறையும் வரை தெளிக்கலாம்.
நுண்ணூட்டச்சத்து இடுதல்: எக்டருக்கு 12.5 கிலோ பருத்தி நுண்ணூட்ட உரக்கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைத்த உடன் (அ) விதைத்த 3 நாட்களுக்குள் நிலத்தில் தூவ வேண்டும்.
வி.கு.பால்பாண்டி,
இணைப்பேராசிரியர்,
ரா.துரைசிங், பேராசிரியர்,
ந.ராஜேஷ், முதுநிலை மாணவர்,
உழவியல் துறை வேளாண்மைக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலையம்,
மதுரை.

